ஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, June 20th, 2019

அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், அதிகார சபைகள், அரச கூட்டுத்தாபனங்கள் என நான்கு நிலைகளைக் கொண்டிருக்கின்றன. இவை விசேட நாடாளுமன்றச் சட்டத்தினை அனுமதித்துக் கொள்வதன் ஊடாக ஸ்தாபிக்கப்படுகின்றன. எனவே, இவை நேரடியாகவே நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பு கூற வேண்டியவையாகின்றன.

அதேநேரம், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படுகின்ற தனியார் நிறுவனங்கள் அந்தந்த நிறுவனப் பங்கு உரிமையாளர்களுக்கே பொறுப்புக்கூற வேண்டும்.

ஆனால், கணக்காய்வாளர் நாயகத்தின் 2016ஆம் ஆண்டு அறிக்கையைப் பார்க்கின்றபோது அரசாங்கமும் தனது நிறுவனங்களை நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு முயற்சித்து வருவதாகத் தெரிய வருகின்றது.

அந்த வகையில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்ற அரச நிறுவனங்களின் பங்கு உரிமைகள் அரசாங்கத்தின் வசம் இல்லை எனில், அவற்றைக் கணக்காய்வு செய்வதற்கு கணக்காய்வாளர் நாயகத்திற்கு இயலாது எனக் கூறப்படும் நிலையில், இலங்கையில் இருக்கின்ற 452 அரச நிறுவனங்களில் 149 அரச நிறுவனங்கள,; நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ‘எவலன்’ சஞ்சிகை தனது இந்த ஆண்டு மார்ச் மாத இதழில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. இவற்றில் பல அமைச்சரவை அனுமதி இன்றியும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என மேலும் அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது.

இங்கு இன்னுமொரு புதிய போக்கு என்னவெனில், அரச நிறுவனங்களுடன் இணைந்ததான மேலதிக மற்றும் உப நிறுவனங்களை ஸ்தாபிக்கின்ற போக்காகும். இவ்வாறான 100 இணைக்கப்பட்ட நிறுவனங்களும், 19 உப நிறுவனங்களும் செயற்பட்டு வருவதாகவும், மின்சார சபை வசம் இத்தகைய இணைக்கப்பட்ட சுமார் 22 நிறுவனங்கள் இருப்பதாகவும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம் தெரிய வருகின்றது.

இத்தகைய இணைக்கப்பட்ட நிறுவனங்கள் அதன் கூட்டுக்குள் செயற்படுகின்ற ஏனைய நிறுவனங்களுக்கு பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்றபோது, பரிமாற்ற விலை முறைமையொன்றைத் தவிர திறந்த கேள்வி ஒழுங்கு விதிகளைப் பின்பற்றுவதில்லை என்றே தெரிய வருகின்றது.

இத்தகைள இணைக்கப்பட்ட மற்றும் உப நிறுவனங்களில் உயர் பதவிகளை  வகிப்போராக, அநேகமாக தலைமை நிறுவனத்தின் உயரதிகாரிகளே இருப்பதால் ஊழல், மோசடிகளுக்கு இங்கே இடமில்லை எனக் கூற முடியாது என்பதையும் அவதானத்தில் கொள்ள வேண்டும்.

இத்தகைய அரச நிறுவனங்களை இத்தகைய நட்டங்களிலிருந்து பாதுகாப்பதற்கு ஒரு வழி என்ற வகையில் ‘தொமசெக்” மொடல் பற்றிக் கூறப்படுகின்றது. இது 1970களில் சிங்கப்பூர் நாட்டில் கொண்டு வரப்பட்டது.  அதாவது சிங்கப்பூர் சுதந்திரமடைந்ததன் பின்னர் உருவான பாரிய அபிவிருத்தியின்பால் அந்நாடு நுழைகின்ற தருவாயில் தமது அரச தொழில் முயற்சிகளை மிகக் கூடிய வினைத்திறன் மிக்கதாக ஆக்கிக் கொள்வதற்கென இந்த ‘தொமசெக்’ என்கின்ற தீர்வு கொண்டு வரப்பட்டது.

சிங்கப்பூர் நாட்டின் அரச தொழில் முயற்சிகளின் சொத்துக்கள் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒரு சுயாதீன நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதற்கென அவர்கள் 1972ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நிறுவனச் சட்டத்தின்கீழ் ‘தொமசெக் ஹோல்டிங்” என்ற சுயாதீன நிறுவனத்தை ஸ்தாபித்துக் கொண்டனர்.

இந்த நிறுவனம் சுயாதீனமாக இருந்தாலும், ஏனைய நிறுவனங்களைப் போல் பணிப்பாளர் சபை ஒன்றின் மூலமாக நிர்வகிக்கப்படுகின்றது. இதன் முழுமையான உரிமை அரசாங்கத்தையே சாருகின்றது.

இது குறிப்பாக, அரச தொழில் முயற்சிகளை இலாபம் ஈட்டுகின்ற துறைகளாக மாற்றி அமைப்பதற்கென உருவாக்கப்பட்டது. எனினும், இலங்கையைப் பொறுத்த வரையில் அரச தொழில் முயற்சிகளில் பல சமூக நலன்புரி ஏற்பாடுகள் சார்ந்தும் இருப்பதால், அவற்றினை இலாபம் ஈட்டுகின்ற துறைகளாக மாற்றி அமைக்கின்றபோது, இத்தகைய நலன்புரித் திட்டங்கள் யாவும் அகற்றப்பட வேண்டிய நிலை உருவாகும்.

அத்துடன், ஆளணிகளை அதிகளவில் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படாது என்பதால், இலங்கை அரச நிறுவனங்களில் மிக அதிகளவாக இருக்கின்ற ஆளணிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டிய நிலையும் உருவாகும்.

இத்தகைய நிலைமைகளை இலங்கையில் எந்தவொரு அரசாங்கமும் விரும்பாது என்ற வகையில், இந்த ‘தொமசெக்” மொடல் என்பது தற்போதைய நிலையில் இலங்கைக்கு சாத்தியமில்லை என்றாலும், அதனைக் கொண்டு வருவதால் – உரிய முறையில் நியமனங்கள் வழங்கப்பட்டு, செயற்படுத்துவதால், அரச தொழில் முயற்சிகளை இலாபம் மிக்கதாக மாற்றியமைக்க முடியும் எனக் கூறப்படுகின்றது.

எல்லாவற்றையும் இலவசமாகவே எதிர்பார்க்கின்ற மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற இந்த நாட்டில், அந்த மக்களை அத்தகைய நிலைக்குத் தொடர்ந்தும் தள்ளிவிடுகின்ற மாறி, மாறி ஆட்சிபீடம் ஏறுகின்ற அரசாங்கங்கள் இருக்கும் வரையில், அந்த அரசாங்கங்களின் ஆதரவாளர்களும், சொந்த, பந்தங்களும் பதவிகளில் அமர்த்தப்படும் வரையில், இந்த நாட்டில் அரச தொழில் முயற்சிகள் வெற்றியடையப் போவதில்லை என்றே கூற வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் செயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும், அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Related posts: