எமது மக்களின் நலன்களையும், வளங்களையும் பாதுகாப்பதே எனது ஒரே நோக்கம் – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022

மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்குடன் கடற்றொழிலாளர் அமைப்புக்களை புனரமைத்து சீர்ப்படுத்தும் கலந்துரையாடல்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்படதுடன், சுருக்கு வலைத் தொழில் மற்றும் கடலட்டை வளர்ப்பு தொடர்பான தற்காலிக அனுமதிகளை நிபந்தனைகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.

அதன்படி, ஒன்றேகால் இஞ்சி கண் அளவை கொண்ட வலைகளைப் பயன்படுத்தி கரையில் இருந்து 7 கிலோ மீற்றருக்கு அப்பால் பகல் வேளையில் சுருக்கு வலைத் தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கிய கடற்றொழில் அமைச்சர், கடலட்டை பிடிப்பதற்கும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினார். 

மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகங்களை சீர்படுத்தி, தேவையான பதிவுகளை மேற்கொண்டு கடற்றொழிலாளர் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

குறிப்பாக மன்னார் பள்ளிமுனை கிராம கடற்றொழிலாளர்கள் உள்ளடங்களாக மாவட்டத்தில் சில பகுதிகளில் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு தொழிலுக்குச் செல்லும் போது கடற்படையினரின் சோதனை நடவடிக்கைகளினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

கடற்கரையில் கடற்றொழிலாளர்களை சோதனை மற்றும் பதிவுகளை மேற்கொள்ள கடற்படையினர் நீண்ட நேரத்தை செலவிடுவதால் தாமதித்தே தாங்கள் தொழிலுக்குச் செல்வதாலும், இதனால் தமது தொழில் நடவடிக்கை தாமதிப்பதாகவும், எனவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தாமதம் இன்றி தொழிலுக்குச் செல்ல கடற்படையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.

மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு பாஸ் மற்றும் ஏனைய பதிவுகள் மற்றும் அனுமதியை பெற்றுக் கொள்ளச் செல்லும் கடற்றொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில அனுமதிகளை பெற்றுக்கொள்ள சென்றால் 5 முதல் 6 நாட்கள் வரை குறித்த அலுவலகத்திற்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளதாகவும், எனவே குறித்த திணைக்களத்தில் மக்களுக்கான பணி மற்றும் தேவைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.

கடற்றொழிலாளர்கள் மாவட்டம் விட்டு வேறு மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும்,குறிப்பாக வேறு மாவட்ட கடற்றொழிலாளர்கள் மன்னாரில் இருந்து மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதனால் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகங்களை சீர்படுத்தி, தேவையான பதிவுகளை மேற்கொண்டு கடற்றொழிலாளர் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்தி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு வெகு விரைவில் உரிய தீர்வை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்த அமைச்சர் எமது மக்களின் நலன்களையும் எமது வளங்களையும்  பாதுகாப்பதே ஒரே நோக்கம் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்தொழிலாளர் சங்கம் மற்றும்,மீனவ கூட்டுறவு பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:


யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவருகின்றது கேபிள் டி.வி. உரிமையாளர்களின் அத்துமீறல்கள் – நாடாளுமன்றில் டக்...
பூநகரியில் மீண்டும் சுற்றுலா நீதிமன்றம் - நீதி அமைச்சரிடம் கடற்றொழில் அமைச்சர் வேண்டுகோள்!
முகமாலையில் சுமார் 316 ஏக்கர் காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஆ...