குறுகிய அரசில் சுயலாபமே குடிநீர் பிரச்சினை தீரா பிரச்சினையாக தொடர்வதற்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, November 18th, 2023

எமது பகுதியினைப் பொறுத்தவரையில், குடிநீர் பிரச்சினை என்பது நீண்டகால பிரச்சினையாகவே தொடர்ந்து வருகின்றது. இதற்கொரு தீர்வாக நாம் இரணைமடு குளத்தின் உயரத்தினை அதிகரித்து, கிளிநொச்சி மாவட்ட மக்களது குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ததன் பின்னர், கடலுக்கு விடப்படுகின்ற எஞ்சிய நீரை யாழ்ப்பாண மக்களது குடிநீருக்கென பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டிருந்தோம்.

எனினும், சில சுயலாப அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காரணமாக அத்திட்டமானது கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இவ்விடயம் தொடர்பில் மேலும் சில திட்டங்களையும் நாம் முன்வதை;திருந்தோம். குறிப்பாக, பாலி ஆற்றுத் திட்டம், பூநகரி குளத் திட்டம் என்பனவும் அவற்றில் அடங்கும். இதில் ஒரு திட்டமான பாலி ஆற்றுத் திட்டத்தின் ஆரம்பப் பணிகளுக்கென இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

மேலும், மகா நகரங்களை அண்டியதும், சுற்றுலா பயண நகரங்களை அண்டியதுமான ஸ்ரேசன் பிளாசா எனும் ரயில் நிலைய நகரங்களில் யாழ்ப்பாணமும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன். புதிய முதலீட்டு நகரங்களில் யாழ்ப்பாண நகரமும் இணைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

இதேபோன்று இந்திய முதலீட்டாளர்களுடன் இணைந்து, திருகோணமலையை நாட்டின் முக்கிய பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்வதற்கும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: