வடபகுதியில் அத்துமீறிய கடற்றொழில் முறைமைகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும் – செயலாளர் நாயகம்!

Thursday, March 22nd, 2018

வடக்கிலே எல்லை மீறியதும், அத்துமீறியதுமான தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீவிர பொறுப்பு சட்டமூலம், கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமயமாக்கல் சட்டமூலம், வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடலுணவு உற்பத்திகளைப் பொறுத்தமட்டிலும் வடக்கு மாகாணம் இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பினை வழங்க  முடியும். அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்டத்திலே தொழில் செய்யக்கூடிய வளமிக்க கடற்பகுதிகள் இன்னும் பொது மக்களது பாவனைக்காக விடுபட வேண்டியுள்ளன.

வடக்கிலே எல்லை மீறியதும், அத்துமீறியதுமான தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். ஆழ்கடல் தொழிலுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படுவதுடன், 35 அடி மற்றும் அதற்கு மேற்பட்டதான படகுகளுக்கான அரச மானியங்கள் வழங்கப்படல் வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்திலே கடற்றொழில் சார்ந்த பல்கலைக்கழகமொன்று உருவாக்கப்படல் வேண்டும்.

அதே நேரம் இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உத்தியோகப்பூர்வமாக அழைப்புகள் விடுக்க வேண்டும் என்பதுடன், அதற்குரிய வசதிவாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கவும் அரசு முன்வர வேண்டும். அவ்வாறு விரும்பி வருகின்றவர்களிடம் தரகு வருமானங்களை அல்லது கையூடல்களை, கொமிசன்களை எதிர்ப்பார்க்கின்ற அரசியல்வாதிகள், அதிகாரிகளது செயற்பாடுகள் இல்லாதொழிக்கப்படல் வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts: