எமது கோரிக்கையை ஏற்று இரணைதீவில் குடியேற அனுமதித்ததை வரவேற்கின்றேன்- டக்ளஸ் எம்.பி

Wednesday, May 16th, 2018

இரணைதீவு மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாகவும், அவர்கள் சார்பாக நாம் விடுத்த கோரிக்கையை ஏற்றும் இரணைதீவு மக்கள் தமது சொந்த நிலங்களில் மீளவும் குடியமர்வதற்கான அனுமதியை வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் அதற்கு துரிதகதியில் செயல்வடிவம் கொடுத்த அமைச்சர் சுவாமிநாதன் அவர்களுக்கும், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளருக்கும், கடற்படைத் தளபதிக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இரணைதீவில் பூர்வீகமாக வாழ்ந்துவந்த மக்கள் மீண்டும் அவர்களது சொந்த நிலத்தில் மீளக்குடியமரவும், அங்கிருந்து தமது தொழில்களில் ஈடுபடவும்,அவர்களின் கால் நடைகளை பராமரிக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும்,நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு போன்ற தீவுகளில் மக்கள் குடியிருக்கும் அதேவேளை பாதுகாப்புக் கடமைகளுக்காக கடற்படையினர் இருக்கின்றனர். அதுபோல் இரணைதீவிலும் அங்கு வாழ்ந்து வந்த மக்களை மீண்டும் குடியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று முன்னரும் பல தடவைகள் கோரிக்கைவிடுத்திருந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடமும், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்களிடமும் நாடாளுமன்றத்தில் செயலாளர் நாயகம் அவர்கள் கேள்வி எழுப்பியபோது,மே மாதம் 15 ஆம் திகதி இரணைதீவுக்கு உயர்மட்ட குழுவொன்றை அனுப்பி அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைக் காண்பதாக ஜனாதிபதியின் சார்பில் பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக பதிலளித்திருந்தார்.

அதற்கமைவாக நேற்றைய தினம் (15) இரணைதீவுக்கு வருகை தந்த உயர்மட்டக் குழுவினர் அங்கு நிலைமைகளை ஆராய்ந்ததுடன், அந்த மக்கள் தமது பூர்வீக நிலத்தில் தாம் மீளக்குடியமர்வதற்கான அனுமதியையும் வழங்குவதாக அறிவித்திருந்தனர்.

அந்தவகையில் சுமார் 26 வருடங்களின் பின்னர் இரணைதீவு மக்களை அவர்களது பூர்விக நிலங்கயளில் மீள குடியமர அனுமதியளிப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்திருப்பதானது,நீண்டகாலமாக யுத்தத்திற்கும் அதனால் இடப்பெயர்வுக்கும் உள்ளாகி வாழ்ந்துவந்த இரணைதீவு மக்களுக்கு மீண்டும் அவர்கள் சொந்த நிலத்தில் வாழ்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதற்காக் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமைச்சர் சுவாமிநாதன் அவர்களுக்கும், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளருக்கும், கடற்படைத் தளபதிக்கும் எமது மக்களின் சார்பாகவும் நாம் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்; என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதேவேளை மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டிற்கமைய மக்கள் நலன் கருதி நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இன்னமும் யாழ். குடாநாட்டில் மீள ஒப்படைக்கப்படாமல் இருக்கும் எமது மக்களின் சொந்த வாழ்விடங்களையும் உரியவர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Related posts: