தேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர் ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்…… – தொடர். 03

Monday, March 21st, 2016

பழி சுமக்கச் செய்த தார்மீகப் பொறுப்பு!

காயமடைந்ததால் இரத்தம் வழிந்தோடியது, வாயை ஒரு கையால் பொத்திக் கொண்டும் மறு கையால் அந்த வன்முறைக் கும்பலை நோக்கி அமைதியாக இருக்குமாறு சைகை செய்து கொண்டிருந்தார்.

அந்த நிலையில் அங்கொரு சுமூக நிலையையும், தீர்வையும் ஏற்படுத்துவதை தனது தார்மீகப் பொறுப்பாக ஏற்றுக் கொண்டிருந்தார்.

ஆனால் போதையிலிருந்த கும்பலின் ஒரு பகுதியினர். டக்ளஸ் தேவானந்தா அவர்களை தாக்கியதோடு, டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கூறியதைக் கேட்டு அலுவலக வளாகத்துக்குள் சென்று கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்களையும் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தாக்கினார்கள்.

சிலர் ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தின் மேல் தளத்துக்கு ஏறி கொங்கிரிட் தளத்தை உடைத்து அதனூடாகப் பெற்றோலை ஊற்றினார்கள். அடுத்ததாக அலுவலத்திற்கு தீ வைப்பதே அந்த கும்பலின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

நல்ல வேளையாக அந்த வேளையில் அங்கு வந்த பொலிஸார், அந்தக் கும்பலை விரட்டியதோடு, காயமடைந்திருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களையும், காயமடைந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்களையும், ஏனைய ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களையும் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள்.

சிகிச்சை பெற்றுக்கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களையும், டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் பாதுகாப்பதாகக் கூறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பின்னர் சிறையில் அடைத்து விட்டார்கள்.

அப்போதைய சூழ்நிலையில் வெளியில் இருப்பதை விடவும், சிறைக்குள் இருப்பதில் மூன்று நன்மைகள் இருப்பதாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தோழர்களுக்கு கூறுவார்.

அவை எவை என்றால், சிறைக்குள் பாதுகாப்பாக இருப்பதும், சிறைக்குள் மூன்று வேளையும் உணவு கிடைப்பதையும் குறிப்பிட்ட அவர், சிறைக்குள் இருக்கும் போது, புத்தகங்களை வாசித்து அரசியல் அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். ஒருவகையில் அதுதான் உண்மையுமாகும்.

சிறைக்குள் இருக்கும்போதே சூளைமேடு சம்பவத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை வன்முறைக் கும்பல் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஒரு இளைஞர் காயமடைந்ததாகவும், அவரை முச்சக்கர வண்டி ஒன்றில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சம்பவத்திற்குப் பின்னரே டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தார் என்று பொலிஸாரின் முறைப்பாட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைக் கேட்டு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிர்ச்சியடைந்தாலும், நடந்த பிரச்சனைக்கும், தனக்கும் சம்மந்தம் எதுவும் இல்லாதபோதும், ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் தோழர்கள் என்றவகையில்; இப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வொன்றைக் காண்பதே அவசியம் என்றும் கூறினார்.

துரதிஸ்ட்டவசமாக சூளைமேட்டுச் சம்பவத்தில் காயமடைந்திருந்த அந்த இளைஞருக்கு சிகிச்சையளிக்க தாமதமானதால் அதிகமாக இரத்தம் வெளியேறி அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி சிறையிலிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

முப்பது வருடங்களுக்குப் பிறகு தற்போது சூளைமேட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை நான்காவது செசன் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அச்சம்பவம் தொடர்பாக அதிகமாக இப்பகுதியில் பதிவு செய்வது பொறுத்தமாக இருக்காது.

அவசியமான இன்னொரு பொழுதில் அந்தச் சூளைமேட்டு சம்பவம் தொடர்பில் அங்கு இதற்கும் மேலதிகமாக என்ன நடந்தது என்பதையும், அந்த சம்பவத்தை தூண்டிவிட்டவர்களாக பின்னணியில் இருந்த சில ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தர்கள் தொடர்பாகவும் விரிவாக எழுதுவேன்.

சூழ் நிலைக் கைதியாகி தார்மீகப் பொறுப்பேற்ற டக்ளஸ் தேவானந்தா அவர்களின் குணாம்சம் ஒன்றை இங்கே பதிவு செய்யவேண்டும்.

அந்த சூளைமேட்டுச் சம்பவ இடத்துக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வருகை தந்த வேளையில், அங்கே அந்த வன்முறைக் கும்பலோடு சில ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்த்தர்களும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பிரச்சனைகளில் சம்மந்தப்படாமல் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருக்கலாம்.

ஆனால் டக்ளஸ் தேவானந்தாவோ, பொதுவாகவே பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்கிப் போகின்றவரோ, அல்லது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கின்றவரோ இல்லை. அந்தப் பிரச்சனையில் தலையிட்டு தீர்த்து வைக்கவே முயற்சி செய்பவர்.

இதையே சக இயக்கங்களுக்கிடையிலான பிரச்சனைகளை தீர்ப்பதிலும் செய்தார்.

இங்கே தோழர்களுக்கும், ஒரு வன்முறைக் கும்பலுக்குமிடையே பிரச்சனை நடக்கும்போது டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எப்படி ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்க முடியும்?

அவரது குணாம்சம் காரணமாக அந்தப் பிரச்சனையில் சமரசம் செய்ய முற்பட்டதால், இன்று பழி சுமந்து நிற்கின்றார்.

(தொடரும்)

Related posts: