ஒருமித்த நாடா, ஒற்றை ஆட்சியா : மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, October 12th, 2018

ஒருமித்த நாடா அல்லது ஒற்றை ஆட்சியா என்ற உண்மை விளக்கத்தை உள்ளபடி எமது மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தினக்குரல் பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் ‘அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் சர்ச்சை” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த செய்தி தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த செய்தியை வாசிக்கின்ற எவரும் நேற்றைய அரசியலமைப்பு வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் நான் ஒற்றையாட்சி என்றே புதிய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட வேண்டும் என வலியுறுத்திக் கூறியதாகவும் ஏனையவர்கள் ஒருமித்த நாடு என்றே வலியுறுத்திக் கூறியதாகவுமே அர்த்தம் கொள்வார்கள்.

அந்த வகையில்தான் இந்தச் செய்தி எழுதப்பட்டிருக்கிறது இது தவறான வகையில் சித்தரித்து எழுதப்பட்ட செய்தியாகும். அல்லது உரிய முறையில் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்ட செய்தியாகும்.

புதிய அரசியலைப்பில் ‘ஏக்கீய ராஜ்ய’ என சிங்களத்தில் குறிப்பிடப்படும்போது அதனை தமிழில் மொழிபெயர்த்தால் ‘ஒற்றையாட்சி’ என்றுதான் வரவேண்டும். அதைவிடுத்து தமிழில் ‘ஒருமித்த நாடு’ என வந்தால் ‘எக்சத் ராஜ்ய’ என சிங்கள மொழியில் வரவேண்டும்.

எனவே சிங்கள மக்களை திருப்திபடுத்துவதற்காக சிங்களத்தில் ஒரு சொற் பிரயோகத்தையும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக தமிழில் ஒரு சொற் பிரயோகத்தையும் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தினையே நேற்றைய அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் நான் தெரிவித்திருந்தேன்.

பெடரல் பார்ட்டி (சமஷ்டிக்கட்சி) என்று சிங்கள மக்களுக்கும் தமிழரசுக் கட்சி என்று தமிழ் மக்களுக்கும் இரட்டை முகம் காட்டுவது போன்ற அரசியல் நாடகங்கள் இனியும் இங்கு அரங்கேற அனுமதிக்க முடியாது.

இதேவேளை அரச ஆவணங்கள் எதுவாகினும் இறுதியில் சிங்கள மொழியில் வகுக்கப்படுகின்ற சட்டதிட்டங்களே சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சிங்கள மொழி ஆவணங்கள் மொழி பெயர்க்கப்படுகின்றனவே அன்றி அவற்றை வைத்துக் கொண்டு சட்ட ரீதியிலான நடவடிக்கைக்குச் செல்ல முடியாது.

இந்த நாட்டில் எந்தவொரு அரச சட்டங்களை எடுத்துக் கொண்டாலும் அவற்றின் இறுதியில் ‘இச்சட்டத்தின் சிங்கள தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நிற்றல் வேண்டும்’ என்றே குறிப்பிடப்படுகின்றது. புதிய அரசியலமைப்பிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற வகையில் இத்தகைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்பதையே நான் நேற்றைய அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் எடுத்துக் கூறினேன். மேற்படி பத்திரிகை தனது செய்தியை திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

சிங்கள மொழியில் ‘ஏக்கீய ராஜ்ய” என்பது சரியாயின தமிழில் ‘ஒருமித்த நாடு” என்பது பிழையாகும். தமிழில் ‘ஒருமித்த நாடு” என்பது சரியாயின் சிங்கள மொழியில் ‘ஏக்கீய ராஜ்ய’ என்பது பிழையாகும்.

ஒருமித்த நாடா அல்லது ஒற்றை ஆட்சியா என்ற உண்மை விளக்கத்தை உள்ளபடி எமது மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.

இதேவேளை தமிழ் பேசும் மக்களின் நிரந்த அரசியல் தீர்விற்கான அடிப்படை அம்சங்களே எமக்கு பிரதானம்.எம்மைப்பொறுத்தவரையில் மத்தியில் உள்ள அதிகாரங்கள் மாநிலங்களுக்கு  பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதையும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு வழங்கப்பட்ட அதிகாரங்கள்  மத்தியினால் எக்காலமும் பறிக்கப்படக்கூடாது என்பதைம்..

மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசின் தேவையற்ற தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதையுமே நான் அரசியல் தீர்வின் அடிப்படை அம்சங்களாக வலியுறுத்த விரும்புகிறேன்.

இது எமது கட்சின் அரசியல் இலக்கின் பிரதான அம்சமாகும் என்பதையும் நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி
மலையகத் தமிழர்களின் சம்பள விவகாரம்: 50 ரூபா அதிகரிப்பும் கனவாகிவிடுமோ? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
முதலீடுகளையும் தொழிலநுட்ப ஒத்துழைப்புக்களையும் வரவேற்கின்றோம் - உலக அமைப்புக்களிடம் அமைச்சர் டக்ளஸ்...