மக்களுக்கான உன்னத சேவைகளை வழங்கவே நாம் விரும்புகின்றோம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Monday, January 1st, 2018

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லையை மட்டுப்படுத்தி மக்களுக்கான சேவைகளை முழுமைப்படுத்தாத நிலையை விடுத்து குறித்த மன்றங்களின் அதிகார எல்லையை விரிவுபடுத்தி அதனூடாக ஒரு உன்னத சேவைகளை வழங்கவே நாம் விரும்புகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மானிப்பாய் சங்குவேலி பகுதி மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது ஆளுகைக்குள் வைத்திருக்கின்ற போதிலும் இதுவரையில் அதனூடாக எவ்விதமான சேவைகளை மக்களுக்கு வழங்கியுள்ளார்கள் என்ற கேள்வி இன்று எல்லோர் மத்தியிலும் கேட்கப்படுகின்ற கேள்வியாகவே இருக்கின்றது.

வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் 2018 ஆம் ஆண்டு ஒன்பதாம் மாதத்துடன் நிறைவுபெறவுள்ள நிலையில் குறித்த சபையூடான மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்கள் யாவும் செயலற்றுக் கிடக்கின்றமையானது வேதனையளிப்பதாகவே உள்ளது.

இந்நிலையில் ஆளுங்கட்சியினர் தங்களுக்குள்ளேயே முட்டிமோதி தீர்வுகளைக்காணாத நிலையில் அவர்களால் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காணமுடியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் எமக்கு வாக்களித்திருப்பார்களேயானால் கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் வடமாகாணத்தை நிச்சயம் நாம் அபிவிருத்தியால் மட்டுமன்றி மக்களின் வாழ்வாதார பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் காட்டியிருப்போம்.

அந்தவகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் எமக்கு முழுமையான ஆதரவை தந்து எம்மை வெற்றிபெற வைப்பார்களேயானால் உள்ளூராட்சிமன்றங்களின் அதிகார எல்லையையும் மீறி மக்கள் நலன்சார்ந்த பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் வலி தெற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வலன்ரயன் மற்றும் கட்சியின் வேட்பாளர்கள் என பலர் உடனிருந்தனர்.

Related posts:

வாக்குறுதி வழங்கியவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் என நம்புகிற...
வழி முறைகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே அமையவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ...
தமிழர்களை அரசியல் தோல்விக்குள் தள்ளிவிடவே கூட்டமைப்பு முயற்சிக்கின்றது - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!