உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு – மிருசுவில் புனித நிக்கொலார் ஆலய விசேட ஆராதனையில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு!

Friday, April 21st, 2023

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 4 ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று, மிருசுவில் புனித நிக்கொலார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்குபற்றினார்.

குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா நித்தியத்தில் இளைப்பாறுதல் பெற வேண்டியும், பாதிக்கப்பட்டவர்உளுக்கு நீதி வேண்டியும் குறித்த ஆராதனை இடம்பெற்றிருந்தது

இலங்கையின் நன்மதிப்பை, கடுமையாக பாதித்த ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் துயரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கடந்த 2019 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை வேளையில், கிறிஸ்தவ மக்கள் வழமையான உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளுக்காக, தேவாலயங்களில் ஒன்றுகூடியிருந்தனர்.

இதன்போது, காலை 8.45 அளவில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியனவற்றில், ஒரே நேரத்தில், தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.

அதேநேரம், கொழும்பின் முன்னணி விருந்தகங்களான ஷெங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் லேக்சைட் உள்ளிட்ட விருந்தகங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட நேரத்துக்குள், இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

500 பேர் வரையில் காயமடைந்தனர். இந்த சம்பவம் இலங்கையில் மாத்திரமல்லாமல், சர்வதேசத்திலும், பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கையின் நன்மதிப்பை கடுமையாக பாதிக்கும் சம்பவமாகவும் மாறியது.

எனினும், இன்றுவரை இந்தத் தாக்குதல்களுக்கு மூல காரணம் யார் என்பது, விசாரணைகளில் கண்டறியப்படவில்லை. உள்நாட்டில், கத்தோலிக்க சபை, இந்த விடயத்தில் நீதி கோரி, சர்வதேசத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு நீதிக்கோரி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் வரை மக்கள் தொடர் அஞ்சலி நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மாற்றுத்திறனாளிகளுக்கான விஷேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
ஒருமித்த நாடா, ஒற்றை ஆட்சியா : மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
எமது மக்களின் நலன்களையும், வளங்களையும் பாதுகாப்பதே எனது ஒரே நோக்கம் - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவ...