சரியான அரசியல் சூழல் இருக்கும் போதுதான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும் – ஈவினை தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, February 12th, 2019

சரியான அரசியல் சூழல் இருக்கும் போதுதான் மக்கள் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும். துரதிஸ்டவசமாக கடந்தகால தமிழ் அரசியல் தலைவர்கள் மக்களை சரியாக வழிநடத்தத் தவறியதன் காரணமாகவே எமது மாவட்டத்தின் கல்வி நிலை மட்டுமல்லாது துயரங்கள் நிறைந்த வறுமை நிலையும் ஏற்படக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் ஈவினை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது மக்களை சொல்லொணா துயரங்களுக்கு ஆளாக்கிவந்த அழிவு யுத்தம் நிறைவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் அந்த அவலங்களிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டு எழவில்லை. அவர்களது வாழ்வியல் நிலையும் பல துயரங்கள் நிறைந்ததாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றன. இந்நிலை வருவதற்கு நான் தென்னிலங்கை அரசுகளைக் குறை கூறப் போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களே இத்தகைய நிலைக்கு காரணம் என நான் நம்புகின்றேன். இதை நான் எனது வரலாற்று அனுபவங்களிலிருந்து கூறுகின்றேன்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் வெளிநாடுகளுக்கு ஓடி ஒழிந்துவிட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் மக்கள் மத்தியில் வந்து நின்று அரசியல் செய்பவர்கள் நாமல்ல. நான் மக்களுடன் இருந்து அவர்களது துன்ப துயரங்களை நேரில் கண்ணுற்றவன் என்ற ரீதியில் தான் இந்தக் கருத்தைக் கூறுகின்றேன்.

அந்த வகையில் வர இருக்கும் காலங்களை தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்துவார்களாக இருந்தால் வெகு விரைவில் அரசியல் உரிமை மட்டுமல்லாது அபிவிருத்தி சார் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் கண்டுதர என்னால் முடியும் என நான் நம்புகின்றேன். நாம் அதிகாரங்களைப் பெற்றதும் அதை வைத்து வேடிக்கை பார்த்தது கிடையாது. கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நலன்களுக்காகவே முடியுமானவரை பயன்படுத்திக் காட்டியிருக்கின்றோம்.

அந்தவகையில் இனிவரும் காலங்களில் போலித் தேசியவாதங்களுக்கு இடம்கொடுக்காமல் மக்களுடன் இருந்து மக்களுக்காகவே உழைப்பவர்களிடம் அரசியல் அதிகாரங்களைக் கொடுப்பதற்காக மக்கள் முன்வர வேண்டும் என தெரிவித்த செயலாளர் நாயகம்,

இந்தப் பாடசாலை சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ஒரு பாடசாலையாகக் காணப்படுகின்றது. இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது போல இங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் சிறந்த வழிகாட்டலோடு மாணவர்களை உருவாக்குவார்களேயானால் இந்தப் பாடசாலை மட்டுமல்ல எமது பிரதேசமும் கல்வியில் சிறந்த ஒரு சிறந்த முன்னுதாரணமாக மிளிர முடியும்.

Related posts:


இருமொழிக் கொள்கை அமுல்ப்படுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக உணர்வு ரீதியிலான யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றதா? – நாடாளுமன்றில் ...
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் முடக்கப்பட்டுள்ள பயிர்செய்கை நிலங்ககளை விடுவி...