புவிச்சரிதவியல் பணியகத்தின் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Thursday, April 4th, 2019

புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கங்கள் பணியகமானது மிகவும் குறைந்தளவிலான அதிகாரிகளைக் கொண்டே இயங்குவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக சுமார் 400 வரையிலான அதிகாரிகள் இருக்க வேண்டிய நிலையில் மேற்படி பணியகத்தில் 45 அதிகாரிகளே பணியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இத்தகைய அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக பொலிஸ் விசேட அதிரடிப் படையணி, கடற்படை போன்றவற்றிலிருந்து அதிகாரிகளைக் கொண்டு, மேற்படி பணியகத்தின் மூலமாக செய்யப்பட வேண்டிய சுற்றிவளைப்புகளை மேற்கொள்கின்றபோது, அது தேவையற்ற பிரச்சினைகளையும் சமூக மட்டத்தில் கொண்டு தந்துவிடுகின்றது என்பதையும் அவதானத்தில் கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அண்மையில், கிண்ணியா, கந்தல்காடு பகுதியில் இவ்வாறான சுற்றிவளைப்பொன்றின்போது, இருவர் நீரில் பாய்ந்து உயிரிழந்த சம்பவமானது, அந்தப் பகுதியில் கடற்படையினருக்கும், பொது மக்களுக்கும் இடையிலான ஒருவித முறுகல் நிலையினைத் தோற்றுவித்திருந்தது.

அதேநேரம், அண்மையில் யாழ்ப்பாணத்தில் இத்தகையதொரு சுற்றிவளைப்பொன்றின்போது, பொது மக்கள் விசேட அதிரடிப்படை அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. இந்த விடயமானது, தென்பகுதியில் ஒருவிதமான இனவாதக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்பட்டது.

எனவே, மேற்படி பணியகத்திற்கென அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அந்த அதிகாரிகளின் ஊடாக மேற்படி பணிகளை மேற்கொள்வதே சிறந்த ஏற்பாடாக இருக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

Related posts: