கூத்தாடிகள் கைகளில் வடக்கு மாகாண சபை!

Saturday, March 5th, 2016

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடந்தது. 37 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் முப்பது உறுப்பினர் பதவிகளை வென்று, வெற்றி எக்காளத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையைப் பொறுப்பேற்ற போது தமிழர்கள் பலரும் மகிழ்ந்து தான் போனார்கள். அந்த மகிழ்ச்சிக்கு மத்தியிலும் சிலருக்குப் பயம் கலந்த கவலை ஒன்றும் இருக்கவே செய்தது.

ஒரு சபை செவ்வனே செயற்பட வேண்டும் என்றால் தவறுகளைச் சுட்டிக்காட்டித் தட்டிக்கேட்க ஒரு பலமான எதிரணியும் அவசியம் என்ற கவலையே அது.

எதிர்க்கட்சித் தரப்பு உறுப்பினர்கள் எழுவருள் ஒருவரான, அத்தரப்பின் தலைவர் சி.தவராஜாவே தனித்து நின்று அந்தப்பணியை இன்றுவரை ஓரளவுக்குக் காத்திரமாகச் செய்து வருகின்றார்.

அவரைத் தனித்து விடுவது சரியில்லை என்ற ஆதங்கம் போலும் ஆளும் தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போது.

அதனால்தான் ஆளும் கட்சித் தரப்பாக இருந்து எதுவுமே செய்யாத தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள், இப்போது தமது ஆளும் தரப்பை உடைத்துப் பலவீனமாக்கும் எதிரணித் தரப்பு வேலையையும் தாங்களே பொறுப்பெடுத்துக் கொண்டு விட்டார்கள். அதாவது தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப்போடும் கைங்கரியம் தான் அது.

எமது நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான தமிழ்த் தலைமைகளுக்கும் தென்னிலங்கைத் தலைமைகளுக்கும் இடையில் ஒரு பொருத்தப்பாடு இருக்கின்றது.

ஆட்சியை – அதிகாரத்தை – பதவியை – பிடிப்பதற்கு –

தென்னிலங்கைத் தலைவர்களைப் பொறுத்தவரை இனவாதமே ஒரேவழி – மார்க்கம்.

அதேபோல, தமிழ்த் தலைவர்களைப் பொறுத்தவரை குறை சொல்வது மட்டுமே – எதிர்மறை அரசியல் நடத்துவது மட்டுமே – ஒரே பண்பியல்பு.

அதனைத்தான் இப்போது தெற்கிலும் வடக்கிலும் நாம் மீண்டும் சந்திக்கின்றோம்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தென்னிலங்கையில் இப்போது இனவாதம் மீண்டும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியிருப்பது அபாய எச்சரிக்கையை எழுப்பியிருக்கின்றது.

அதேபோல,வடக்கிலும் தங்களது எதிர்மறை அரசியல் என்ற பரவணிப் பழக்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக வெளிப்படுத்திக் காட்டிவருகின்றது.

இந்த நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் தென்னிலங்கை அரசியல் தலைமையை குறைசொல்லி, குறைசொல்லியே அரசியல் பிழைப்பு நடத்தி வந்தன நமது அரசியல் தலைமைகள். பதவிகளைக் கைப்பற்றுவதற்கும் – தேர்தல்களில் வெல்லுவதற்கும் – தென்னிலங்கையைக் கரித்துக்கொட்டி பிலாக்கணம் பாடுவதை மட்டுமே தந்திரமாக – தந்திரோபாயமாக – கைக்கொண்டு வந்தன நமது தலைமைகள்.

ஜனநாயக வழிப்போராட்டங்கள் மட்டும் அல்ல, ஆயுத வழிப்போராட்டம் கூட ஓர் எதிர்மறை அரசியல் நகர்வுப் போக்குத்தான்.

ஆக்கபூர்வமான அரசியல் செல்நெறி – நேர்வழியான பண்பியல்பு – எங்களுக்கு அறவே கிடையாது.

அதனால்தான் தமிழ்த் தலைமைகள் கைப்பற்றிய அதிகாரப் பதவிகள் எதனாலும் ஆக்கபூர்வமான எதனையுமே செய்ய முடியவில்லை, சாதிக்க இயவில்லை.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய உள்ளூராட்சி அமைப்புக்கள் அனைத்தும் செயற்றினில் படுதோல்வியையே கண்டுள்ளன. எப்போதுமே குறைசொல்லி – அதிகாரத் தரப்பு மீது குற்றம் கண்டுபிடித்து –  அரசியல் பிழைப்பு நடத்தி வந்த அந்தத் தலைமைகளினால் அதிகாரம்மிக்க பதவிக்களைப் பொறுப்பேற்றும் சற்றும் ஆக்கபூர்வமாக எதுவுமே செய்ய முடியவில்லை.

ஆனால், மறுபுறமாக, கடந்த இரண்டு தசாப்தங்களாகத் தென்னிலங்கை அரசியல் தலைமைகளுடன் இணைந்து – எதிர்மறை அரசியலுக்கு மாற்றாக நேர்வழி அரசியல் செய்யப் புகுந்த – ஈ.பி.டி.பி இது விடயத்தில் ஆக்கபூர்வமாக ஏதோ செய்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

அக்கட்சியினால் வெல்லப்பட்ட யாழ்ப்பாண மாநகரசபையும், தீவகத்தின்  மூன்று உள்ளூராட்சி சபைகளும் குறிப்பிடத்தக்களவு பயனை – பெறுபேறை – சாதிப்பதில் வெற்றி கண்டிருக்கின்றன என்பது மிகையல்ல.

ஆனால், தமிழ்க் கூட்டமைப்பு கைப்பற்றிய இருபதுக்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளில் எதுவுமே சரிவர இயங்கவில்லை. எல்லாவற்றிலும் ஒரேகுத்துவெட்டு, குளறுபடி, குள்ளத்தனம், குழப்பமே மிச்சம்

அதே கதிதான் – அதோ கதிதான் – தமிழ்க் கூட்டமைப்பு கைப்பற்றிய வடக்கு மாகாண சபைக்கும் என்பதுதான் வேதனைதரும் உண்மை.

இதனையே, கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பியும் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்திருக்கின்றார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரங்களைச் சரிவரப் பயன்படுத்தவில்லை. அந்தத் தகைமை அவர்களிடம் இல்லை எனப் பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அதிகாரங்கள் எங்கள் கைகளுக்குக் கிடைக்கின்ற போது நாம் அதனை எப்படிப் பாவிக்கின்றோம் என்பது தொடர்பில் பல விமர்சனங்கள் இப்போது எழுகின்றன. ‘நீங்கள் ஆட்சி அதிகாரங்களைக் கேட்கின்றீர்கள். ஆனால் அதனைக் கையாளக் கூடிய தகைமை இப்போது உங்கள் சமூகத்திலே இல்லை’ என்று வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் எங்களிடம் சொல்கின்றார்கள். அதிகாரங்கள் உங்கள் கைகளில் கிடைத்தும் அதனைப் பாவிக்க முடியாமல் இருக்கின்றீர்கள் என்ற பெரிய குற்றச்சாட்டு எங்கள் மீது வந்து கொண்டிருக்கின்றது.” – இப்படிக் கூறியிருக்கின்றார் சுமந்திரன்.

அவர் இந்தக் கருத்தைப் பகிரங்கமாக வெளியிட்டதன் உள்நோக்கம் வேறு.  மாகாண சபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, முதல்வர் விக்கினேஸ்வரன் அணியைச் செயலிழக்க வைக்கும் திட்டத்தின் ஓர் அங்கமே இக்கருத்து வெளிப்பாடு. ஆனால் அந்தக் கருத்தில் உண்மை இருப்பது மறுக்கக் கூடியதல்ல. இந்நிலைமை தோன்றுவதற்குக் காரணமானவர்கள் இக்குற்றச்சாட்டை முன்வைக்கும் சுமந்திரனும், கூட்டமைப்பைக் கூத்தமைப்பாக மாற்றுவதற்கு அவருடன் சேர்ந்து துணைபோகும் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவும்தான் என்பதும் மறைக்கக் கூடியதல்ல.

கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் நிற்பதற்கு தகுதியுள்ளவர்களுக்கு இடம்கொடுக்காமல், தனக்குத் தலையாட்டி, பந்தம் பிடிப்போருக்கு மட்டுமே இடமளித்து கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளையும் மாகாண சபையையும் கோமாளிகள் கூத்தடிக்கும் அமைப்புகளாக மாற்றுவதற்குப் பிரதான கர்த்தாவாக இருந்தவர் இந்த மாவைதான்.

வடக்கு மாகாண சபை தனக்குரிய பணிகள் எதனையுமே இதுவரை நிறைவு செய்யவே இல்லை.

இரண்டரை ஆண்டுகளாகியும் போதிய நியதிச் சட்டங்கள் உரியமுறையில் கொண்டு வரப்படவுமில்லை; நிறைவேற்றப்படவுமில்லை. சபைக் கூட்டங்களில் விவாதிக்கப்படுபவையும், நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் சபையின் பணிகள் தொடர்பானவை அல்ல. சபையின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயங்களே பெரும்பாலும் பேசப்பட்டு, நேரம் வீணடிக்கப்படுகின்றது. அவையும்கூட குறைசொல்லி பிலாக்கணம் வைக்கும் காதைகள்தான். சர்வதேச யுத்தக் குற்றப்பிரேரணை பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்குதல், மன்னார் ஊடாக இந்தியாவுக்கு ரயில் மார்க்கப் பயணம் என்று தனது அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயங்களும், மாற்றாரைக் குறிவைத்துத் தாக்கும் அரசியல் பிரசாரங்களும் தான் அங்கு அரங்கேறுகின்றன. ஆக்கபூர்வமான அரசியல் திட்டங்கள், நடவடிக்கைகள் சபையில் இடம்பெறுவது குறைவிலும் குறைவு. சபைக்குரிய நிதிகூட, உரியமுறையில் செலவிடப்படாமல் திரும்பும் அளவுக்கு நிர்வாகத் திறனின்மை.

இவையெல்லாம் போதாது என்று ஆளும் கட்சியினரே பிரிந்து நின்று, எதிரணியாக ஒருவருக்கு ஒருவர் சேறு அள்ளிவீசும் குள்ளத்தனங்களும் அங்கு சர்வசாதாரணமாகி விட்டது.

கையாலாகத்தனத்தில் முதலமைச்சர்.

ஊழல் பேர்வழிகளாகவும், நிர்வாகத் திறனற்றவர்களாகவும் அமைச்சர்கள்.

நடுநிலைப் பொறுப்பு என்ற தவிசாளருக்கு உரித்தான பண்பியல்பை அடியோடு துறந்துவிட்டு குள்ளநரித்தன அரசியல் விஷமத்தனங்களைத் தூண்டிவிட்டு, குழப்பங்களுக்கு சூத்திரதாரியாக விளங்கும் சபைத் தலைவர்.

கொழும்பிலிருந்து ‘ரீமோல்ட்கொண்ட்ரோலில்’ காய் நகர்த்தும் ‘சாம் – சுமோ’ கூட்டணியின் ஏவல் நாய்களாக சில உறுப்பினர்கள். (அவர்கள் சொற்படி நடந்தால் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும், ஏனைய தேர்தல்களிலும் முக்கிய பதவிகள் நிச்சயம் என்ற நம்பிக்கையில் இந்த ஏவல் பிசாசுகள் காரியமாற்றுகின்றன என்பது ஊரறிந்த உண்மை.)

நமக்கென்ன எது நடந்தாலும் எந்தப் பக்கமும் சேராமல், யாரையும் வையாமல் இருப்பதன்மூலம் தங்களின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற தீராத நம்பிக்கையில் இன்னொரு சாரார். (விளையாட்டு விழாக்கள், திறப்பு விழாக்கள் என்பவற்றில் தலையைக் காட்டிப் படத்தைப் பத்திரிகையில் போடுவதும், தென்னிலங்கையையும் ஈ.பி.டி.பியையும் திட்டி அரசியல் அறிக்கைகளை விடுவதும் தங்களின் ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்து, அடுத்த தேர்தலிலும் தங்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தப் போதுமானவை என்ற முழு நம்பிக்கையில் இவர்கள்.

– இப்படி பயனற்ற – லாயக்கற்ற – இலக்கற்ற – கூட்டாகப் பரிணமித்து நிற்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை.

இந்தச் சீத்துவத்தை தம்பட்டம் அடித்து நிற்கின்றது கடந்தவாரம் நடைபெற்ற அந்தச்சபையின் அமர்வு.

ஊழல் அமைச்சர்கள் பற்றிய பட்டியலில் முன்னணியில் அடிபடும் பெயர் ஐங்கரநேசனுடையதான். சூழலியலாளர் எனத் தம்மைக்காட்டிக் கொள்ளும் ஐங்கரநேசன் அரசியல் சூழலுக்கு ஏற்பவும் தன்னை மாற்றிக்கொள்ளக் கூடியவர். ஆரம்பத்தில் ரெலோ இயக்கத்தில் இருந்தவர். பல இரகசிய நாசவேலைகளுடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்பட்டவர். விடுதலைப் புலிகள் ரெலோவைத் தடைசெய்த போது இவரையும் விட்டுவைக்கவில்லை. இருட்றையில் நீண்டகாலம் ‘சுகவாசம்’ செய்து வாங்கிக் கட்டியவர். வெளியே வந்ததும் நிலைமையைப் புரிந்துகொண்டு புலிகள் பக்கம் நிறம் மாற்றிக்கொண்டார். புலிகளின் உறுப்பினராகவும் மாறினார். ‘மகிழன்’ என்ற பெயரில் புலிப் போராளியாகவும் செயற்பட்டார் பிழைக்கத் தெரிந்த இந்தப் பிரகிருதி. ஆனால் இவருக்கும் பக்கத்து நாட்டு உளவுத்துறைக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகப் புலிகளுக்குப் பொறிதட்டியதும் இவர் உஷாரானார். யுத்தம் தீவிரமடையத் தொடங்கிய அக்காலகட்டத்தில் வன்னியிலிருந்து புலிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, அந்தப் பக்கத்து நாட்டுக்கே கம்பி நீட்டினார். அந்த நாட்டு உயர்தரப்பே இவரைப் பல ஆண்டுகள் அங்குவைத்துப் பராமரித்தது – வரதராஜப் பெருமாளைப் போல.

யுத்தம் முடிந்ததும் மீண்டும் தாயகம் திரும்பி தம் கைவரிசையை ஆரம்பித்தார். இம்முறை சிக்கியது ஈ.பி.ஆர்.எல்.எவ். அக்கட்சியின் சுரேஷ் பிரேமச்சந்திரனைக் கைக்குள் போட்டுக்கொண்டு கட்சி முக்கியஸ்தர் ஆனார்.

நாடாளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் புலிவாடை உடையவர்களுக்கு இடம்கொடுக்கவே கூடாது என்று பக்கத்து நாட்டு உளவுத்துறை கூட்டமைப்புத் தலைமைக்குக் காட்டமாக எழுதாத உத்தரவு போட்டபோதும் அதில் இவருக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டது. ஏனென்றால் தங்கள் மறைமுக முகவராகத்தான் இவர் புலிகளுக்குள் ஊடுருவியிருந்தார் என்ற யதார்த்தத்தால்.

நாடாளுமன்றத் தேர்தலில் தோற்று அடங்கியிருந்த இவர் மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு ஆதரவு சூறாவளியாக அடித்ததால், சூறாவளியில் அள்ளப்பட்ட அம்மியாக ஒருவாறு கரைசேர்ந்தார். அவ்வளவுதான். தம் கைவரிசையை மீண்டும் காட்டத் தொடங்கினார். இறுதியில் தமக்கு அரசியல் புகலிடம் கொடுத்த ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் ஆப்புவைத்தார். அரசியல் கத்துக்குட்டியான முதலமைச்சரைக் கையில் போட்டுக்கொண்டு தமது தகிடுதத்தங்களை ஆரம்பித்தார்.

கூட்டமைப்பின் பல மாகாணசபை உறுப்பினர்களையும், பிரமுகர்களையும் முதலமைச்சரில் இருந்து தள்ளிவைத்தமைக்கு சத்தம் சந்ததியின்றி, இவர் நடத்திய ‘மூட்டைப்பூச்சி’ வேலைதான் காரணம் என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

ஆக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது போர்தொடுக்க விரும்பிய கூட்டமைப்பு உள்வீட்டுத் தரப்புகள் முதலில் மாகாணசபைக்குள் முதலமைச்சருக்குப் பக்கபலமாக – அவரது பக்கத்தில் சகுனியாக – விளங்கும் ஐங்கரநேசனுக்கு ஆப்பு வைத்தால் அது முதலமைச்சருக்கு செமஅடியாக இருக்கும் என்று கணக்குப் போட்டன.

பின்புலத்தில் பிள்ளையார்சுழி போட்டு காய் நகர்த்தினார் அவைத் தலைவர். கொழும்பிலிருந்து ‘றிமோல்ட்கொண்ட்ரோல்’ உத்தரவு வழங்குபவர்களின் முழு ஆசியும் கிட்டிற்று. மாகாண சபையின் அமர்வுக்கு முதல் நாள் இரவு யாழ்ப்பாணம் யு.எஸ்.ஹோட்டலில் விடிய விடிய சதிமந்திராலோசனை நீடித்தது.

பிறகென்ன? முதலமைச்சருக்குக் கூடத்தெரியாமல் சத்தம் சந்தடியின்றி விடயம் ஒப்பேற்றப்பட்டது. முதலில் மாகாண சபை அமர்வில் அவைத் தலைவர் வகுத்த திட்டத்தின்படி சாதாரண விடயம் ஒன்று போல விவகாரத்தை சபைக்குக் கொண்டு வந்தார் உறுப்பினர் லிங்கநாதன். கடைசி நேரத்தில் அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான ஊழல் பட்டியல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு முதலமைச்சரைக் கோரும் தீர்மானமாக அது நிறைவேற்றப்பட்டது.

ஏதோ வடக்கு மாகாண சபையில் அமைச்சர் ஐங்கரநேசன் மட்டுமே ஊழல் செய்தவர் போலவும் மற்றைய அமைச்சர்கள் எல்லோரும் சுத்த நேர்மையான பேர்வழிகள் என்பது போலவும் அங்கு பேசப்பட்டது.

அது முற்றிலும் மூடிமறைப்பு. எல்லா அமைச்சுகளிலிலுமே ஊழல், மோசடிகள், நிர்வாகத் திறனின்மையே கோலோச்சுகின்றது.

இது எல்லாவற்றிற்குமே பிரதான காரணம் முதலமைச்சர் தான். அவர் வடக்கு மாகாண சபையைத் திறம்பட நிர்வகிக்கும் முதலமைச்சர் பணியைத் தவிர மிச்சம் எல்லாவற்றிலும் நன்கு பணியாற்றுகின்றார். தாடியும், திருநீறும், உருத்திராட்ச மாலையும், சாமிப்போக்கும், நீதியரசர் என்ற நாமும் அவருக்கு நல்ல கவசங்கள்.

முதலமைச்சர் என்ற முறையில் அவருக்கு பொதுமக்கள் சார்பில் எழுதப்படும் முறைப்பாடுகளுக்கு – முறையீடுகளுக்கு – குறைந்த பட்சம் அத்தகைய முறைப்பாடு கிடைத்தது என்று ஒருவரிப் பதில்கூட வருவதில்லை. நாட்டின் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினால் குறைந்த பட்சம் அந்தக் கடிதம் – மனு – கிடைத்தது என்று ஒருவரிப் பதிலாவது வரும்.

ஆனால், வடக்கு முதலமைச்சரின் நிர்வாகமோ சேடம் இழுக்கும் நிலையில்தான் இருக்கின்றது.

வடக்கு மாகாண சபையில் பாதுகாப்புச் சேவைகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதில் பெரும் ஊழல்கள், முறைகேடுகள் இடம்பெற்றன. பல லட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் தமக்கு விரும்பிய – தகுதியற்ற – தரப்புகளுக்கு அந்தச் சேவையை ஒப்பந்தத்துக்கு வழங்கினர். பாதிக்கப்பட்ட தரப்புகள் முழு ஆதாரங்களுடன் பல தடவைகள் முதலமைச்சருக்கு முறைப்பாடு செய்தன. பதிலே கிடையாது. எந்த நடவடிக்கையும் இல்லை.

அந்தத் தரப்பினர் முழு ஆதாரங்களுடன் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராஜாவை அணுகினார். அவர் விடயங்களை நேரடியாக முதலமைச்சரிடம் எடுத்துச் சென்றார். இப்படி நடந்திருந்தால் தவறுதான் என்று ஒப்புக்கொண்ட முதலமைச்சர் அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. பார்த்து – காத்து – இருந்த பாதிக்கப்பட்ட தரப்பினர் வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வேளையிலும் வரும் நிலைமை.

வடக்கு மாகாண சபையின் உயரதிகாரிகளின் ஊழல்கள் பற்றிய விடயங்களை ஆதாரத்துடன் கொண்டு சென்றும் – அவை பற்றி அறிந்திருந்தும் – நடவடிக்கை ஏதும் எடுக்காத வடக்கு முதலமைச்சர், தமக்கு நெருக்கமான – தமது ஆதரவுத்தூணான – தமது அமைச்சர் ஒருவருக்கு எதிரான ஊழல், மோசடி, நிர்வாகத் திறனின்மை போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து வடக்கு மாகாண சபையிலேயே ஏகமனதான தீர்மானம் முன்வைக்கப்பட்டால் தன்னும்கூட நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான்.

இந்தத் தீர்மானத்துக்கு எதிராக இருபத்தினான்கு மணி நேரத்தில் அவர் வெளிப்படுத்திய பதிலடி அதனையே உறுதிப்படுத்தியது.

‘காய்த்த மரத்தில்தான் கல்லெறி விழும்’ என்று அமைச்சர் ஐங்கரநேசனின் சேவையையும், ‘இந்தப் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’ என அமைச்சர் ஐங்கரநேசனையும் நியாயப்படுத்தி பாராட்டும் விதத்தில் முதலமைச்சர் தந்த பதில் அதனையே காட்டுகின்றது.

ஆனால், எது, எப்படியோ தனது உவமானத்தில்கூட அமைச்சர் ஐங்கரநேசனை ‘நரி’ எனக் குறிப்பிட்டு உண்மையை ஒப்புக்கொண்டிருக்கின்றார் முதல்வர் விக்கி.

ஆளும் தரப்பே எதிரணியாகப் பிரிந்து கொண்டு, வடக்கு மாகாண சபையில் நடத்தும் குளறுபடிகள், தகிடுதத்தம்கள் கண்டு சந்திசிரிக்கின்றது.

வடக்கு மாகாண சபைக்கு வேட்பாளர்களை நிறுத்தும் போது தகுதிவாய்ந்தவர்களை விடுத்து, தமக்கு சலாம் போடக்கூடிய தமது ஆதரவாளர்களுக்கு மட்டும் இடம்கொடுத்த மாவை சேனாதிராஜா போன்ற மலை விழுங்கி மகாராஜாக்கள்தான் வடக்கு மாகாண சபையின் செயல்திறனின்மை என்ற தோல்விக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பது சரியானதே!

நன்றி வசிட்டன்.

Related posts: