அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவிப்பு!

Thursday, February 21st, 2019

ஏற்றுமதி அபிவிருத்தி தொடர்பில் பொதுவாக இந்த நாட்டின் நிலைமையினைப் பார்க்கின்ற போது,  “நல்ல சகுணம்’ என்று சொல்வதுபோல், ஆளுக்காள் இந்த நாட்டின் “ஏற்றுமதி அபிவிருத்தி நாளை விருத்திடைந்துவிடும், நாட்டின் பொருளாதாரம் நாளை வளர்ச்சி பெற்றுவிடும்” எனக் கூறிக் கொண்டிருந்தாலும், இந்த நாட்டில் எப்போதாவது  நடக்குமா? என்ற சந்தேகத்திலேயே நாட்டின் பொருளாதார நிலைமை இருந்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஏற்றுமதித் துறைகளைப் பலப்படுத்தாமல் இந்த நாட்டுக்கு பொருளாதார விருத்தியில்லை என்பதுவே உண்மை நிலையாகும். ஆனால், இது தொடர்பில் உரிய அவதானங்கள் இந்த நாட்டில் செலுத்தப்படுவதில்லை என்பதே அதிலும் பார்க்க உண்மை நிலையாக இருக்கின்றது.

இன்று இந்த நாட்டில் வறுமை மிகவும் அதிகரித்துள்ள மாகாணமாக வடக்கு மாகாணமே முன்னணியில் இருக்கின்றது இதற்கு அடுத்த நிலையில் கிழக்கு மாகாணம் இருக்கிறது. அண்மையில் ஆட்சியிலுள்ள பலரும் வடக்கு மாகாணத்திற்குச் சென்று வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஆளுந்தரப்பு தமிழ்த் தேசிய உறுப்பினர்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கற்களை நாட்டியதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்தது.இந்த நாட்டின் ஜனாதியாக இருந்தாலும் சரி, அன்றி  பிரதமராக இருந்தாலும் சரி, அல்லது தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் எவராயினும் சரி, அவர்கள் வடக்கு கிழக்கு நோக்கி வரும் போது கருப்புக்கொடி காட்டி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த காலம் ஒன்று அன்று இருந்தது. ஆனாலும்,  அந்த காலம் இன்று சற்று மாறிவந்திருக்கிறது.

தென்னிலங்கை மற்றும் அரச தலைவர்களுக்கு எதிரான அதே எதிர்ப்பு கோசங்களும் கூச்சல்களும் இன்னமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் அரச தலைவர்கள் கிட்ட நெருங்கி வந்ததும் ஆக்கிரோசமாக குரைத்துக்கொண்டிருந்தவர்கள் தமது எஜமானர்களை கண்டவர்கள் போல் வாலைச் சுருட்டிகொண்டு படுத்து விடுகிறார்கள்.

யாருக்கு எதிராக கூச்சல் இடுகிறார்களோ அவர்களே நேரில் வந்து முதுகில் தடவியதும், எதிர்ப்பு கூச்சலிட்டவர்கள் சூரியனை கண்ட பனித்துளிகள் போல் உருகி விடுகிறார்கள். நாணிக்கோணி அடங்கி விடுகிறார்கள். எந்தவித எதிர்ப்புகளும் இன்றி இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் தமிழர் வாழும் மண்ணுக்கு சகல மரியாதை வரவேற்புகளோடும் இன்று வந்து போகிறார்கள். அண்மையில் கூட கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கு நோக்கி வந்திருந்தார்.

சிங்களத்தலைமை தமிழருக்கு தீர்வு வழங்காது என்று சீறி எழுந்தவவர்களே பிரதமரை வரவேற்றார்கள். அபிவிருத்தி வெறும் சலுகை என்று சொன்னோரே இன்று பிரதமருடன் இணைந்து அடிக்கற்கள் நாட்டுகின்றனர். தம் தோளில் தடவிய பிரதமரை தொழுது நின்றவர்கள் பிரதமர் தென்னிலங்கை திரும்பியதும், மறுபடி ஊடகங்களை அழைத்து அதே பிரதமருக்கு எதிராக போர்க்கொடி ஏந்துவது போல் புலுடா விடுகின்றார்கள்.

போலித்தமிழ் தேசியம் பேசுவோரின் இத்தைகைய இரட்டை வேட திருகுதாளங்கள் யாவும் தத்தமது சொந்த சலுகைகளை பெறுவதற்காகவா? அல்லது  தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவா?

போலிதேசியம் பேசாமல், புலுடாக்களை கைவிட்டு உண்மையாகவே தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைகளையும், தமிழர் தேசத்தின் அபிவிருத்தி பணிகளையும் அவர்கள் விரும்புவார்களேயானால்  நிச்சயமாக நாம் அதை வரவேற்போம்.

Related posts: