கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் அதிகாரப் போட்டிகளால் கல்வி பாழடைகின்றது – தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம்!

Sunday, February 3rd, 2019

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்கால மாணவச் செல்வங்களை முறையாக வழிப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் உள்ளது. அவர்களிடம் பதவிப் போட்டிகளால் இந்த இரண்டு மாகாணங்களும் கல்வியில் கடைசி இடங்களில் தொடர்ந்தும் நீடிக்கப்போகின்றன. இத்தகைய செயல் வெட்கக்கேடானது என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் பதவிப் போட்டிகளால் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் நீதிமன்றம் வரை செல்கின்றனர். ஒரு கல்வி நிர்வாக சேவை அதிகாரிக்கு பதவி கொடுத்தால் மற்றையவர் தனக்கே அது கிடைக்க வேண்டுமென்று வழக்குப்போடுவதும் பின்னர் அமைதியாக இருந்துகொண்டு அரசியல்வாதிகளை நாடுவதுமாக உள்ளனர். இவர்களுக்குக் கீழுள்ள கல்விப்புலம் சார்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் இவர்களைப் பற்றிய எண்ணக்கரு எவ்வாறு உயர்வாக இருக்க முடியும்? இதுவா மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் புத்திமதி?

கிழக்கு மாகாணத்தில் முன்னைய ஆளுநரால் ஒருவர் மாகாணக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட இன்றைய ஆளுநர் அவரை மாற்றி முன்னைய மாகாணக் கல்விப் பணிப்பாளரையே மாகாணக் கல்விப் பணிப்பாளராக நியமித்துள்ளார். இது ஆளுநரின் தவறல்ல. கல்வி நிர்வாக சேவையில் உள்ள அதிகாரிகளிடையே நடைபெறும் அதிகாரப்போட்டி.

பணக்கொடுக்கல் வாங்கல்களோடு தொடர்பில்லாத மாணவ மனித மனங்களோடு தொடர்புடைய ஆசிரியர்களை ஏழு வருடங்களுக்கு மேல் ஒரு பாடசாலையில் வைத்திருக்கக் கூடாது என்று சட்டம் போடுகின்ற பணக்கொடுக்கல் வாங்கல்களோடு தொடர்புடைய அதிகாரிகள், பத்து வருடங்கள் கடந்தும் ஒரு பதவியிலும் அதே கதிரையிலும் அமர நினைப்பது சரியா? அதன் அர்த்தம் என்ன?

இந்த நாட்டில் இரண்டு பட்ட அரச தலைமைகள் இருப்பது உண்மை. ஆனால் அது முழு நாட்டிலும் பிரதிபலிப்பதும் எதிர்காலச் சந்ததியினரான மாணவ மனங்களைப் புண்படுத்துவதும் அநாகரிகமாகச் சிந்திக்க வைப்பதும் வெட்கக்கேடான விடயமாக உள்ளது என்றுள்ளது.

Related posts: