சிங்கப்பூருடன் விஷேட வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்லவேண்டியதன் அவசியம் என்ன? – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, May 23rd, 2018

இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கென விஷேட வரி விதிப்புகள் மேற்கொள்ளப்படாதிருக்கும் நிலையில், அந்த நாட்டுடன் விஷேட வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்ல வேண்டிய பாரிய அழுத்தங்கள் என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத் திட்டத்தின் கீழான இரு கட்டளைகள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரினால் இந்த கட்டளைகள் இந்தச் சபையிலே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த நாட்டில் மிக அண்மைக்காலமாக பெரும் குழப்ப நிலையினைத் தோற்றுவித்துள்ள ‘சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம்’ தொடர்பிலும் எனது கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ள சந்தேகங்கள் இந்த நாட்டிலே மருத்துவ அதிகாரிகள் மத்தியிலும் ஏற்பட்டதனால், கடந்த 17ஆம் திகதி மருத்துவர்கள் மேற்கொண்டிருந்த ஒரு நாள் பணிப் பகிஸ்கரிப்பு காரணமாக இந்த நாட்டிலே வடக்கு, கிழக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலுமுள்ள நோயாளர்கள் பெரும் சிரமங்களை அனுபவித்ததை, பாதிக்கப்பட்டதை எவராலும் மறந்துவிட இயலாது.

நோயாளிகளின் தரப்பிலிருந்து சிந்திக்கின்ற எவருக்கும், இந்த பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டிருந்த மருத்துவர்கள்மீது கோபம் வரலாம். என்றாலும், எந்த ஒரு விடயம் தொடர்பிலும், உரிய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடாமல், இத்தகைய சந்தேகங்களை ஏற்படுத்திவிட்டு, அந்த சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தரப்பினர் – அதுவும் மக்களது அன்றாட, அடிப்படை – அதாவது மக்களது உயிருடன் சம்பந்தப்பட்ட தொழிற்துறை சார்ந்த தரப்பினர் பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டால்தான், குறித்த தரப்புகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்கின்ற நிலையை நீங்கள் உருவாக்கி, அதனை ஒரு வழமையாகவே முன்னெடுத்து வருகின்ற நிலையில், இத்தகைய பணிப் பகிஸ்கரிப்புகள் இந்த நாட்டில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகியுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஏற்கனவே ‘எட்கா’ ஒப்பந்தம் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையினையும், அதன் காரணமாக எமது மக்கள் சந்தித்திருந்த பல்வேறு பாதிப்புகள் குறித்தும் நாம் மறக்கவில்லை. அந்த நிலையிலிருந்து மீண்டு வரும் நிலையில், இப்போது இன்னொரு குழப்பத்தினையே இந்த சிங்கப்பூர் ஒப்பந்தம் இந்த நாட்டில் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக மருத்துவர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதன் பின்னர்தான், அது குறித்த தெளிவுபடுத்தல்களை நீங்கள் மேற்கொள்கின்றீர்கள். இந்த நிலையில், ஏன் இதனை முன்கூட்டியே செய்திருக்கக் கூடாது? என்ற கேள்வி எழுகின்றது.

இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கென விN~ட வரி விதிப்புகள் மேற்கொள்ளப்படாதிருக்கும் நிலையில், அந்த நாட்டுடன் விN~ட வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்ல வேண்டிய பாரிய அழுத்தங்கள் என்ன? என்ற கேள்வியே இன்று பலராலும் முன்வைக்கப்படுகின்றது.

அதேநேரம், மேற்படி ஒப்பந்தத்திற்கு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்ற அமைச்சரவை அனுமதி தொடர்பிலும் சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன. மேற்படி ஒப்பந்தம் காரணமாகப் பாதிக்கப்படக்கூடியவர்களாகக் கூறப்படுகின்ற தொழிற்துறைகள் சார்ந்த தொழிற் சங்கத்தினருக்கோ, கைத் தொழிலாளர்களுக்கோ ஒப்பந்தம் தொடர்பில் அறிவுறுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இத்தகைய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றபோது, உரிய தரப்பினர் அனைவரும் அறிவுறுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை நான் மீண்டும் இந்த சபையிலே வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts:

காணாமல் போனோர் அலுவலகங்கள் மீது நம்பிக்கை இல்லை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
தமிழர்களை அரசியல் தோல்விக்குள் தள்ளிவிடவே கூட்டமைப்பு முயற்சிக்கின்றது - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
மக்கள் தமது நலன்களுக்காகவே என்னை தொடர்ச்சியாக நாடாளுமன்றம் அனுப்பி வருகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் சுட...

வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கு இருக்கின்ற வழிமுறைகளில் தடைகள் ஏற்படுத்தப்படக் கூடாது - டக்ளஸ் எம்...
ஒருவருக்கு இருக்கும் பெயர் இன்னெருவருக்கும் இருக்கும் என்பதை தேர்தல் ஆணைக்குழு அறிந்திருக்கவில்லையா...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை - அவசியமான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ...