அகிம்சை குரலுக்கு மதிப்பளித்திருந்தால் இலங்கை இரத்தம் தோய்ந்த தீவாக மாறியிருக்காது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!
 Saturday, December 10th, 2016
        
                    Saturday, December 10th, 2016
            சரியோ தவறோ அகிம்சை குரல்களுக்கு அன்றைய அரசுகள் மதிப்பளித்திருந்தால், இலங்கைத்தீவு இரத்தம் தோய்ந்த ஒரு தீவாக மாறியிருக்காது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் வரவு செலவு திட்ட நிறைவுநாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவிதுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
2017 ஆண்டுக்குரிய வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு நான் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு துணைப் பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறேன்.
இவ்வரவு செலவுத்திட்டத்தில் பல வரப்பிரசாதங்கள,; நிவாரணங்கள் நாடளாவிய ரீதியில் பகிரப்பட்டிருக்கிறது. அதை வரவேற்கின்ற அதே நேரத்தில் அதில் இருக்கக்கூடிய குறைபாடுகள், மேலதிக தேவைகள் தொடர்பில் குழுநிலை விவாதத்தில் சகல அமைச்சுகள் தொடர்பிலும் முன்வைத்திருக்கின்றேன்.
கௌரவ நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க அவர்கள் அவற்றைக் கருத்தில் எடுத்துக்கொள்ளுவார் என்று நம்புகின்றேன்.
இதே வேளை அடிப்படைப் பிரச்சினையாகவும், பிரதான பிரச்சினையாகவும் தமிழ் பேசும் மக்கள் முகங்கொடுத்து வரும் அரசியலுரிமைப் பிரச்சினை குறித்தும் சில விடயங்களை நான் மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறேன்.
அழகிய எங்கள் இலங்கைத் தீவானது இங்கு வாழும் அனைத்து இன மத சமூக மக்களுக்கும் சொந்தமானது.
பெரும்பான்மை என்றும் சிறுபான்மை என்றும் இங்கு பேதங்கள் எவையும் இருப்பதை நாகரிக உலகம் ஒரு போதும் ஏற்காது.
அன்னியர்களின் காலனியாதிக்கத்தின் கீழ் நாம் அடிமைப்பட்டுக் கிடந்த போது, ஒன்றுபட்ட இலங்கைத்தீவின் அழகை இரசித்து பாடியவர்கள் தமிழ் கவிஞர்களே.,
துஞ்சு மேதி சுறாக்களைச் சீறச்
சுறாக்களோடிப் பலாக்கனி கீறி
இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய் விழும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே”
என்று பாடியவனும் தமிழ் கவிஞனே.
வீடு தோறும் இரப்பவர்க் கெல்லாம்
மாணிக்கம் அள்ளிப் பிச்சை கொடுத்திடும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே.
என்று பாடியவனும் தமிழ் கவிஞனே.
இவ்வாறு அழகிய எங்கள் இலங்கைத் தீவையும் ஒன்றுபட்ட இலங்கைத் தேசியத்தையும் தமிழ் பேசும் மக்களும் அளவு கடந்து நேசித்து வந்தனர்.
ஆனாலும் 1948 இல் இருந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த இந்த நாட்டின் கடந்தகால அரசுகள் யாவும் தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகவே புறந்தள்ளி வந்திருக்கிறார்கள்.
இதனால் எமது பாரம்பரியத் தமிழ்த் தலைமைகள் அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அந்த அகிம்சைப் போராட்டமானது சரியான முறையில் தொடர்ச்சியாக, உறுதியாக முன்னெடுக்கப்பட்டது என்று நான் கூற வரவில்லை.
சரியோ தவறோ அந்த அகிம்சைக் குரல்களுக்கு அன்றைய அரசுகள் மதிப்பளித்திருந்தால்,
இலங்கைத்தீவு இரத்தம் தோய்ந்த ஒரு தீவாக மாறியிருக்காது.
தவிர்க்க முடியாத சூழல் ஒன்றில் நாமும் அன்று ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்.
ஆனாலும் எமது உரிமைப் போராட்டத்தைச் சிங்கள சகோதர மக்களுக்கு எதிரானதாக நாம் ஒரு போதும் வடிவமைத்திருக்கவில்லை.
அன்றைய சூழலில் தென்னிலங்கையில் இருந்து சாதகமான ஒரு சமிஞை காட்டப்பட்டிருந்தால் முழு இலங்கை தழுவிய அரசியல் சமூக மாற்றத்திற்காகவே நாம் அன்று ஒன்றுபட்டு போராடியிருப்போம்.
எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எமது அரசியல் இலக்கு நோக்கிய ஓர் ஏணிப்படியாக நாம் ஏற்றுக்கொண்டவர்கள்.
அதிலிருந்து எமது ஆயுதப்போராட்ட பாதையில் தொலை தூர நோக்கில் நாம் சந்தி பிரித்து ஜனநாயக வழிமுறையில் நாம் நடக்கத் தொடங்கியவர்கள்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இங்கு ஆயுதங்கள் மௌனித்திருக்க வேண்டும். அதை சரியான முறையில் ஏற்று நடை முறைபடுத்தியிருக்க வேண்டும்.
அன்றில் இருந்து அரசியல் தீர்வை அடைவதற்காக அடுத்தடுத்துக் கனிந்து வந்த வாய்ப்புகள் அனைத்தையும் சக தமிழ் இயக்க, மற்றும் கட்சித் தலைமைகள் சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை.
கௌரவ சபாநாயகர் அவர்களே!…
தமிழ் பேசும் மக்கள் நியாயமான அரசியல் தீர்வொன்றையே விரும்புகிறார்கள். இந்த நாட்டில் சமவுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாகவே வாழ விரும்புகிறார்கள்.
ஆனாலும் அரசியலுரிமை பிரச்சினையை தீராப் பிச்சினையாக்கி, அதன் மூலம் எமது மக்களை உசுப்பேற்றி, தமது அடங்காத நாற்காலிக் கனவுகளின் ஆசைகளுக்காக மட்டுமே சிலர் இங்கு அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
ஆகவே, பொறுப்பற்ற தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வை விரும்பவில்லை என்பதற்காக தமிழ் பேசும் மக்களும் அரசியல் தீர்வை விரும்பவில்லை என்று அரசாங்கம் கருதி விடக்கூடாது.
பொறுப்பற்ற தமிழ் அரசியல் கட்சி தலைமைகளின் இதுவரை கால வரலாற்றுத் தவறுகளுக்காக பொறுப்புள்ள ஓர் தமிழ் அரசியல் கட்சித் தலைமை என்ற வகையில் இந்த சபையின் ஊடாக பகிரங்கமாகவே எமது மன வருத்தத்தைத் தெரிவிக்க விரும்புகிறோம்.
கடந்த கால கசப்பான வரலாறுகளுக்காக தமிழ் பேசும் மக்கள் அரசியல் தீர்வு விடயத்தில் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதையே நான் இந்த சபையில் வினையமாகக் கேட்டுக்கொள்கிறேன்.
இதேவேளை புலிகளின் தலைமை அற்றுப்போய் விட்ட இந்த சூழலில் தமிழ் பேசும் மக்களுக்கு இனி பிரச்சினைகள் எதுவும் இல்லை என்ற தொனிப்பொருளில் சிலர் பேச முற்படுகிறார்கள்.
புலிகளின் தலைமை தனித்தமிழ் இராட்சியமொன்றை இலக்காக கொண்டிருந்த நிலையிலும்,… அன்றில் இருந்தே நான் அடிக்கடி ஒரு விடயத்தை வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
புலிகளின் தலமையின் பிரச்சினை என்பது வேறு! தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை என்பது வேறு!!
இதையே நான் அன்று தொலை தூரப்பார்வையில் கூறியபோது பலரும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.
இன்று புலிகளின் தலைமை இல்லை என்ற காரணத்தை வைத்துக்கொண்டு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையும் முடிவிற்கு வந்து விட்டதாக யாரும் கருதிவிடக்கூடாது.
இதை நான் இந்தச் சபையில் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நான் பல்வேறு தென்னிலங்கை அரசியல் தலைவர்களோடும் பழகியிருக்கிறேன். அவர்களது மன மாற்றங்களை நான் அவதானித்து வந்திருக்கிறேன்.
யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதே அன்றி, தமிழ் மக்களின் மனங்கள் முழுமையாக வென்றெடுக்கப் படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அவர்கள் தெரிவித்திருப்பது மன மாற்றங்களின் அடையாளமே.
அதுபோல்,.. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழ் நூலக எரிப்புக் குறித்துத் தனது மனவருத்தத்தைப் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கிறார்.
ஆகவே இன்று யாழ் நூலகம் புதுப்பொலிவோடு எழுந்து நிமிர்ந்து நிற்பதையிட்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மகிழ்ந்திருப்பார் என்றே நான் நம்புகிறேன்.
ஆனாலும் தெற்காசியாவிலேயே சிறந்ததொரு யாழ் நூலகத்தை நாம் அன்று தமிழ் பேசும் மக்களின் அறிவின் சின்னமாக புனரமைத்த போது,…
அது அழிவின் சின்னமாகவே இருக்கட்டும் என்று அதற்குத் தடையாக இருந்த பொறுப்பற்ற தமிழ்த் தலைமைகள் எவையும் தமது தவறை எண்ணி மனவருத்தத்தை இதுவரை தெரிவித்ததில்லை.
கௌரவ சபாநாயகர் அவர்களே!…
இன்று சில மாற்றங்கள் அதிசயமாகவே நடந்திருக்கின்றது. நாம் முன்னெடுத்து வந்த எமது மதிநுட்பச் சிந்தனையின் இணக்க அரசியல் வழி நோக்கி சக தமிழ்க் கட்சித் தலைமைகளும் வந்திருக்கின்றன.
காலம் தாழ்த்தி வந்திருந்தாலும் வரவேற்கிறோம்.
ஆனாலும் வழிமுறைக்கு வந்தவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறிமுறை நோக்கியும் வரவேண்டும்.
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
தமிழ் பேசும் தரப்பு தாம் பெற்ற அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் நல்லெண்ண முயற்சிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.
பதின் மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதில் ஆரம்பித்து,…
அதிலிருந்து எமது அரசியல் இலக்கை நோக்கிச் செல்வதே எமது யதார்த்த பூர்வமான அரசியல் நிலைப்பாடு என்பதையே நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்திருந்தாலும்,….
இன்று அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய அரசியல் யாப்பின் ஊடாகத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கும் முயற்சிகளுக்கு நாம் என்றும் பக்க பலமாகவே இருப்போம்.
எந்த வழிமுறையாக இருப்பினும் சாத்தியமான வழிமுறையில் எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும்.
பாரம்பரிய தமிழ்த் தலைவர்களான தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகம் மற்றும் ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றோர் எமது மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் தேசியத் தலைவர் அமிர்தலிங்கம் போன்றோரிடம் விட்டுச் சென்றது போல்,…
தேசியத் தலைவர் அமிர்தலிங்கம் போன்றோர் ஆயுதப்போராட்டத் தலைமைகளிடம் விட்டுச் சென்றது போல்,…
நாமும் எமது மக்களின் அரசியல் பிரச்சினைகளை அடுத்த சந்ததியிடம் சுமையாகச் சுமத்திவிட்டு செல்ல நான் விரும்பவில்லை.
எமது சந்ததியின் காலத்திலேயே தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவிதி மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அதற்காக நான் தேர்தலுக்காக அன்றி எமது மக்களின் உரிமையுள்ள தேசத்திற்காக, சக தமிழ்க் கட்சிகளை நோக்கி நேசக்கரம் நீட்டுகிறேன்
அரசாங்கத்தை நோக்கியும், அனைத்துத் தென்னிலங்கை அரசியல் கட்சிகளை நோக்கியும்,…
முஸ்லிம், சிங்கள சகோதர மக்களை நோக்கியும் எனது தோழமைக் கரங்களை நீட்டுகிறேன்.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்குக் குரல் கொடுக்கும் நாம் தென்னிலங்கை மக்களின் பொருளாதார மீட்சிக்காகவும் குரல் கொடுப்போம்!
நாம் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ தயாராக இல்லை.
நாம் தமிழர்களாகவும் அதே நேரம் இலங்கையர்களாகவுமே வாழ விரும்புகின்றோம்.
ஒர் இன சமூகத்தின் உரிமை என்பது இன்னொரு இனத்தின் உரிமைகைளைப் பறிப்பது என்பது அர்த்தமல்ல. மாறாக சமத்துவ உரிமையே சகல இனங்களினதும் உயரிய வாழ்வாகும்!
மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!!
நாம் செல்லும் பயணம் வெல்லும்!
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        