ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை முன்மாதிரியாக செயற்படுத்த முடியும். – கடற்றொழிலாளர்கள் நம்பிக்கை!

Tuesday, November 15th, 2022


~~~~

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை கடற்றொழில் அமைச்சரின் ஒத்துழைப்புடன், முன்மாதிரியான துறைமுகமாக செயற்படுத்தும் ஆர்வத்துடன் பிரதேச கடற்றொழிலாளர்கள் இருப்பதாக ஒலுவில் பலநாள் படகு உரிமையாளர் சங்கத் தலைவர் நஸீர் தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தை கடற்றொழில் அமைச்சில் இன்று(15.11.2022) நடைபெற்ற ஒலுவில் துறைமுகம் தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுமார் 54 மில்லியன் யூரோக்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகத்தினை செயற்படுத்துவதன் ஊடாக பிரதேசக் கடற்றொழிலாளர்கள் பூரணமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குறித்த மீன்பிடித் துறைமுகத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்தி, அந்தப் பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு நிலைபேறான கட்டமைப்பை உறுதிப் படுத்துகின்ற சமகாலத்தில், துறைமுகத்தின் செயற்பாட்டினால் அயல் கிராமங்களுக்கு கடலரிப்பு போன்ற எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இக்கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஒலுவில் பலநாள் படகுகள் சங்கத்தின் தலைவர், ஒலுவில் துறைமுகத்தின் வாயிலை தூர்வாரி துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் பட்சத்தில், துறைமுகத்தினை பராமரிப்பதற்கான செலவை ஈடுசெய்யும் வகையில் வருமானத்தினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை முகாமை செய்யும் பொறுப்பினை பிரதேச கடற்றொழில் சங்கத்திடம் ஒப்படைப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அந்தவகையில், இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், தேவையான மதிப்பீட்டு அறிக்கைகளை தயாரித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முடிவெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும், ஒலுவில் பிரதேச கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு:- கற்றொழில் அமைச்சர் – 15.11.2022

Related posts: