தனக்கென ஒரு அரசியல் சித்தாந்தம் கொண்ட டக்ளஸ் – சட்டத்துறை வல்லுநர் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாதன் சுட்டிக்காட்டு!

Friday, March 1st, 2019

இந்தியாவில் வாழும் தமிழ் அகதிகள் விரைவில் தாயகம் திரும்பி இயல்பு வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனையுடன் இருப்பவர்.

அண்மையில் அவருக்கு கிடைத்த மறுவாழ்வு அமைச்சர் பதவியை ஏற்ற ஓரிரு நாட்களில் தமிழ் அகதிகள் திரும்பி வருவதற்கு முக்கிய தேவையாக இருக்கின்ற ராமேஸ்வரம் – மன்னார் கடல் மார்க்க கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக செயற்பாடுகளை ஆரம்பித்த வேளை அவர் பதவி இல்லாமல் போனது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இந்தியாவில் வாழும் தமிழ் அகதிகள் பற்றி நான் தொடர்ந்து செய்து வருகின்ற கள ஆய்வுகளின் அறிக்கைகளை அவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அண்மையில் அவரை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவரை சந்திக்க சென்றவேளை, அவரை நேரில் சந்திப்பதற்காக நீண்ட கியூவில் பொது மக்கள் இருந்தனர். முதலில் அவர்கள் எல்லோரும், அவர் சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் அல்லது அவருடைய தொகுதி மக்களாக இருப்பார்கள் எனத்தான் எதிர்பார்த்தேன்.

ஆனால் அங்கு வந்து கியூவில் காத்திருப்பது வடபகுதியில் இருந்து வெவ்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

நான் அவரை சந்திக்க சென்றவேளை, உடனடியாக என்னுடன் கதைப்பதற்கு முன்வந்தபோது, நீண்ட நேரமாக காத்திருந்தவர்களை பார்க்கும்படியும், நான் தாமதிக்க முடியும் என்று கூறியதனால் வந்தவர்களை பார்த்து உரையாடினார்.

தொண்டர் ஆசிரியர்களின் நியமன பிரச்சினை, தட்டி வேன் பிரச்சினை என்று குழுக்களாக வந்தவர்களும், இளைஞர்கள், மாணவர்கள் போன்ற தனிப்பட்டவர்களையும் அவர் அவர்களுக்கான தேவையான நேரம் ஒதுக்கி பார்ப்பது மாத்திரமன்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அந்த இடத்தில் வைத்தே தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு தீர்வுகளையும் காண முயற்சிக்கிறார்.

வட மாகாணத்தில் வேறு பல பாராளுமன்ற பிரதிநிதிகள் இருக்கின்றார்கள், ஆனால் இவர் இப்போது அமைச்சரும் இல்லை. ஆளும் அரசியல் கட்சியிலும் இல்லை, அப்படியென்றால் இவருக்கு ஏன் இந்த கியூ என்பதை சற்று அங்கிருந்து அறிந்துகொள்ள முற்பட்டேன்.

டக்ளஸ் தேவானந்தா தமிழ் அரசியல் துறையில் நீண்ட காலம் இருப்பதினால் அவர் முழு இலங்கைக்கும் தெரியப்பட்டவர் என்பது உண்மை. இருந்தாலும், அவரின் அரசியல் கொள்கையை விமர்சிப்பவர்களும் இருக்கின்றார்கள்.

அவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரியப்பட்ட காலத்தில் இருந்து, பெரும்பான்மை அரசியல் தலைமைகளுடன் முட்டி, மோதி, அரசியல் நடத்த வேண்டுமென்பதில் எப்போதும் உடன்பட்டது இல்லை.

மக்களுக்கு வேண்டிய அவசியத் தேவைகளை செய்து கொடுக்க வேண்டுமென்பதில் அசையாத பிடிவாதம் கொண்டவர் என்பதினால் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அரசுடன் சேர்ந்து மக்களுக்கு சேவையாற்றுவதில் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களில் இவர் முதலில் இடம் பிடித்து கொண்டவர்.

செல்வநாயகம் முதல் அமிர்தலிங்கம் வரை, தமிழ் மக்களின் ‘ஆண்ட உரிமையை’ மீண்டும் பெறுவதில் அவர்கள் தவறிழைத்து விட்டார்கள் என்பதை சரிசெய்வதற்கு, துவக்குகளை தூக்கி வந்தவர்களில் டக்ளஸும் ஒருவர் என்றாலும்,

ஆயுதங்களினால் உரிமையை பெறமுடியாது. மாறாக, தங்களுக்குள் சுட்டுக்கொண்டு, தமிழர்களையும் சுட்டு, உலக பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக பேரெடுக்க நேரிடும் என்பதனை தீர்க்கதரிசனத்துடன் புரிந்து கொண்டு, துப்பாக்கிகளை வீசிவிட்டு, பாராளுமன்ற ஜனநாயக முறைமையில், இணைப்பு அரசியல் செய்து மக்களுக்கு சேவையாற்ற வந்தவர் இவர்.

புலிகளின் காலத்திலும், அதற்கு பின்பும், தாயகம், தன்னாட்சி, சமஸ்டி, சுய நிர்ணய உரிமை என்று இன்று வரை தங்களையும் ஏமாற்றி, தமிழ் மக்களையும் ஏமாற்றி வருபவர்கள் மத்தியில்,

எவருக்கும் விட்டுக்கொடுக்காமல் தனக்கென்று ஒரு அரசியல் சித்தாந்தம் கொண்டவராக இருப்பது அவரின் வெற்றிகளுக்கு ஒரு காரணமாக உள்ளது.

வட மாகாணத்திற்கு அபிவிருத்திகள் என்ற பெயரில், சிங்களவர்களையும், பௌத்த மதத்தையும் சிங்கள அரசுகள் கொண்டுவருகின்றன.

அதனால் வடக்கிற்கு அபிவிருத்தி வேண்டாம் என்று ஐந்து வருடத்தை வாய் கிழிய பேசி கோட்டை விட்ட, தலைமையின் ‘கையாலாகா’ போக்கின்போது மிகவும் வேதனைப்பட்டு கொண்டவர் டக்ளஸ்.

அந்த ஐந்து வருட சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்திருந்தால் அவரின் ஆளுமைக்கு கிடைத்த ஒரு ‘கொடை’யாகவும் வட மாகாண மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவும் இருந்திருக்கும், வட மாகாண மக்கள் இப்போது அதனை உணருகின்றார்கள்.

2009 இல் யுத்தம் முடிந்த கையோடு, ராஜபக் ஷவின் இணைப்பில் கைகோர்த்து சின்னாபின்னமாக கிடந்த வட மாகாணத்திற்கான புகையிரத சேவையை துரிதமாக கொண்டுவந்தவர்.

அவர் கொண்டு வந்த புகையிரதங்களில் அன்று முதல் இன்று வரை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் உட்பட யாழ்ப்பாண தமிழர்கள்தான் வருகின்றார்கள் போகிறார்கள்,

ஏமாற்று அரசியல் நடத்த முற்படும், தமிழ்த் தலைமகள் கூறுவது போல சிங்களவர்களும் வரவில்லை, பௌத்தமும் வரவில்லை. டக்ளஸுடனான சந்திப்பின் பின் நான் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.

நான் இந்தியாவில் வாழ்கின்ற தமிழ் அகதிகளின் வாழ்வியலில் கரிசனை கொண்டவன். இந்தியாவில் வாழும் தமிழ் அகதிகள் பற்றிய ஆய்வை செய்திருந்தேன்.

ஆய்வு அறிக்கையின் பிரதிகளை பாராளுமன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும், வட மாகாண முதலமைச்சருக்கும் அப்போது அனுப்பியிருந்தேன்.

இவர்கள் எவரும் பாராளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ இது பற்றி பேசியதும் கிடையாது, இந்தியாவில் உள்ள அகதிகள் பற்றி அலட்டிக்கொள்ளவும் இல்லை.

ஆனால் டக்ளஸ் பல முறை பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்டுள்ளார், உரையாற்றியுள்ளார், மேலும் தமிழ் நாட்டுக்கு சென்ற போதும் இது பற்றி பேசியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் அமைச்சர் சுவாமிநாதனிடம், பல்வேறு கேள்விகளை கேட்டு, தமிழ் அகதிகளை விரைவாக நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் பற்றியும் வினவியிருந்தார்.

இந்தியாவில் வாழும் தமிழ் அகதிகள் விவகாரத்தில் நான் ஏன் கரிசனையாக இருக்கின்றேன் என்பதை வெளிக்காட்டுவது மாத்திரமில்லை எனது முயற்சி, தமிழ் அகதிகள் தொடர்பான விவகாரங்களில் எனக்குள்ள ஈடுபாடுகள், அதுபற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்கூறி அரசியல் தலைமைகளுக்கும், கொள்கை வகுப்பவர்களுக்கும் அவர்களுக்கு அறிய கிடைக்காத விபரங்களை தெரியப்படுத்துவது எப்போதும் ஒரு பயனுள்ள விடயமாகும்.

அந்த வகையில் அகதிகள் விவகாரத்தில் எனது பயணத்தை சுருக்கமாக இங்கு கூறுவது பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

சர்வதேச சட்டத்துறையில் துறை சார் அறிவை பெற்றபோது, அகதி தஞ்சம் கோரி மேலைத்தேச நாடுகளில் வாழும் தமிழ் அகதிகள் மாத்திரமன்றி உலக அகதிகள் பற்றிய ஆய்வுகளை செய்து அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளேன்.

நான் தஞ்சம் கோரி அகதியாக வாழ்ந்த ஐக்கிய இராச்சியத்தில் 1983 – முதல் 2003 ஆம் ஆண்டு வரை (இருபது வருடங்கள்) இலங்கையை சேர்ந்த அகதிகள் எண்ணிக்கை சுமார் 51 ஆயிரமாக இருந்தது.

இவர்களில் சுமார் இரண்டாயிரம் பேருக்கு மாத்திரமே அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் 15 ஆயிரம் பேருக்கு மனிதாபிமான அடிப்படையில் இருப்பிட அனுமதி வழங்கப்பட்டிருந்-தது.

மிகுதியான 34 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களை நிராகரித்து தற்காலிக இருப்பிட அனுமதியுடன், இலங்கையில் யுத்தம் முடிவடைந்து சமாதானம் உரு-வாகும் போது,

இவர்களை நாடு கடத்தும் நோக்கில் பிரித்தானிய அரசு எதிர்பார்த்திருந்தது. இவர்களில் சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேல் பிரித்தானியாவில் வாழ்ந்தவர்களும் அடங்குவர்.

இந்த காலப்பகுதியில் நான் பிரித்தானியா அகதிகள் பணியகத்தின் சர்வதேச சட்ட ஆலோசகராக கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.

தமிழ் அகதிகளின் உரிமை என்பது பற்றியும் சர்வதேச அகதிகள் சட்டத்தின் வரைமுறைகளை பின்பற்றி பிரித்தானிய அரசு நடந்து கொள்ளாமல் தமிழ் அகதிகளின் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளிக்கத் தவறிவிட்டது என்ற அடிப்படையில் லண்டனில் உள்ள கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் நெறிப்படுத்துகையின் உதவியுடன் நான் கடமையாற்றிய பிரித்தானிய அகதிகள் பணியகத்தின் அனுசரணையுடன் ஆய்வொன்றை செய்து அறிக்கையை வெளியிட்டேன்.

தற்போது பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஜெரேமி கோபான் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினையில் அதிக கரிசனை கொண்டவர். தமிழ் அகதிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தவர்.

நான் செய்த ஆய்வு அறிக்கை பற்றி பாராளுமன்றத்தில் உரையாடினார். தமிழ் அகதி-களின் மனித உரிமைகள் மதிக்கப் படவேண்டுமென வாதிட்டார்.

அதை தொடர்ந்து அந்த அறிக்கை சர்வதேச ஆய்வு சஞ்சிகையில் வெளிவந்தபோது, பிரித்தானிய குடிவரவு பகுதியினருக்கும் நிராகரிக்கப்பட தமிழ் அகதிகளின் நிரந்தர இருப்பிட அனுமதியை வழக்குவதற்கான சூழலை உருவாக்க நேர்ந்தது.

நான் இந்த ஆய்வை செய்துகொண்டிருந்த வேளை, இந்தியாவில் வாழும் அகதிகள் பற்றிய தகவல்களை சேர்ப்பதற்காக தமிழ் நாடு சென்று அங்குள்ள சில முகாம்-களில் இருக்கும் அகதிகளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

அங்கு வாழும் அகதிகளின் வாழ்வியல் மிக வேதனையை உண்டாக்கியது. மேலைத்தேச நாடுகளில் அகதி தஞ்சம் கோரியவர்களை விட உண்மையாகவே தங்களது உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஆபத்தான கடல் கடந்து அங்கு தஞ்சம் கோரியவர்களின் அவல வாழ்வியலை வெளிக்கொணர வேண்டும் என்று முற்பட்டேன்.

லண்டனில் இருக்கும் சர்வதேச குடிவரவாளர்களுக்கான அமைப்பின் அனுசரணையுடன் தமிழ் நாடு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் நெறிப்படுத்தல் உதவியுடன் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையி-லான காலப்பகுதியில் பரந்த அளவிலான ஆய்வு ஒன்றை செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். தமிழ் நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் வாழும் முகாம்களுக்கு நேரடியாக சென்று தரவுகள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகளும் பரிந்துரைகளும் செய்யப்பட்டன.

கடந்த வருடம் அமைச்சராக இருந்த சுவாமிநாதனையும் அவரது உயர் அதிகாரிகளையும் சந்தித்து, நாடு திரும்ப விரும்பும் தமிழர்களுக்கான தேவைகளை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பல யோசனைகள் பற்றி கலந்துரையாடி தொடர்ந்து செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்பு அரசியல் பிரச்சினைகளின் பின்பு டக்ளஸ் அமைச்சராக பதவியேற்ற போது, இந்த விடயம் தொடர்பாக மின்னஞ்சல் மூலமாக விபரங்களை தெரியப்படுத்தினேன். தமிழ் அகதிகள் பற்றிய பல கட்டுரைகளை நான் வீரகேசரியில் எழுதியுள்ளேன். டக்ளஸ் பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பல தடவைகள் அமைச்சரிடம் கேள்விகள் கேட்டும் உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முல்லைத்தீவு மகாவலி அபிவிருத்தித் திட்டம் பற்றி செய்திகள் வெளிவந்தன.

இந்த திட்டத்தின் மூலம் சிங்கள மக்களை குடியேற்ற அரசு முனைகின்றது என்ற குற்றச்சாட்டை தமிழ் அரசியல்வாதிகள் முன்வைத்தனர்.

இதுபற்றி ஜனாதிபதியும் ஒரு சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த தறுவாயில் இந்தியாவில் உள்ள அகதிகளில் சுமார் அறுபது வீதமானோர் தாங்களாகவே திரும்புவதற்கு விரும்புகிறார்கள்,

அது சுமார் ஒரு லட்சம் பேர் என்ற தகவலை தெரிவித்து, அவர்களை முல்லைத்தீவு மகாவலித் திட்டத்தின் கீழ் குடியமர்த்த அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பது பற்றிய எனது யோசனையை கடிதம் மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் பதிவு தபால் மூலம் அனுப்பியிருந்தேன்.

நான் இவர்களுக்கு கடிதம் அனுப்பிய விடயம் தொடர்பாக வீரகேசரியில் செய்தியாகவும் வெளிவந்தது. ஆனால் இவர்களிடம் இருந்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை.

இது தொடர்பாக சிறிதும் அலட்டிக் கொண்டதாகவும் தெரியவில்லை. இந்த இருவரும், தங்களுக்கு ஆலோசனை சொல்வதற்கு ‘நான் யார்’? என்ற போக்கில் இருந்திருக்கலாம்.

அவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்கு அவர்களை போன்ற அரசியல்வாதிகளாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றார்களோ என்பதில் ஐயப்பாடு உண்டு.

நான் ஒரு அரசியல்வாதி இல்லை. வரவிரும்புபவரும் இல்லை. நான் சாதாரண ஒரு குடிமகன். தமிழ் அகதிகளின் வாழ்வியலில் ஒரு கரிசனை உள்ளவன் அதை விட வேறு எதுவும் இல்லை.

இவற்றை விட, புலம் பெயர்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கானவர்களில், தான் பிறந்த நாட்டுக்கு, எஞ்சிய மீதி காலத்திலாவது, அங்கு சென்று, வெளிநாடுகளில் நாம் கண்டது, படித்தது, அறிந்து கொண்டது போன்றவற்றின் அனுபவங்களில் இருந்து பொருத்தமானவற்றை எனக்கு சிறு வயதிலிருந்து இலவச கல்வியை தந்து ஆளாக்கிய எனது தாய் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பலரில் நானும் ஒருவன்.

அகதி தஞ்சம் கோரிய மேலைத்தேய நாடுகளில் தமிழ் அகதிகள் வசதியாக வாழ்கிறார்கள்.

தங்களது உறவுகளை இழந்து, உடமைகளை இழந்து வெறும் கைக-ளுடன் தமிழ்நாடு ராமேஸ்வர கடற்கரை யோரங்களில் இறங்கிய தமிழ் அகதிகள், அங்கு முகாம்களில் வாழும் நிலைமையை பார்க்கும்போது,

அவர்கள் தொடர்ந்து இருக்க வேண்டிய தேவையில்லை. இந்திய அரசோ, ‘இருக்கும் வரை இருங்கள், விரும்பினால் போங்கள் ‘ என்ற நிலைப்பாட்டுடன் இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துவரும் அவர்களுக்கு, குடியுரிமை இல்லை, வாக்குரிமை இல்லை,

அரச தொழில் வாய்ப்புக்கள் இல்லை, சொத்துக்கள் வாங்கும் உரிமை இல்லை. திறமை இருந்தும் தங்கள் குழந்தைகளை உயர் கல்வி வழங்க பண வசதி இல்லை. இவற்றுக்கும் மேலாக மண்டபம் போன்ற முகாம்களில் ‘கியூ’ பிரிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் கெடுபிடிகள். யுத்த காலத்தில் சென்றார்கள்,

இப்போது யுத்தம் முடிவடைந்து விட்டது. மற்றைய தேசங்களில் அகதிகள் என்ற பெயரில் குடியேறியவர்கள் அந்த நாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் செய்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் இவர்களோ இன்னும் அவல வாழ்வு வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்வியலில், சுபீட்சமான எதிர்கால வாழ்வை தேடிக்கொடுப்பது தமிழ் தலைமைகளுக்கு உரிய பொறுப்பாகும்.

அவர்கள் கௌரவத்துடனும் மரியாதையுடனும் நாடு திரும்பி தங்களது வாழ்வியலை மீள சீரமைத்து தங்களது தாயகத்தில் வாழ்விக்க வேண்டியது தமிழ் அரசியல் தலைமைகளின் கடமை மாத்திரமன்றி, ஒட்டு மொத்த இலங்கை அரசினதும் பொறுப்பாகும்.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு, நான் செய்த ஆய்வு அறிக்கை பற்றி தெரியப்படுத்தியவுடன் அவர் என்னை நேரில் சந்தித்து இது தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள விரும்பியதே, தமிழ் அரசியல் தலைமைகள் என்று கூறிக்கொண்டு, பாராளுமன்ற கதிரைகளை குறிவைத்து அரசியல் நடத்தும். ‘பேர்வழிகளை’ விட டக்ளஸ் வித்தியாசமானவர் என்பதனை உணர்த்தியது.

அவரை நேரில் சந்தித்து தமிழ் அகதிகள் பற்றி உரையாடிய பின்பு, அவர் தமிழ் அகதிகள் திரும்ப வேண்டும், அவர்களுக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டுமென்பதில் மிகவும் கரிசனை உள்ளவராக இருப்பதை உணர முடிந்தது.

தான் தொடர்ந்து அமைச்சராக இருக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் ராமேஸ்வரம் – மன்னார் கப்பல் சேவையை ஆரம்பித்து உடனடியாக வரவிரும்புபவர்களுக்கு அவர்களின் உடமைகளை கொண்டுவருவதற்குரிய வழி முறைகளை கண்டிருக்க முடியும் என தனது அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினர்.

தற்போதைய சூழ்நிலையில் முன்னர் சுவாமிநாதனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி ஏதாவது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா என தான் பொறுப்பு வகித்த அமைச்சின் தற்போதைய செயலாளர் சிவஞானசோதியை சந்திப்பதற்கு, உடன் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, முன்கூட்டிய நேரம் ஒன்றை எனக்கு ஒழுங்குபடுத்தி தந்தது மாத்திரமன்றி,

அவருடைய சந்திப்பின் பெறுபேறுகள் பற்றி தொலைபேசியில் தன்னுடன் தெரிவிக்குமாறும் என்னை கேட்டுக்கொண்டது, டக்ளஸ் தமிழ் அகதிகளின் பிரச்சினையில் எவ்வளவு கரிசனை உள்ளவர் என்பதையும் மேலும் எடுத்து காட்டியது.

இப்போது பிரதமர் ரணில் இந்த அமைச்சை பொறுப்பெடுத்துள்ளார்.

சுவாமிநாதனிடம் இருந்து வந்த இந்த அமைச்சு பறிப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள்தான் காரணம் என செய்திகள் அடிபட்டன. அடுத்த ஒரு வருட காலத்தில் அந்த அமைச்சு எதுவும் சாதித்து விடப் போவதில்லை.

இப்போதுள்ள சூழ்நிலையில் மைத்திரியும் ராஜபக்ஷவும் சேரப் போகும் கூட்டில், எந்த தேர்தல் வந்தாலும் ரணிலுக்கு தமிழர்களின் வாக்குகள் அவசியம் தேவை. ரணிலுக்கு இருக்கக் கூடிய தெரிவு சம்பந்தன்-, சுமந்திரன் கோஷ்டியை நம்பியாக வேண்டிய நிலைமை.

சம்பந்தன் கோஷ்டி அடுத்து வரும் தேர்தல்களில் கோட்டை விடப்போகின்றது என்பதை ரணில் அறியாமல் இருப்பது வேடிக்கையானது.

ரணில் தன் பகுதிக்கு போவதை விட அடுத்த காலங்களில் வடக்கிற்கு அடிக்கடி வருவார்,

அபிவிருத்தி பற்றி கதைப்பார், இந்த சந்தர்ப்பத்தை பாவித்து ரணிலுக்கு முண்டு கொடுக்கும் தமிழ்த் தரப்புகளுக்கு ஏதாவது செய்து கொள்ளவேண்டும் என்ற முயற்சிகளும் காணப்படும்.

தமிழர்கள் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் அபிவிருத்திகள் முன்னெடுக்க முடியாது என்ற பிடிவாதத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வட மாகாண அமைச்சரும் யுத்தம் முடிவுற்று கடந்த பத்து வருட காலத்தில் இனப்பிரச்சினைக்கும் தீர்வை கண்டு கொள்ளவில்லை, அபிவிருத்தியையும் செய்யவில்லை.

டக்ளஸ், இனப்பிரச்சினைக்கான தீர்வும் அபிவிருத்தியும் சமமாக கொண்டு செல்லப்படவேண்டுமென்பதே தனது நிலைப்பாடாக இருந்து வருகின்றார்.

தமிழர் இனப் பிரச்சினைக்கு தீர்வாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ரணில் அரசுக்கு ஆதரவு கொடுத்து ‘இரக-சிய இணை’ அரசியலை நடத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ரணில் கைவிரித்து,

அந்த விடயத்துக்கு முற்றுப் புள்ளியும் வைத்து விட்டார். அடுத்து இருக்க போகும் பாராளுமன்றக் காலத்தில் எந்த தலைப்பை வைத்து அரசியல் நடத்துவது என்ற பெரும் தவிப்பில் தமிழர் தரப்புகள் இருக்கின்றன.

வடக்கு அபிவிருத்தி அமைச்சு ரணிலிடம் இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கொண்டு கொழும்பில் இருந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் ‘கனவான் ‘ அரசியல் நடத்துவதை விட்டு,

வட மாகாண, அதுவும் முக்கியமான, யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் வாழும் மக்கள் முகம் கொடுக்கும் அன்றாட வாழ்க்கை அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணுவது, அடுத்த தேர்தல் மேடைகளில் கதைப்பதற்கோ அல்லது தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பதற்கோ உதவும்.

இன்று வட மாகாணத்தில் என்றுமில்லாதவாறு, சமூக சீர்கேடுகள் உருவாக்கியுள்ளதை பலரும் பேசுகின்றார்கள்.

ஆனால் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது அல்லது இல்லாமல் ஒழிப்பது தொடர்பாக முக்கிய அரசியல்வாதிகளுக்கும், மக்களின் பிரதிநிதிகளுக்கும் எந்த வழிகளும் தெரியவில்லை.

யாழ்ப்பாண நகரத்தில், சில தனியார் வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்களை தவிர புதிய கட்டுமான அபிவிருத்திகள் கடந்த பத்து வருடங்களாக இடம் பெறவில்லை.

நகர பாதை நிர்-மாணம், வாகன போக்குவரத்து கட்டுப்பாடுகள், சாலையோர நடைபாதைகள், பஸ் தரிப்பு நிலையம் பொது சந்தை கொட்டில்கள் என்பன அப்படியே இருக்கின்றன.

ஒரு நகரம் புதிய ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும் போதும், அல்லது நிர்மாணிக்கப்படும்போதும், அந்த நகரத்தில் வாழ்கின்றவர்கள் அல்லது அந்த நகரத்தை நாளாந்தம் பயன்பாட்டுக்கு பாவிப்பவர்களான, வாகன சாரதிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள், நடைபாதை மக்கள் எல்லோருமே அந்த நகர ஒழுங்கு விதிகளின் அமைவாக கட்டுப்பாட்டுடன் நடக்கவேண்டியது அவசியம்.

இதனை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அல்லது அதற்காக பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கருவிகள் உறுதிப்படுத்தும்.

ஆனால் யாழ்ப்பாண நகரத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக எதுவும் நடக்காத படியினால், எவ-ருக்கும் எந்த பொறுப்பும் இல்லை. தன்னிச்சையாக வேண்டியபடி நடக்கின்றார்கள். வாகனங்களின் கட்டுக்கு அடங்கா வேகத்தில் குடியிருப்பு பகுதிகளில் ஓடு-வதும், பாதையோரங்களில் நடைபாதைகளில் செல்பவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்வதும் அங்கு நாம் பார்க்க கூடிய நாளாந்த காட்சிகளாகும்.

புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களோ அல்லது முன்பிருந்த பாரிய வேலைவாய்ப்புகளை வழங்கிய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை போன்ற தொழில் பேட்டைகள் இப்போது இல்லாத படியினால் வேலைவாய்ப்பற்று இருப்பவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அபிவிருத்தியை பற்றியே பேச விரும்பாத அரசியல்வாதிகள் இந்த சமூக சீர்கேடுகள் இடம் பெறுவதற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கின்றார்கள்.

டக்ளஸ் காரியாலயத்தில் கியூ வில் நின்றவர்கள் அதிகமானோர், தொழில்வாய்ப்புக்காக உதவி தேடி வந்தவர்கள் என்பதையும் கவனிக்க கூடியதாக இருந்தது. போதைப்பொருள் பாவனை, கொள்ளைகள், கொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற சமூக விரோத செயல்களை பொலிஸாராலோ அல்லது இராணுவத்தினாலோ மாற்றி விட முடியாது.

காரணம் அவர்களும் அதில் பங்காளிகள் என்று பரவலாக யாழ்ப்பாணத்தில் பேசப்படுகின்றது. இந்த சந்தர்ப்பதில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும் போது ‘பேசுவது தேசியம் செய்வது கஞ்சா வியாபாரம்’ என சுட்டிக்காட்டி பேசியது பாராளுமன்ற பிரதிநிதிகளின் பங்குகளும் உண்டு என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

யாழ்ப்பாண நகரம் மாறவேண்டும், மாற்ற முனையும் ஆளுமை உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு வழங்க மக்களும் மாறவேண்டும், கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள், தங்களுக்கு தேவை வரும்போது, டக்ளஸ் அலுவலகத்தில் கியூவில் இருப்பது,

‘பிழையானவர்களுக்கு வாக்குகளை அளித்து விட்டு சரியானவரிடம் உதவிக்கு நிற்பதாகும்”இச் சந்தர்ப்பதில் வட மாகாண ஆளுநர் அண்மையில் தெரிவித்த கருத்தையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமாகும்.

வட மாகாண அரசியல் வாதிகள் மக்கள் சார்ந்த நலன்கள் தொடர்பான பிரச்சினைகளோ அல்லது உதவிகளையோ தன்னிடம் கேட்பதில்லை என்றும், தங்களின் சுயநல தேவைகளை பற்றியே பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சிலவேளை தங்களுக்கு வாக்களித்த எவரும் அவர்களிடம் உதவி கேட்டு செல்வதில்லையோ தெரியாது. அதனால்தான், அவர்களிடம் கியூ வில் நிற்காமல் டக்ளஸ் காரியாலயத்தில் நிற்கிறார்கள்.

இனிவரும் தேர்தல்களில் வட மாகாண வாக்காள மக்கள் சரியானவர்களுக்கு வாக்களித்து சரியானவர்களிடமே உதவிகளையும் நாடி ‘கியூ’ வில் நிற்பது வரவேற்கத்தக்கதாகும்.

(சர்வதேச சட்டத்துறை வல்லுநர் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாதன் எழுதி கடந்தவார வீரகேசரி வார இதளில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்.. நன்றி வீரகேசரி)

Related posts:

முழுமைபெறாதுள்ள சாவகச்சேரி திடீர் விபத்து பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுத்து தருமா...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவதாக கச்சதீவு செல்...