இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – ஜப்பான் அரசினால் கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்கு வழங்கும் நிதி தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Thursday, November 9th, 2023

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிஷிகோஷி ஹிதேகி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்றுமுன்தினம் (06.11.2023) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளின் பேரில் ஜப்பான் அரசினால் இலங்கை கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்காக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 435 மில்லியன் ரூபா தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்காக இந்நிதி பயன்படுத்தப்படுவதுடன் அதில் ஒரு பகுதி கடற்றொழிலாளர்களுக்கு வலைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம் மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபன கிளைகளின் குளிரூட்டல் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்கும், மீன்பிடிப் படகுகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

ஜப்பான் தூதுவருடனான சந்திப்பின்போது, இலங்கையில் 15 கடற்றொழில் மாவட்டங்கள் இருப்பதாகவும், அதற்கு புறம்பாக அனைத்து மாவட்டங்களிலும் நன்னீர் மீன்பிடித் தொழிலில் கணிசமானோர் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

எரிபொருளில் இயங்கும் மீன்பிடிப் படகுகளுக்கு மின்கலத்தில் இயங்கும் இயந்திரங்களை பொருத்தும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பாக தூதுவருடன் கலந்தாலோசித்து அதனை செயற்படுத்த விரும்புவதாகவும் அதற்கு ஜப்பான் அரசின் உதவியைப் பெற்றுக்கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: