தமிழரின் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தது இந்திய அரசு – இந்திய விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, September 27th, 2018

தமிழரின் மாற்றுக் கருத்துக்கு இந்திய அரசு மதிப்பளித்தது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேற்கொண்ட இந்திய விஜயம் தொடர்பில் வீரகேசரி வார இதழுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

  1. கேள்வி:

நீண்டகாலமாக வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளாதிருந்த நீங்கள் கடந்தவாரம் இலங்கை நாடாளுமன்றக் குழுவில் ஒருவராக இந்தியாவுக்குச் சென்றிருந்தீர்கள் அந்தப் பயணம் எவ்வாறு அமைந்தது?

பதில்:   நான் பொதுவாகவே வெளிநாடுகளுக்குச் செல்வதை விரும்புவதில்லை. எனது மக்களுடன் நாட்டில் எவ்வளவுக்கு இருக்கமுடியுமோ அதையே விரும்புகின்றேன். சிலவேளைகளில் வெளிநாட்டுப் பயணங்கள் போக நேரிட்டால் அந்தப் பயணத்தில் எமது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோரிக்கையின் நியாயத்தை எடுத்துரைக்கவும் அந்தப் பயணங்கள் வாய்ப்பாக அமையுமாக இருந்தால் அவ்வாறான பயணங்களை நான் செய்வதுண்டு அவ்வாறானதொரு பயணமாகவே தற்போதைய இந்தியாவுக்கான பயணம் அமைந்தது. இந்தப் பயணத்தின்போது, எமது மாற்று அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும், எமது மக்களின் சமகால பிரதான பிரச்சனைகள் மற்றும் தேவைகளை எடுத்துரைக்காவும் இந்தப் பயணம் வாய்ப்பாக அமையும் என்று நம்பினேன் எதிர்பார்த்ததைப் போல் இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று நினைக்கின்றேன்.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளிநாட்டு அமைச்சர் சுஷ்மிதா சுவராஜ் மற்றம் பல முக்கியஸ்தர்களை உத்தியோக பூர்வமாகவும், தனியாகவும் சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தது. அந்தச் சந்திப்புக்களில் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக பல விடயங்களை தெளிவுபடுத்தியதுடன், போர்ச் சூழலற்ற தற்போதைய இலங்கையின் அரசியல் சூழல் தொடர்பாகவும் பல விடயங்களை தெளிவுபடுத்தக் கிடைத்தது.

அவர்களும் அதைப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அந்தவகையில் இந்தியா அரசானது முழு இலங்கையின் அரசியல் சூழல் தொடர்பாகவும், அதில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பாகவும் போதுமான புரிந்துணர்வைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.

துரதிஷ்டவசமாக இலங்கை தமிழ்த் தலைமைகள் பூகோள மற்றும் பிராந்திய போக்குகளையும், மாற்றங்களையும் புரிந்து கொண்டு நிரந்தரமானதும், சமத்துவமானதுமான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதிலும், அதில் இந்தியாவின் அக்கறையை பெற்றுக்கொள்வதிலும் அர்ப்பணிப்போடு நடந்து கொள்ளவில்லை என்பதையும் புரிந்து கொள்ளமுடிந்தது.

  1. கேள்வி:

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடனான சந்திப்பில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் இந்தியப் பிரதமரின் அக்கறை எவ்வாறு இருந்தது? அதன் மீதான உங்களின் நம்பிக்கை எவ்வாறு இருக்கின்றது?

பதில்:

தமிழர் தரப்பில் பிரச்சனைகளை தீராப்பிரச்சனைகளாக வைத்துக்கொண்டு அதில் அரசியல் சுயலாபம் அனுபவிக்கு சிலரே பிரச்சனைகளை அவநம்பிக்கையுடன் அணுகி வந்திருக்கின்றார்கள். ஆனால் நான் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற விருப்பத்துடனேயே அணுகி வந்திருக்கின்றேன். அந்தவகையில் திரு. நரேந்திரமோடியுடனான சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களடங்கிய பல கட்சிகளின் தலைவர்கள் என்றவகையில், ஏற்படுத்தப்போவதாகக் கூறப்படும் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக எடுத்துக்கூறப்பட்டது. என்னைப்பொறுத்தவரை புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதை வரவேற்கத் தயாராக இருக்கின்றேன். ஆனால் புதிய அரசியலமைப்பு வருமா? என்பது நிச்சயமற்றதாகவே இருக்கின்றது என்பதை பிரதமர் மோடி அவர்களிடம் எடுத்துரைத்தேன்.

எனவே புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படுவதற்கு எத்தனை காலம் எடுக்கும் என்பது தெரியாத நிலையில் ஏற்கனவே அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகக் கிடைக்கப்பெற்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து இறுதித் தீர்வை நோக்கி முன்னேறுவதே நடைமுறைச்சாத்தியமானது என்பதையும், அதை முழுமையாக நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டிய அவசியமில்லை என்பதையும் எடுத்துரைத்தேன். அரசியல் தீர்வுக்கான அபிலாஷைகளை சுமந்து வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களின் நாளாந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்,அபிவிருத்தியின் அவசியம்,சுய பொருளாதாரத்தில் வாழ்வதற்கான தொழிற்துறைகளின் தேவை என்பவற்றையும் எடுத்துரைத்தேன். குறிப்பாக காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்தல், பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் புனரமைப்புச் செய்யவேண்டும் என்பதாகும்.

எமது கோரிக்கைகளை மிகவும் அக்கறையோடு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதையும், அமைச்சர்கள் கிரகித்துக்கொண்டதையும் அவதானித்தேன். ஒரு சம்பிரதாய சந்திப்பாக இல்லாமல்,இந்திய அரசின் அக்கறையும் அதில் வெளிப்பட்டது.

நான் எப்போதும் தீர்வுகளை நோக்கியே சிந்திப்பதும், அதற்காக முயற்சிப்பதும் வழமையாகும். அந்தவகையில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும், அமைச்சர்களையும் நம்புவதா? இல்லையா? என்று யோசிக்கவில்லை. நான் எதையும் நம்பிக்கையோடுதான் அணுகுகின்றேன்.

தீர்வுக்காக வாய்க்கப்பெற்ற பல நல்ல வாய்ப்புக்களை தமிழ்த் தலைமைகள் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் தவறவிட்டதற்குகக் காரணம் இதுதான்,முதலாவது காரணம் வாய்ப்புக்கிடைத்த தமிழ்த் தலைமைகள் எவையும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வைக்காண வேண்டும் என்ற உறுதியோடும், அதன் மீதான நம்பிக்கையோடும் அணுகவில்லை என்பதுதான். நம்பிக்கையீனத்தோடும் அவற்றை அணுகியதும்,அந்த வாய்ப்புகளை சாதகமாக்கிக்கொள்ள உண்மையாக உழைக்க எந்தத் தமிழ்த் தலைமையும் முன்வராததுமே தமிழ் மக்களின் இத்தனை பின்னடைவுகளுக்கும், இழப்புக்களுக்கும் காரணமாகும்.

நான் எமது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், பசிபட்டினியிலிருந்து அவர்களை பாதுகாக்கவும் தென் இலங்கை அரசுகளுடன் இணக்க அரசியல் வழிமுறையில்,கடினமாக உழைத்திருக்கின்றேன். ஆனால் அரசியல் தீர்வு நோக்கி பலமான முன்னெடுப்புக்களை எடுப்பதற்கு போதுமான அரசியல் பலம் கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்ததை வைத்துக்கொண்டு மாகாணசபை முறையையும், அதன் அதிகாரங்களையும் பாதுகாத்திருக்கின்றேன்.

தமிழ் மக்களின் தேவைகளை முன்வைத்து, யுத்தத்தை நடத்திய அரசுகளுடனும், யுத்தத்தை வெற்றிகொண்ட அரசுடனும் நான் மேற்கொண்ட இணக்க அரசியல் தந்திரோபாயமானது நம்பிக்கையின் மீதே கட்டியெழுப்பப்பட்டது. நம்பிக்கையீனத்துடன் எனது முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பல தோல்விகளையே நானும் சந்திக்க வேண்டியிருந்திருக்கும்.

எனவே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இந்திய அமைச்சர்களுடனான சந்திப்புக்கள் அதன் மீது அவர்கள் வெளிப்படுத்திய அக்கறையின் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன், எனது கோரிக்கைகள் பலாபலன்களாக எமது மக்களுக்கு வந்துசேறும். இதில் துரதி~;டம் என்னவாக இருக்குமென்றால், நாளை எனது கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றும்போது அதற்கு உரிமை கொண்டாட பலர் வந்துவிடுவார்கள் என்பதுதான்.

  1. கேள்வி:

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நாடாளுமன்றக்குழு இந்தியாவில் தங்கியிருக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் இந்திய அரசு அழைத்திருந்தது. இதன் ஊடாக இந்திய வெளிப்படுத்தும் செய்தி என்னவாக இருக்கும்?

பதில்:

நாங்கள் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணமாக முன்னரே சென்றிருந்தோம், மகிந்த ராஜபக்ச அவர்கள் சுப்பரமணிசுவாமியின் அழைப்பை ஏற்று அங்கு வருகை தந்திருந்தார். அவரும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரையும் சந்தித்திருக்கின்றார்.

இன்றைய இலங்கைச் சூழலில், ஆட்சிமாற்றம் ஒன்றுக்காக வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டவர்களாக தமது அதிருப்தியை வெளிப்படுத்திவருவதும், நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்காரணமாக ஆட்சியாளர்கள் மீதான அதிருப்திகள் காரணமாகவும், தென் இலங்கையில் மாறிவரும் அரசியல் சூழலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரின் தேர்தல் வெற்றிகள் தொடர்பாகவும் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள அவதானிப்புக்கள் காரணமாகவும், மகிந்த ராஜபக்சவுடனான இந்திய தரப்புகளின் சந்திப்புகள் அமைந்திருக்கலாம்.

ஆனால் எங்களது குழுவின் பயணத்திற்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயணத்திற்கும் தொடர்புபட்ட காரணங்கள் எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை.

  1. கேள்வி:

இந்தியாவுக்குச் சென்றிருந்த நாடாளுமன்றக் குழுவில் உள்ளடங்கியிருந்த ஏனைய கட்சித் தலைவர்கள் வேளைக்கு நாடு திரும்பியிருந்தார்கள், நீங்கள் தாமதமாகவே நாடு திரும்பியிருக்கின்றீர்கள் ஏதும் விஷேடமான காரணங்கள் உள்ள?

பதில்:

ஏற்கனவே நான் கூறியதைப்போன்று உத்தியோகபூர்வ சந்திப்புக்களைத் தாண்டியும் பல தனியான சந்திப்புக்கள் எனக்கு இருந்தது. அதற்காக உத்தியோகபூர்வமான சந்திப்புக்களை முடித்துக்கொண்டு நான் நாடு திரும்பாமல், சில நாட்கள் டெல்லியில் தங்கிவிட்டேன், பின்னர் தமிழ் நாட்டுக்கும் சென்றிருந்தேன். அங்கும் பல பேருடன் சந்திப்புக்களை செய்திருந்தேன். அந்தச் சந்திப்புக்கள் தொடர்பாக இப்போது பேசுவது உசிதமாக இருக்காது.

இந்திய அரசோடு மட்டுமல்லாமல், இலங்கை அரசானது தமிழ் நாட்டின் அரசுடனும் நெருக்கமான உறவுகளைப் பேணவேண்டும். என்று நான் ஏற்கனவே வலியுறுத்தி வந்திருக்கின்றேன். அந்தவகையில் சில அரசியல் மற்றும் ஊடக முக்கியஸ்தர்களையும், இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளவர்கள் சிலரையும் தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கலந்துரையாடினேன்.

தமிழ் நாட்டுக்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கிடையே வர்த்தக உறவுகளை எதிர்காலத்தில் பலப்படுத்துவது தொடர்பாகவும் எனது சந்திப்புக்களில் பலருடன் எனது கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றேன். அவர்களும் அதற்கு தயாராக இருக்கின்றார்கள். மக்கள் எனக்கு போதுமான அரசியல் அதிகாரத்தை வழங்குவார்களாக இருந்தால் வடக்கு மாகாணசபையைப் பொறுப்பேற்று முதல் ஆறு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் வடமாகாணத்தை வளமான மாகாணமாக மாற்றவும், தமிழ் மக்களின் பொருளாதார எழுச்சிக்கும் பலமான அத்திவாரத்தை ஏற்படுத்தி பணிகளை முன்னெடுப்பேன் என்ற எனது நடைமுறைச்சாத்தியமான அரசியல் பயணத்தின் நோக்கத்தை என்னைச் சந்தித்தவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன்.அவர்களிடமிருந்து அதற்க வரவேற்புக் கிடைத்தது.

  1. கேள்வி:

நீங்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு இந்திய அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அந்தச் செய்தியை ஒட்டிய ஏதேனும் சந்திப்புக்கள் நடைபெற்றதா?

பதில்:

வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், விக்கினேஸ்வரனும் அதை சரியாகச் செய்யவில்லை என்ற அதிருப்தியும், மாகாணசபை முறைமையை செயற்திறனுள்ள ஒருவர் பொறுப்பேற்று வெற்றிகரமாக முன்னகர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இந்திய முக்கியஸ்தர்களிடம் இருக்கின்றது.

உணர்ச்சியூட்டும் வெறும் அரசியல் கருவியாக மாகாணசபை அதிகாரத்தை வீணடிப்பதை அங்கே எவரும் விரும்பவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்கள் ஈடற்ற விலையைக் கொடுத்திருப்பதைப்போன்று, இந்திய அரசும் ஒரு விலையைக்கொடுத்துள்ளது. ஆகவே இலங்கை இந்திய ஒப்பந்தத்துடனோ,தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துடனோ எவ்விதமான பங்களிப்பையும் செய்யாதவர்களுக்கும், அதை வேடிக்கை பார்த்து தமது குடும்பங்களை பாதுகாப்பாக வெளிநாடுகளில் குடியமர்த்திவிட்டு,அப்பாவி மக்களின் சாவிற்கு காரணமாக இருந்தவர்களுக்கும் மாகாணசபை அதிகார அலகின் அவசியமோ,அதை எவ்வாறு முன்னகர்த்திச் செல்லவேண்டும் என்ற அக்கறையோ இருக்கப்போவில்லை.

அந்தவகையில் ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பப் போராளியாகவும்,இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தேசிய அரசியல் நீரோட்டத்தில் தொடர்ச்சியாக ஆறாவது முறையாகவும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஒரே தமிழ் அரசியல் தலைமை என்ற அனுபவமும்,நான்கு தடவைகள் மத்திய அமைச்சராக இருந்து பல சவால்களை சந்தித்துப் பணியாற்றிய அணுபவமும் நிறைந்த எனது தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு மாகாணசபை நிர்வகிக்கப்படுமாக இருந்தால், இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தை அடைந்துகொள்ள முடிவதுடன்,13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான பலாபலனை தமிழ் மக்கள் அனுபவிக்கவும் என்னால் உழைக்கமுடியும் என்பதையும் வரலாறு இன்று நிதர்சனமாக்கி இருக்கின்றது.

அதேவேளை அரசியல் போட்டி காரணமாகவும், உள்நோக்கத்துடனும் கடந்த காலத்தில் என்மீதும், கட்சி மீதும் அபாண்டமாக பல கொலைக் குற்றச்சாட்டுக்களும், பழிகளும் பரப்பப்பட்டது. அந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து காலம் எங்களை நிராபராதிகள் என்றும், உண்மையான குற்றவாளிகள் யார்? என்றும் வெளிப்படுத்தியுள்ளது. எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவதூறுகளிலிருந்து நீதிமன்றங்களின் விசாரணைகள் எம்மை நிரபராதிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறு எம்மீதான கறைகள் அகன்றுவரும் நிலையில் எம்மைப் பற்றிய தவறான புரிதல்களும் தெளிவடைந்துவருகின்றன. எமக்கு அதிகாரங்கள் கிடைத்த சந்தர்ப்பங்களை நாங்கள் உச்சபட்சமாக மக்களின் நலனில் நின்று சேவை செய்திருக்கின்றோம் என்றவகையில் எம்மீது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்தியாவின் அந்த சமிக்ஞையை பக்கபலமாக வைத்துக்கொண்டு மாகாணசபையை நாம் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வோம் என்று நானும் நம்புகின்றேன்.

  1. கேள்வி:

சூளைமேட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உங்களை குற்றவாளியாக விசாரிக்கப்படுகின்ற நிலையில், இந்திய விஜயமும் செய்திருக்கின்றீர்கள். அந்த விசாரணைகள் இப்போது எந்த நிலையில் இருக்கின்றன?

பதில்:  பல தடவைகள் நான் தெளிவுபடுத்தியுள்ளேன் சூளைமேட்டில் நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் அந்த சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த தோழர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்கள். அப்போது எனக்கும்,ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திற்குமிடையே சில பிரச்சனைகள் இருந்ததால் அந்தப் பிரச்சனைகளுக்கு சுமூகமாகத் தீர்வைக் காண்பதற்கு முயற்சித்துக்கொண்டு இருந்தேன்.

சூளைமேட்டில் அந்தச் சம்பவம் நடைபெற்றதாக எனக்கு செய்தி கிடைத்ததும்,அங்கு இருந்த தோழர்களை பாதுகாக்கவும், அந்தப் பிரச்சனையை தீர்க்கவும் அந்த இடத்திற்கு உடனடியாக சென்றிருந்தேன். நான் அங்கு சென்ற நேரத்தில் அங்கு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரை முச்சக்கர வண்டியில் மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்கள். இந்த உண்மையைத்தான் பொலிஸாரின் பதிவும் வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே நான் தேடப்படும் நபரும் அல்ல. நீதிமன்றத்தின் முன்னால் குற்றவாளியும் அல்ல.

என்மீது கொலைக் குற்றம் சுமத்தியவர்களும், தேடப்படும் குற்றவாளி என்று அவதூறு சுமத்தியவர்களும் எனது அரசியல் எதிராளிகளின் கைக்கூலிகளே அன்றி வேறு யாருமல்ல. நான் அந்தச் சம்பவம் தொடர்பில் கானொளி ஊடாக எனது சாட்சியத்தை வழங்குவதற்கு முன்வந்ததானது,ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தை இரத்தமும், சதையுமாக வளர்த்தவன் என்ற உணர்வும், எனது தோழர்களுக்காக நான் முன்னிற்க வேண்டும் என்ற தோழமையுடனான தார்மீகப் பொறுப்புமேயாகும்.அதைத்தான் நான் செய்தேன்.

அதற்காகத்தான் கொலைக் குற்றவாளி என்றும், தேடப்படும் குற்றவாளி என்றும் அவப்பெயரைச் சுமந்திருந்தேன். அந்த அவப்பெயரைத் துடைப்பதற்காகவும் இந்தியப் பயணத்தை பயன்படுத்திக்கொண்டேன். எனது நோக்கம் நிறைவேறியிருக்கின்றது. நான் டெல்லிக்கும், தமிழ் நாட்டிற்கும் சென்று எனது காரியங்களை முடித்துக்கொண்டு எவ்விதமான பிரச்சனைகளும் இல்லாமல் நாடு திரும்பியிருக்கின்றேன்.

ஒருவேளை இவர்கள் கூறுவதைப்போன்று நான் தேடப்படும் குற்றவாளியாகவோ, கொலைக் குற்றவாளியாகவோ இருந்திருந்தால்,இந்தப் பயணம் சாத்தியப்பட்டிருக்காது. அல்லது இந்தியாவில் எனக்கு சட்டப்பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். அவ்வாறு எதுவும் இருக்கவில்லை. எனவே என்மீது அபாண்டம் சுமத்தியவர்களுக்கு தகுந்த பதில் கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

(நன்றி வீரகேசரி 20.09.2018)

Related posts:

புனர்வாழ்வுபெற்ற போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு சலுகை அடிப்படையிலான வங்கிக்கடன் - டக்ளஸ் தேவான...
அதிகளவு அரச ஊழியர்கள் இருந்தும் மக்களது தேவைகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில்...

வடக்கு - கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வேண்டும் - பிரதமரிடம் ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் இழப்பீட்டுக் கொடுப்பனவுக...
வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...