சீசல்ஸ்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர் விவகாரம் – அமைச்சர் டக்ளஸ் – சீசல்ஸ் நாட்டிலுள்ள இலங்கை தூதுவர் கலந்துரையாடல்!

Tuesday, February 6th, 2024

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு தற்போது சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘லொரென்சோ புத்தா-04’ ஆழ்கடல் மீன்பிடிப்படகு மற்றும் மீனவர்கள் ஆறு பேரையும் துரிதாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.

‘லொரென்சோ புத்தா-04’ ஆழ்கடல் மீன்பிடிப் படகையும் அதிலிருந்த மீனவர்களையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தை கடற்றொழில் அமைச்சில் இன்று (06.02.2024) இடம்பெற்றது.

இதன்போது படகின் உரிமையாளர் பிரான்சிஸ் மில்ரோய் பெரேரா அமைச்சரிடம் தெரிவிக்கையில்,

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தமது படகு மற்றும் மீனவர்கள் தற்போது சீசெல்ஸ் கடற்படையினரால் மீட்கப்பட்டு அந் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் படகை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு எரிபொருள் தேவையெனவும் அதற்கு 15 இலட்சம் ரூபா செலவாகும்.  அந்தளவு பெரிய தொகையை செலவிடும் நிலையில் தனக்கு நிதி வசதியில்லை. படகிற்காக வங்கியில் பெற்ற கடனுக்காக மாதாந்தம் 7 இலட்சம் ரூபாவை செலுத்தி வருவதாகவும் அதனால் அரசாங்கம் தனக்கு நிவாரணம் வழங்க வேண்டு மெனவும் தெரிவித்தார்.

அத்துடன் மீனவர்களுக்கு தேவையான உணவைப் படகில் சமைத்துக் கொள்வதற்கு சீசெல்ஸ் அதிகாரிகள் அனுமதிப்பதில்லையெனவும் அதனை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான நிதி வசதி மீனவர்களிடம் கிடையாதெனவும் தெரிவித்தார்.

இதன்போது உடனடியாக சீசெல்சில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட  அமைச்சர், குறித்த மீனவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் படகின் உரிமையாளரருக்கு வங்கியிலிருந்து மேலதிகமாக கடன் பெற்றுக் கொடுப்பதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தமது ஊடகச் செயலாளர் நெல்சன் எதிரிசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியதுடன் படகில் உள்ள மீன்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வங்கிக் கடனை அடைப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு படகின் உரிமையாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

இச் சந்திப்பில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த, அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி, கடத்தப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

‘லொரென்சோ புத்தா-04’ மீன்பிடிப் படகு கடந்த 27ஆம் திகதி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட நிலையில் கடற்றொழில் அமைச்சர், இராஜாங்க அமைச்சர், அமைச்சு, கடற்றொழில் திணைக்களம் மற்றும் இலங்கை கடற்படை  அகாரிகள் துரிதமாக செயற்பட்டு அவர்களை மீட்குமாறு சீசெல்ஸ் அரசாங்கத்துக்கு அறிவித்தனர்.  அதன் பிரகாரம் சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்பு படையினர் உடனடியாக செயற்பட்டு கடந்த 30ஆம் திகதி படகையும் மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

000

000

Related posts:


டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கமைவாக கிட்டங்கிப் பாலத்தை அமைப்பதற்கு இடைக்காலத் திட்டம் தயார்...
விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத் தூதருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பாராட்டு!
எமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர மொழிகளிலும் தேர்ச்சியுற்றவர்களாக உருவாக வேண்டும் - டக்ளஸ் எம்.பி தெ...