நாளைமுதல் வழமைக்கு திரும்புகின்றது குடிவரவு, குடியகல்வு திணைக்களம் – ஆனாலும் சுகாதார வழிமுறைகளுக்கு அமையவே பணிகள் முன்னெடுப்பு!

Sunday, May 10th, 2020

நாளைமுதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அன்றாட நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுமென்று அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொது விடுமுறை நாட்களை தவிர, ஏனைய நாட்களில் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வரும் பொதுமக்கள் ஊரடங்குச் சட்ட காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளையும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கும் நடவடிக்கை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை முன்னெடுக்கப்படும்.

சாதாரண சேவையின் கீழ், கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கும் நடவடிக்கை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை முன்னெடுக்கப்படுமென, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்தது.

அத்தோடு கடவுச்சீட்டு தகவல்களில் திருத்தம், குடியுரிமையை பதிவு செய்தல், இந்திய மற்றும் சீன வம்சாவளியை சேர்ந்த நபர்களின் குடியுரிமை தொடர்பான விடயங்கள், கடவுச்சீட்டு தரவு பக்கத்தில் தகவல்களை உள்ளீடு செய்தல் மற்றும் கடவுச்சீட்டு தரவு பக்கம் மற்றும் ஏனைய பக்கங்களின் அரபு மொழிபெயர்ப்பை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை முன்னெடுக்கப்படுமென, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: