குடும்பத்தைப்போல் சமூகத்தையும் கரிசனையுடன் வழிநடத்தக்கூடியவர்கள் பெண்களே – மகளிர்தின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, March 8th, 2017

பெண்களின் சமத்துவத்திற்கும், பாதுகாப்பிற்கும் நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதுடன், அதற்கான விழிப்புணர்வுப் போராட்டங்களை சமூக மட்டத்தில் நடத்த வேண்டும் என்பதை கட்சியின் தீர்மானங்களில் ஒன்றாகவும் வகுத்துக் கொண்டுள்ளோம். அதனடிப்படையில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும்,மதிக்கப்படவும் நாம் ஒன்றிணைந்து போராடுவோம் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள மகளிர்தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முகங்கொடுத்த தமிழ் இனத்தை வாழ்வாதாரத்திலும், பொருளாதாரத்திலும் தூக்கி நிறுத்துவதற்கு போராடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பணிகளில், பெண்களின் பங்களிப்பும் இன்றியமையாததாகும். சமூகத்தில் பெண்களுக்கான அரசியல் அங்கீகாரத்தையும், அதற்கான வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுப்பதில் ஆயுதப் போராட்ட காலத்திலும், சம காலத்திலும், நாம் முன்மாதிரியாகவே செயற்பட்டு வருகின்றோம். தேர்தல்களில் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீட்டை நாம் வரவேற்றபோதும், அந்த ஒதுக்கீடு ஐம்பது வீதமாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் வருகின்றோம். அதற்குக் காரணம்,பெண்கள் சமூகப் பணிகளில் பங்கெடுத்து உழைக்க முன்வருவார்களேயானால் குடும்பத்தைப்போல், முன்னேற்றுவதில் சமூக அக்கறையுடன் வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது.

மகளிர் தினத்தை சம்பிரதாய நிகழ்வாக அனுஷ்டிப்பதைவிடவும், சமூகத்தில் துணையை இழந்த மற்றும் குடும்ப தலைமைத்துவத்தை ஏற்று, பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தபடி சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் சுயபொருளாதாரத்தை மேம்படுத்தவதற்காகவும், பாதுகாப்பை பலப்படுத்தவதற்காகவும் மட்டுமன்றி, அவர்களது பிள்ளைகளுக்கான உணவு, சீரான கல்வி, சமூகப் பாதுகாப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தப்படுவதற்கு அனைத்துப் பெண்களும் முன்வந்து போராடுவதே உண்மையான மகளிர்தின அறைகூவலாக இருக்கும்.

தமிழ்மக்களின் வாக்குகளை அபகரித்து அரசியல் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக் கண்டிருக்க வேண்டும். குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்து அவலங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கண்டிருக்கவேண்டும். அதுதேசிய பாதுகாப்புக்கு எதிரானதல்லஅதற்கு அரசாங்கத்தின் ஒப்புதலோ, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமோ பெறப்பட வேண்டிய தேவையில்லை.

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைக் காண்பதற்கு மாகாணசபையினது அதிகாரமும், மத்திய அரசாங்கத்துடனான இணக்க அரசியல் வழிமுறையும் போதுமானதாகும். ஆனால் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் அக்கறையோ, ஆற்றலோ அவர்களிடம் இல்லை. ஆனால் தமது குடும்பங்களை பல்வேறு வசதி வாய்ப்புகளுடன் சொகுசாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ளவே, கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்களே தவிர, சமூகத்தில் பெண்கள் உட்பட எமது மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களைத் துடைப்பதற்கு அவர்கள் விருப்பமற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.

இந்த நிலைமையை மாற்றியமைக்கவும், சமூகத்தில் சவால்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் துயர்துடைக்கவும் அவர்களது உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குரல் கொடுத்து போராடுவதற்கு சமூகத்திலுள்ள அனைத்துப் பெண்களும் உறுதி பூணவேண்டும்.

பெண்கள் முன்னெடுக்கும் உரிமைசார்ந்த போராட்டங்களுக்குசரியான வழியைக்காட்டி,அவற்றுக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பை வழங்கவும்ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அர்ப்பணிப்போடு செயற்படும் என்பதை மகளிர்தின செய்தியாகத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள மகளிர்தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

Related posts: