இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் அகதி மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை நீக்குவதற்கு டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த யோசனைகளுக்கு பிரதமரின் சாதகமான பதில்கள்!
Thursday, May 5th, 20161983ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கலவரங்கள், யுத்தம் மற்றும் யுத்தப் பாதிப்புகள் காரணமாக காலங்காலமாக இலங்கையிலிருந்து சுமார் 3,04,269 பேர் அகதிகளாக இந்திய, தமிழ்நாட்டுக்குச் சென்றதாகவும், இதில் சுமார் 2,04,269 பேர் இதுவரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை திரும்பியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் இன்னும் முகாம்களில் – முகாம் பதிவில் சுமார் 66,000 பேரும், முகாம்களுக்கு வெளியே காவல்த்துறையினரின் பதிவில் சுமார் 34,000 பேரும் தங்கியிருப்பதாகவும், இவர்களில் குறிப்பிட்ட சிலர் அவ்வப்போது இலங்கை திரும்பிக் கொண்டிருப்பதாகவும் ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது. தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கியிருக்கும் மக்களுக்கு, மாதாந்தம் குடும்பத் தலைவருக்கென 1000 ரூபாவும், ஏனைய 02 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கு 750 ரூபாவும், 02 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு 400 ரூபாவும் என வாழ்வாதார உதவிகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கொடுப்பணவுகள் போதுமானதாக இல்லாத நிலையில், இம் மக்களில் பலரும் வேறு பல கூலி வேலைகளிலும் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் கடந்த பல வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இம் மக்கள், இலங்கையில் தற்போது சுமுகமானதொரு சூழல் ஏற்பட்டிருக்கும் காரணத்தால், இலங்கை திரும்ப முனையும்போது, பல்வேறு சட்டச் சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதால், அவர்களில் பலருக்கு தங்களது நாட்டுக்குத் திரும்பிவர இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது எனத் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அந்த வகையில், பிள்ளைகளைப் பதிவு செய்ய தமிழகத்திலுள்ள இலங்கைக்கான துணைத் தூதரகம் பிள்ளையின் பிறப்புச்சான்று, தாயினதும் தந்தையினதும் பிறப்புச்சான்றுகள் மற்றும் திருமணப் பதிவினைக் கோருவதாகவும், இவை நான்கும் முக்கியம் எனக் கூறப்படுவதாகவும் தெரியவருகிறது.
இடப்பெயர்வுகள் இடம்பெற்று பலவருடங்கள் ஆன நிலையில் பலரது பிறப்புகள் பதிவு செய்யப்படாத நிலையே காணப்படுகின்றது. இவர்களில் பலர் இடம்பெயரும் நிலையில் வழியில் பிறந்தவர்களாக, படகுகளில், மன்னார்க் கடற்கரையில் பிறந்தவர்களாக இருக்கின்றனர். மலையகத்தில் பிறந்தவர்கள், அவர்களது பெற்றோர் இல்லாத நிலையில் தங்களது பிறப்புகள் பற்றிய விபரங்கள் தெரியாது, பதியாமல் உள்ளனர். மேற்படி விதிமுறைகளை மாற்றி இப் பிள்ளைகளின் பதிவுகளை இலகுவாக்குதல், அகதி முகாம் பதிவுகளிலும், காவல்த் துறையின் பதிவுகளிலும் குறிப்பிட்ட காலம் இலங்கை அகதிகளாக வசித்து வருபவர்கள் தங்கள் பதிவுகளை அங்குள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் உறுதி செய்து, அதனை இலங்கைத் துணைத் தூதுவர் பரிந்துரை செய்தால் அதனை ஒரு சட்ட ஓழுங்காக ஏற்று இப் பிள்ளைகளின் பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல், முறைசாரா திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளின் பிறப்புகளைப் பதிவு செய்வதற்கு ஒழுங்கு விதிகளை உருவாக்குதல், தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்த காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை வழங்க தண்டக் கண்டணங்கள் அறவிடப்படுவதை நிறுத்துதல்,
தமிழகத்தில் திருமணம் முடித்தவர்களுக்கும் இலங்கையில் திருமணம் முடித்த சிலருக்கும் திருமணப் பதிவுச் சான்றுகள் உள்ளன. ஆனால், இலங்கையில் திருமணம் செய்து பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் பலர் இருக்கும் நிலையில், இவர்களது குழந்தைகளின் பிறப்புகளை பதிவு செய்வதற்கான இலகுவானதொரு நடவடிக்கையினை எடுத்து உதவுதல், தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள திருமண பதிவுச் சான்றுகளை இலங்கையில் ஏற்றுக் கொள்ளல், அல்லது, அதில் என்ன மாற்றங்கள் அல்லது அதற்கு பதிலாக என்ன ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை அம் மக்களுக்குத் தெளிவுபடுத்தல், தமிழகத்தில் பிறந்து தற்போது 20 வயதைத் தாண்டியுள்ளவர்களுக்கு இலங்கை குடியுரிமைச் சான்று வழங்க தற்போதுள்ள நடைமுறைகளால் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், இதனை இலகுபடுத்தல், இவர்கள் தங்களது இலங்கை அகதிகளுக்கான பதிவுகளை உறுதிசெய்து, குடியுரிமையைப் பெறக்கூடிய வகையிலான ஏற்பாடொன்றை நடைமுறைப்படுத்தல்,
தமிழகத்தில் உள்ள இலங்கை மக்கள் இலங்கை திரும்பிட ஒரு வழி கடவுச் சீட்டு வழங்கப்படுவதாகவும், இது வழங்கப்படுவதற்கான காலம் அதிகளவு என்பதால் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அதே நேரம் இதன் பயன்பாட்டுக் காலம் ஒரு வருடமென்றும், தந்தை இல்லாத சிறு குழந்தைகளை அழைத்து வருவதில் இலங்கை தூதுவரின் நிபந்தனைகள் காரணமாகப் பாரிய சிரமங்களை அம் மக்கள் எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடவுச் சீட்டு வழங்கப்படும் காலத்தை குறைத்தல், அதன் பயன்பாட்டுக் காலத்தை இரண்டு வருடங்களாக அதிகரித்தல், தந்தை இல்லாத சிறு குழந்தைகளை அழைத்துவர தாயின் ஒப்புதல் வாக்குமூலம் மாத்திரம் பெற ஏற்பாடுகளைச் செய்தல்,
இலங்கையர்கள் வெளிநாடுகளில் கல்வி பயின்றால், அதனை இலங்கையில் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளைப் பெற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிய வேண்டும் என்றும், அதற்கு சுமார் 3,000.00 ரூபா வரை செலுத்த வேண்டும் என்றும், வெளிநாடுகளில் தொழில் கல்வி கற்றவர்கள் சுமார் 30,000 ரூபா வரை செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் வெளி நாடுகளுக்குச் சென்று கல்வி பயில்கின்ற ஏனையவர்களுடன் மேற்படி இந்தியாவிலுள்ள இலங்கை அகதி மக்களை ஒப்பிடாமல், இவர்களது நிலை கருதி இவ்வாறான அறவீடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல், அத்துடன், மேற்படி கல்விச் சான்றுகளை எவ்வாறு முறைப்படுத்தி இவர்கள் இலங்கை திரும்பும்போது கொண்டுவர வேண்டும் என்பதையும் முன்கூட்டியே இவர்களுக்கு அறிவித்தல், இலங்கைத் திரும்புகின்ற இம் மக்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்த காலத்தில் தாங்கள் பயன்படுத்திய மற்றும் சேமித்த பொருட்களை கொண்டுவருவதில் வரையறைகள் விதிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதனால் இம் மக்கள் தங்களது பொருட்களை கொண்டு வருவதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவர்கள் இலங்கை திரும்பும் நிலையில் அவர்களுக்கான உடைமைகள் எதுவும் இங்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளும் இல்லை.
இதனை கருத்தில் கொண்டு இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாடு சென்ற இம் மக்கள் ஒரே தடவையில் பெருந்தொகையிலானோர் திரும்பி வரும்போது, அவர்களுக்கும் அவர்களது உடைமைகளை கொண்டுவருவதற்கும் ஏதுவாக தமிழகத்திற்கும் இலங்கையின் வட பகுதிக்குமிடையில் இலவச கப்பல் சேவை ஒன்றை விஷேட – தற்காலிக ஏற்பாடாக செய்து உதவுதல், அல்லது, இவர்கள் தாங்களாகவே இந்தப் பொருட்களை கொழும்பு – தூத்துக்குடி சரக்கு கப்பல் மூலம் கொண்டுவர அனுமதி வழங்குதல், கொண்டுவரப்படும் இம் மக்கள் பயன்படுத்திய பொருட்களுக்கு சுங்கத் தீர்வை விதிக்காமல், அப் பொருட்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தல், இலங்கை திரும்பும் அகதிகளுக்கு காணிகள் இல்லாத நிலையில் வீடமைப்புத் திட்டங்கள் மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுத்தல்,
கடந்த சுமார் 30 வருட யுத்தம் காரணமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணிப் பிரச்சினை அதிகமாகக் காணப்படுகின்ற காரணத்தினால், அரசு, காணிக் கச்சேரிகளை நடத்தி, இவ்வாறு இடம் பெயர்ந்த மக்களுக்கும், யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஏனைய அனைத்து மக்களுக்கும் காணி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தல், அரச மற்றும் பொது காணிகளை இனங்கண்டு, அவற்றில் குடியேற்றத் திட்டங்களை அமைத்து, காணிகளற்ற இந்த மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுத்தல், இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் அகதி மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள், வாழ்வாதார உதவிகள், அடிப்படை வசதிகள் என்பன வழங்குதல் போன்ற யோசனைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில்; முன்வைத்திருந்தார். இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் சாதகமான பின்வரும் பதில்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்கள் மீள இந்நாட்டுக்கு வருகை தருவதை ஊக்குவிப்பதும், அதற்கென தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ரீதியிலான அல்லது ஏனைய தடைகள் அனைத்தையும் நீக்கி, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதும் தற்போதைய அரசின் கொள்கையாகும் என்பதை வலியுறுத்துகின்றேன்.
தற்போது அகதிகளாக இந்தியாவில் இருக்கின்ற மக்களின் பிள்ளைகளின் பிறப்பினைப் பதிவு செய்வது தொடர்பிலும், அம் மக்களின் திருமணங்களைப் பதிவு செய்வது தொடர்பிலும் சென்னையிலுள்ள இலங்கைக்கான துணை தூதரக அலுவலகம் ஊடாக தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கென அதன் துணைத் தூதுவர் துணை பதிவாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அம் மக்களது பிள்ளைகளை இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்வதற்காக மிகவும் இலகுவான முறைமை ஒன்று பின்பற்றப்படுவதுடன், இதற்கென பெற்றோர்களினதும், பிள்ளைகளினதும் பிறப்புச் சான்றிதழ்களுடன் சென்னையிலுள்ள இலங்கையின் துணைத் தூதரக அலுவலகத்தின் பரிந்துரை மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அவ்வாறே, 2003ம் ஆண்டு முதல் 22 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளை பிரஜைகளாக பதிவு செய்வதற்கு அடிப்படைக் கட்டணங்களோ அல்லது தாமதக் கட்டணங்களோ அறவிடப்பட மாட்டாது. 22 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் தொடர்பிலும் இதே முறைமையை பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இருக்கின்ற இந்த அகதி மக்கள் மீள இந் நாட்டுக்கு வருகை தருவதற்குத் தேவையான கடவுச் சீட்டு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் மூலமாக 2 – 4 வாரங்களுக்குள் தயார் செய்து அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறே, இந் நாட்டுக்கு வருகை தருகின்ற மேற்படி அகதிகள் குடும்பங்கள் மீளக் குடியேறத் தேவையான காணிகளை வழங்குவதற்கு மாவட்ட செயலகங்கள் மூலம் காணிக் கச்சேரிகள் நடத்தி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறே, அக் குடும்பங்களை மீளக் குடியேற்றும் முகமாக வீடமைப்புத் திட்டம், உலருணவு, குடி நீர், சுகாதார வசதிகள் உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கவும், அவர்களது வாழ்வாதார வழிகளை மேம்படுத்துவதற்குமான பல திட்டங்களை 2016ம் வருடத்திற்குள் செயற்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்ற மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், ஏற்கனவே குறிப்பிட்ட சட்ட ரீதியிலான முறைமைகளில் ஏதேனும் சிக்கல்கள் காணப்பட்டால், அது தொடர்பில் உள்துறை விவகாரங்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சினூடாக உரிய செயற்பாடுகளைகளை எடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Related posts:
|
|