பாதீட்டின் பரிந்துரைகள் பலன்தரப்போவதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, March 12th, 2019

எமது மக்களால் எட்ட நின்று பார்வையாளர்களாகப் பார்த்துவிட்டு, ஒரு பெருமூச்சினை வெளிப்படுத்திவிட்டு செல்லக்கூடிய வெறும் வரைபுகளாக மாத்திரமே இந்த நாட்டின் வரவு – செலவுத் திட்டங்கள் காணப்படுகின்றனவே தவிர, அவற்றின் மூலமாகக் கூறப்படுகின்ற விடயங்கள் நடைமுறை ரீதியில் எந்தளவிற்கு சாத்தியம் என்பது வெறும் பூச்சியமாக இருந்து வருவதையே எமது மக்களால் தொடர்ந்தும் கணிக்கப்பெற்று வருவதையும் நான் இந்தச் சந்தர்ப்பத்திலே குறிப்பிட்டாக வேண்டும என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்;தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

குறிப்பாக, கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்ட வரைபிலே ‘நல்லிணக்கம்’ என்ற தலைப்பின் கீழ் வடக்கு, கிழக்கு சார்ந்து கிட்டத்தட்ட 20 விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த 20 விடயங்களில் கடந்த ஆண்டு, அல்லது இதுவரையில் எந்தெந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற கேள்வி எமது மக்களிடையே எழுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செங்கல் மற்றும் ஓடுகள் கொண்ட 50 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. அப்படி ஏதேனும் வீடுகள் அமைக்கப்பட்டனவா என்பது பற்றி எமது மக்களுக்குத் தெரியாது.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் ‘நல்லிணக்கம்’  எனும் தலைப்பிருந்து ‘சமூகப் பராமரிப்பு முன்னெடுப்புகள்’ என்ற தலைப்புக்கு மாற்றி, 2019ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 15 ஆயிரம் செங்கற்களினாலான வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும், இதற்காக 4,500 மில்லியன் ரூபா ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக மேலும் 5,500 மில்லியன் ரூபா பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடக்கு, கிழக்கில் வீடமைப்புத் திட்டத்தினை மேற்கொள்வதற்கென திறைசேரியில் நிதி இல்லை என்றே கடந்த பல மாதங்களாகக் கூறப்பட்டு வந்துள்ள நிலையில், ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற அந்த 4,500 மில்லியன் ரூபா எங்கே இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

அதே நேரம் இங்கே பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’ – ‘சிஹின மாளிகா’ – கனவு மாளிகை போன்ற வீடமைப்புக் கடன் திட்டத்தை போல், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாகவோ அல்லது வேறு அரச நிறுவனங்களின் ஊடாகவோ வீடமைப்பு கடன் திட்டத்தை இரட்டிப்பாக வழங்க கூடிய வழிவகைகள் தொடர்பில் ஆராய்வதும் எமது மக்களுக்கு வசதியாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts:


தீர்வுகள் எட்டப்படாத நிலைமைக்கு காரணம் மக்கள் சரியானனவர்களை தெரிவு செய்யாமையே காரணம் - டக்ளஸ் தேவானந...
ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவோம் - ஊர்காவற்றுறையில் செயலாளர...
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது – ஊடகக் செய்தியில் அமைச்ச...