வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் தொடர்பில் அவதானங்கள் தேவை – செயலாளர் நாயகம் !

Tuesday, November 28th, 2017

மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டு வருகின்ற தாழ் அமுக்கமானது எமது கரையோரப் பகுதிகளை அதிகளவில் பாதிக்கின்ற அபாயங்கள் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

தற்போதைய நிலையில் பல மாவட்டங்களில் வரட்சி நிலை காணப்படுகின்ற அதே நேரத்தில,; குறிப்பிட்ட சில பகுதிகளில் மழையும், சில பகுதிகளிலும் அடை மழையும் பெய்து வருவதையும் காண முடிகின்றது.

அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று, பொத்துவில், ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, காரைதீவு, திருக்கோவில், கல்முனை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி, சம்மாந்துறை, அம்பாறை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் தோன்றியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

எனவே, வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் தொடர்பிலும் அவதானங்கள் தேவை என்பதையும், அதற்கான விழிப்புணர்வுகள், அனைத்து மட்டங்களிலும் எமது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு, முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அமைச்சு உறுதிபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்மையில் தென் பகுதியில் ஏற்பட்டிருந்த வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் போன்ற அனர்த்தங்கள் பாரியளவிலான மக்களைக் காவு கொண்டிருந்த துயரங்களை நாம் மறந்துவிடக்கூடாது. அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் மீண்டும் ஏற்படாத வகையிலான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் வலுவுள்ளதாக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமும், அவசரமும் எம்முன்னே இருக்கின்றன.

தற்போது பெய்து வருகின்ற அடை மழை காரணமாக மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த இறத்தோட்டை, தம்பகல்லாகம மற்றும் பொல்வத்த கந்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தரை வெடிப்பு, நிலத் தாழிறக்கம், மண்சரிவு போன்ற அபாய நிலைமைகள் காணப்படுவதாகவும், உக்குவளை மற்றும் கலஉடஹேன போன்ற பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இந்தப் பகுதிகளிலிருந்து மக்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்ற நிலையில், இவ்வாறு இயற்கை அனர்த்தப் பகுதிகளிலிருந்து அகற்றப்படுகின்ற மக்கள், பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியேற்றப்படுவதை விரைந்து செயற்படுத்தும் படியும் கேட்டுக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் பல்வேறு இயற்கை அனர்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்த மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் உரிய இடங்களில் மீளக் குடியேற்றப்படாத நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

கடந்த மே மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின்போது மத்துகம, வோகன் தோட்டக் கீழ்ப் பிரிவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள 35 குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டம் இன்னும் இழுபறி நிலையில் இருப்பதாகவே தெரிய வருகின்றது. ஏற்கனவே பாரிய மண்சரிவு அபாயங்கள் ஏற்பட்டிருந்த மீரியபெத்த, அரநாயக்க, புளத்கொகுபிட்டிய, கடுகண்ணாவ போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் எத்தனைக் குடும்பங்கள் இதுவரையில் மீளக்குடியேற்றப்பட்டுள்ளன? என்ற விடயத்தினையும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது உரையில் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கின்றேன் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிததுள்ளார்.

இன்றைய தினம் அனர்த்த முகாமைத்துவம், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை, தொழில், தொழில் உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: