அரசு வெற்றி மனோநிலையோடு இருந்தபோதும் நான் தமிழ் மக்களின் குரலாக அரசின் கோட்டைக்குள் ஒலித்திருக்கின்றேன்

Friday, June 17th, 2016

வலிகாமம் வடக்கிலிருந்து எமது மக்கள் வெளியேற்றப்பட்டு 26ஆண்டுகளாகின்றன. அழிவு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 7 ஆண்டுகளாகின்றன. யுத்தத்தை நடத்திய அரசாங்கம் வெற்றி மனோநிலையோடு இருந்தபோதும் நான் தமிழ் மக்களின் குரலாக அரசின் கோட்டைக்குள் ஒலித்திருக்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவரது முகநூல் பதிவில் —

படையினரை மக்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தவும், திரும்பும் திசையெல்லாம் இருந்த சோதனைச் சாவடிகளை அகற்றவும், பாதுகாப்பு வலயங்களாக இருந்த காணிகளை மீட்கவும், படையினர் பயன்படுத்திய மக்களின் கட்டிடங்களை மீளப்பெற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும் கடுமையாக அரசுக்குள் போராடியிருக்கின்றேன்.வெற்றிகளையும் பெற்றிருக்கின்றேன்.

எனது கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தபோதும், இன்னும் பலவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்பதையும் ஏற்றுக் கொள்கின்றேன்.

அதற்கு இன்னொரு பிரதான காரணம், எமக்கு போதுமான அரசியல் பலம் கிடைத்திருக்கவில்லை.

எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வுக்காகவும், சிதைந்த வாழ்வியல் பொருளாதாரத்தை  பலத்தோடு தூக்கி நிறுத்தவும், அழிந்த எமது தாயகத்தை அர்த்தபூர்வமாக மீளக் கட்டியெழுப்பவும் நான் வகுத்திருந்த திட்டங்களை முழுமையாக செய்து முடிக்கவும் முடியவில்லை.

தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து அரசியல் பலத்தைப் பெற்றுக் கொண்ட கூட்டமைப்பினரோ அந்த அதிகாரங்களைத் தமது சுயலாப அரசியலுக்காகவே பயன்படுத்திக் கொண்டு, ‘தாங்கள் ஆட்சியில் இல்லை என்றும், தங்களால் எதுவும் செய்யமுடியாது என்றும்’ கூறி தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது யுத்தத்தை வெற்றிகொண்ட அரசாங்கம் இல்லாத நிலையிலும் தாமே புதிய ஆட்சியை ஏற்படுத்தியதாகக் கூறிக்கொண்டு அரசுடன் இணக்க அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித் தலைமைப் பதவி, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவி, மாவட்டங்களில் ஒருங்கிணைப்புக்குழுக்களின் இணைத்தலைமைப் பதவிகள் என்பவற்றை அரசுடன் குலாவிப் பெற்றுக் கொண்டார்களே தவிர, இப்போதும் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுக்கவோ, தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கவோ இல்லை.

தமிழ் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட அரசியல் அதிகாரங்களையும், கனிந்துவந்த வாய்ப்புக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்தியிருந்தால், தமிழ் மக்கள் இத்தனை இழப்புக்களைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.

அகதி முகாம் அவலம் இத்தனை ஆண்டுகள் நீடித்திருக்காது, சொந்த நிலங்களை எப்போதோ மீட்டிருக்கலாம், சிறைகளில் எமது இளைஞர், யுவதிகள் பல ஆண்டுகளாக அடைபட்டிருக்கமாட்டார்கள். யுத்தம் தமிழ் மக்களை அழிவுகளுக்குள் தள்ளிவிட்டிருந்தாலும், அரசியல் பலம் அவர்களை அதிலிருந்து மீட்டிருக்க வேண்டும்.

எனக்கு போதுமான அரசியல் பலம் கிடைக்காதபோதும் மிக நெருக்கடியான காலகட்டத்தில் தற்துணிவோடு முயற்சி செய்து அதில் பல வெற்றிகளைப் பெற்றிருக்கின்றேன். எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க  நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் முயற்சிக்கின்றேன்.

அரசியல் பலம் கிடைத்தும் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அவலத்துக்குள் வைத்திருக்கவே விரும்பும் கபடத்தனமான சுயலாப அரசியல் நடத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் அனுமதிப்பதா? என்பதை தமிழ் மக்களே சிந்திக்க வேண்டும்.

Related posts: