“நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை” வடக்கு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 27th, 2022

வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் நீதித் துறைசார் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்கான அணுகல் எனும் நடமாடும் சேவை வடக்கு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

இந்நிகழ்வை நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டு அங்குரார்ப்பனம் செய்து வைத்தனர். இதன்போது உரையாற்றகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்பதாக கிளிநொச்சியில் நடைபெற்ற வடக்கு மாகாண நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு   நிகழ்வினை அங்குரார்ப்பனம் செய்து வைப்பதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கலாச்சார ரீதியான வரவேற்பு நடனங்களுடன் அழைத்து வரப்பட்டனர்

விருந்தினர்களிற்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் இன்னிய வாத்திய அணிவகுப்புடன் விழா மண்டபத்திற்கு வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வரவேற்பு நடனம் இடம்பெற்றதை தொடர்ந்து இழப்பீடுகளிற்கான திணைக்களத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு இழப்பீட்டு தொகைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை போதைப்பொருள் பாவனையுடன் சம்மந்தப்படுகின்ற சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கு கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் வைத்தியர்களின் மேற்பார்வையுடனான புனர்வாழ்வு மையத்தை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரி அகியோரின் தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் நீதி அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட ரீதியான துறைசார் திணைக்களங்களி பிரதானிகளும் கலந்து கொண்டனர்.

இதனிடையே கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்குபற்றுதலுடன் நீதி அமைச்சர் அலி சப்ரி திறந்து வைத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய, ‘சட்டம் மற்றும் சமூக நியாயம்’ எனும் கருத்திட்டத்தில் குறித்த நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: