வழங்கப்படும் திட்டங்களை சரியாக கையாண்டு நீர்வள தொழில்சார் குடும்பங்கள் பயனடைய வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Monday, February 17th, 2020

நீர்வள தொழில்சார் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை வளமானதாக மாற்றும் நோக்குடன் ஆரம்பிக்கப்படுகின்ற கடனுதவித் திட்டத்தினை நீர்வள தொழில்சார் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் ஆர்வமுடனும் சரியான வகையிலும் கையாண்டு பயனடைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.

நீர்வள தொழில்சார் மாதர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர்வள தொழில்துறைசார்ந்த மாதர் அமைப்புக்களை உருவாக்கும் ஆரம்ப வைபவம் இன்று(17.02.2020) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தலைமையுரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் –

யாழ்ப்பாணம், கிளிநொச்சி புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள குறித்த கடன் திட்டத்தினை நீர்வள தொழில்சார் பெண்கள் சரியாக பயன்படுத்துவார்களாயின் எதிர்காலத்தில் பாரிய கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ளத் தேவையான வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மேற்கொண்ட இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது இந்திய அரசாங்கத்திடம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அவை செயற்படுத்தப்படுகின்றபோது மேலும் பல வாய்ப்புக்களை மக்கள் பெற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியிட்டார்.

குறித்த கடன் திட்டத்திற்காக உருவாக்கப்படவுள்ள மாதர் அமைப்புக்களுக்கு முதற்கட்டமாக தலா ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படவுள்ளது. நிபந்தனைகளுக்கு அமைய வழங்கப்படவுள்ள குறித்த கடன் தொகை சரியான முறையில் மீளச் செலுத்தி முடிக்கப்படுமாயின் இரண்டாவது கட்டமாக இரண்டரை இலட்சம் வழங்கப்படவுள்ளதோடு குறித்த தொகையில் சரியான முறையில் மீளச் செலுத்தப்படுமாயின் 5 இலட்சம் ரூபாய் வரை கடன் தொகையை அதிகரிப்பதற்கும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்றைய ஆரம்ப நிகழ்விற்கு வருகை தந்திருந்த யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட நீர்வளத் தொழில்சார் பெண்கள் மத்தியில் கிராமங்கள் ரீதியான அமைப்புக்கள் கட்டியமைக்கப்பட்டு அவற்றிற்கு முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இன்றைய நிகழ்வில் சிறப்பு விருத்தினராக கலந்துகொண்டு உரையாற்றி வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எம்.எஸ். சார்ள்ஸ் அவர்கள் சுமார் ஐம்பது வீதத்திற்கு மேற்பட்ட பெண்களை கொண்டுள்ள வடக்கு மாகாணத்தில் இவ்வாறான பெண்கள் சார் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றமையை வரவேற்றதோடு இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான திட்டங்களின்போது கடந்த 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்ற வகையில் இவ்வாறான திட்டங்களின்போது வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு ஏனைய பிரதேசங்களைவிட சிறப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டும்.

அத்துடன் வடக்கில் வாழ்ந்து வருகின்ற பெண்கள் மிக்கந்த பிரயாசை உயைவர்களாக காணப்படுகின்றார்கள் என்று குறிப்பிட்ட வடக்கு ஆளுநர் அவர்கள் அண்மைக்காலமாக தான் மேற்கொண்டு வருகின்ற கள விஜயங்களின்போது வடக்கில் உருவாக்கப்படுகின்ற உற்பத்திகளுக்கு சிறந்த வாய்ப்பு இல்லாமல் இருப்பதை அவதானிப்பதாகவும் அவ்வாறான சந்தை வாய்ப்புக்களையும் நவீன தொழில் நுட்ப வசதிகளையும் உருவாக்கிக் கொடுக்கும் பட்சத்தில் வடக்கு மக்களின் வாழ்வாதாரம் மேலும் விரைவாக வளர்ச்சியடையும் எனவும் தெரிவித்;தார்.

குறிப்பாக எதிர்ப்படுகின்ற சவால்கள் எல்லாவற்றுக்கும் முகங்கொடுத்து மக்கள் நலத்திட்டங்களை செயற்படுத்தும் ஆளுமையுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தா அவர்கள் எதிர்காலத்திலும் இதுபோன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

Related posts: