நாட்டின் உள்ளக விடயங்கள் தொடர்பில் விமர்சனங்களை மேற்கொண்டு அறிக்கைகள் முன்வைக்கப்படுவது பொருத்தமற்றது – ஐநா கூட்டத் தொடர் குறித்து அமைச்சர் பீரிஸ் விளக்கம்!
Friday, March 18th, 2022ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதிகளின் குழு முன்வைத்த தர்க்கரீதியான விடயங்கள் மூலம் நாட்டுக்கு பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் அடிக்கடி பல்வேறு அறிக்கைகளை கோருவதன் மூலமான பயன்கள் என்ன? நாடு ஒன்றின் உள்ளக விடயங்களில் இந்த வகையில் அழுத்தங்களை மேற்கொள்வதன் நோக்கம் என்ன? அனைத்து நாடுகளையும் ஒரே மாதிரி கருதி இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்துவது போன்ற விடயங்களை இக்குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை பிரதானியிடம் கேள்வி எழுப்பியதாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெளிவுபடுத்தினார்.
மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக 45 நாடுகளில் 32 நாடுகள் ஆதரவு தெரிவித்ததாக சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு சமகால அரசாங்கம் உடன்பட்டிருந்தால் எஞ்சிய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார். நாட்டை காட்டிக் கொடுப்பதற்கு சமகால அரசாங்கம் எந்த வகையிலும் தயார் இல்லை என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக விடுக்கப்படும் அறிக்கையின் சில விடயங்களில் உடன்பட முடியாது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், ஆணையாளர் இந்த அறிக்கையில் உள்ளடக்கியுள்ள பெரும்பாலான விடயங்கள் இலங்கையின் உள்ளக நடவடிக்கைகள் தொடர்பானது. இந்த விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் விடயங்களுக்கு எந்தவகையிலும் பொருத்தமற்றது என்றும் குறிப்பிட்டார்.
இது மாத்திரமன்றி 3 இல் 2 பெரும்பான்மை மக்களின் பலத்தை பெற்றுள்ள சமகால அரசாங்கத்தில் தலையீடுகளை மேற்கொள்வதற்கு சர்வதேசத்திற்கு எந்த வகையிலும் உரிமை இல்லை என்றும் நாட்டின் உள்ளக விடயங்கள் தொடர்பில் விமர்சனங்களை மேற்கொண்டு அறிக்கைகள் முன்வைக்கப்படுவது பொருத்தமற்றது என்றும் அவர் கூறினார்.
இது ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை சட்டங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் நேரடியாக முரண்பட்டதாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|