இருண்டு கிடக்கும் தொழிலாள ர்களின்  வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் –  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, June 21st, 2017

நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியானது, 2015ஆம் ஆண்டைவிட 2016ஆம் ஆண்டில் செலவுகளைக் குறைத்துள்ள போதிலும், அதற்குள் உட்படுகின்ற அரிசி, சீனி, இனிப்பு வகைகள், பால் உற்பத்திகள், குறிப்பிட்ட மருந்து வகைகள் போன்றவற்றின் உற்பத்திகளை மேற்கொள்வதற்கான வளங்கள் மற்றும் மூலப் பொருட்கள் எமது நாட்டிலேயே கிடைக்கக்கூடியதாக இருப்பதால், அந்த உற்பத்திகளை பரவலாக மேற்கொள்வதற்கும், அதன் பாலான ஊக்குவிப்புகளை மேற்கொள்வதற்கும், வசதிகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், இவ்வகைப் பொருட்களுக்கான இறக்குமதி செலவினங்களை போதியளவில் கட்டுப்படுத்த இயலும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (20) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். இவ்வடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்

இறப்பர் ஏற்றுமதியில் 2015ஆம் ஆண்டைவிட 2016ஆம் ஆண்டில் 6.5 வீதமான அதிகரிப்பினை நாம் கண்டுள்ள போதிலும், தேயிலை ஏற்றுமதியில் 2015ஆம் ஆண்டு 1,340.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வருமானம் கிடைத்துள்ள நிலையில், 2016ஆம் ஆண்டு அது, 1,269 அமெரிக்க டொலர்களாக குறைந்து 71.5 வீதமான வீழ்ச்சி நிலையை அடைந்துள்ளது.

அந்த வகையிலே, எமது ஏற்றுமதிப் பொருட்களில் பிரதானமானதொரு இடத்தை வகிக்கின்ற தேயிலை உற்;பத்தி தொடர்பில் நாம் தொடர்ந்து அதிக அவதானங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

எமது நாட்டில் தேயிலை உற்பத்தித்துறையை நம்பியதாக பெரும்பாலான மக்களைக் கொண்டுள்ள ஒரு சமூகம் பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் தொடர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், பிற வேலைவாய்ப்புகளும் அரிதாகவுள்ள நிலையில், வாழ்வாதார ஈட்டல்கள் சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இம் மக்களது வாழ்க்கை மற்றும் எதிர்காலத்துடன் பின்னிப்பிணைந்துள்ள தேயிலைத்துறை குறித்து அதிகளவிலான அக்கறையை இந்த அரசு எடுக்க வேண்டியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதே நேரம், கடலுணவு உற்பத்தியில் 2015ஆம் ஆண்டைவிட 2016ஆம் ஆண்டு 6.5 வீதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

சுற்றிலும் கடல் வளத்தைக் கொண்டிருக்கும் எமது நாடு, அந்தக் கடல் வளத்தைக கொண்டு எமது பொருளாதாரத்தை மேலும் வலுவுள்ளதாக கட்டியெழுப்புவதற்கு இயலாத நிலையிலேயே தொடர்ந்தும் இருந்து வருவது மிகவும் வேதனையான விடயமாகும். இதற்கு, இந்தியக் கடற்றொழிலாளர்களது அத்துமீறியதும், தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களைக் கொண்டதுமான தொழில் முயற்சிகள் ஒரு பிரதான தடையாகவே இருந்து வருகின்றன. இத்தகைய தடைகளை அகற்றும் வகையில் எமது கடற்றொழில் அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் மேற்கொண்டு வருகின்ற துணிச்சலான சில நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. அந்த வகையில், இவரது செயற்பாடுகளை ஊக்குவித்து, அவற்றை மேலும் தீவிரப்படுத்துவதற்குரிய ஒத்துழைப்புகளை பொறுப்புமிக்க அனைவரும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்

Related posts:

தவறான தமிழ் அரசியல் தலைமைகளினால்தான் எமது மக்கள் பிறர் தயவில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ள...
வடக்கு வெள்ளத்தின் நஷ்ட ஈடுகள் வார்த்தை ஜாலங்களாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் – ...
நாங்கள் சொல்வதைத்தான் அரசாங்கம் செய்கிறது என்றால் அரசு எதையுமே செய்யாதிருப்பதற்கும் இவர்களே பொறுப்பே...

உரிமைகளை வென்றெடுக்க பிராந்தியக்கூட்டு! வளமான தேசத்தை உருவாக்க தேசியக்கூட்டு!! - டக்ளஸ் தேவானந்தா
குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதில் முன்னின்று உழைத்தவர்களை காணாமற்போனோர் அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்த...
யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கு தனியார் முதலீட்டாளர்கள் கோரிக்கை - ஒத்துழைப்பு வ...