அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை சங்கத்திலிருந்து நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிபு!

Thursday, September 14th, 2023

யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டிச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு அரச நிறுவனங்களான பிரதேச சபை மற்றும் மாநகர சபைகளில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை சங்கத்திலிருந்து நீக்குமாறு கடற் தொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா பணிபுரை விடுத்துள்ளார்.

கடந்த யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் முச்சக்கர வண்டிகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுவதுடன் அனேகமான முச்சக்கர வண்டிகள் உரிய பதிவுகளை மேற்கொள்ளவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவானர் சிவபாலசுந்தன் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர், யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டிச் சங்கத்தில் இருந்து குறித்த கூட்டத்துக்கு வருகை தந்தார்களா என கேள்வி எழுப்பிய நிலையில் அதன் தலைவர் பின்வருமாறு கூறினார்.

எமது சங்கத்தில் 1997 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் சுமார் 1300 முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.

இதன் போது அமைச்சர் மீதமுள்ள முச்சக்கர வண்டிகள் ஏன் மீட்டர் பொருத்த வில்லை? அவர்கள் தமது பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த தலைவர், சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை  ஆகிய பிரதேசங்களில்  எமது சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்டதாகவும் ஏனைய இடங்கள் தொடர்பில் ஆராய வேண்டும் என குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் கட்டாயம் பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனத்தில்  பதிவு செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கி உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துங்கள்.

இல்லாவிட்டால் சங்கத்திலிருந்து அவர்களது பெயரை நீக்கி விடுமாறு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன், ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு மாகாண மேலதிக செயலாளர் இளங்கோவன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் சிறி மோகன் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னிலையில் கட்சியின் சார்பில் தெரிவான உள்ளூராட்சி  மன்ற உறுப...
தேச விடியல் நேசர் அமரர் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரிய...
தனியார் தொழில் முயற்சியாளர்களினால் பள்ளிக்குடாவில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை பதனிடும் நிலையத்தை சம்...