தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் தரப்புகள் “இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலைகின்ற ஞான சூனியங்கள்” – அமைச்சர் டக்ளஸ் சாடல்!

Thursday, October 22nd, 2020

சிறுபான்மை மக்களுக்கு மட்டுமில்லாமல் பெரும்பான்மை மக்களுக்கும் சௌபாக்கியமான, வலிமைமிக்கதொரு நாட்டை, சகல துறைகளிலும் பலமிக்கதாகக் கட்டியெழுப்புகின்ற வகையில் கொண்டுவரப்படவுள்ள இந்த 20வது திருத்தச் சட்டத்தை ஒரு சில தமிழ்த் தேசியம் பேசுகின்ற அரசியல் தரப்புகள் பாரதூரமாக விமர்சித்து வருகின்றன.

அந்தவகையில் ‘காய்ந்த மாடு கம்பிலே பாய்வது” போல், இப்போது கதைப்பதற்கு, அறிக்கைவிடுவதற்கு எதுவுமே இலலாத நிலையில், இந்த 20 வது திருத்தச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு. இளைஞர்களே போராடுங்கள் என்றும் முதியோர்களே வாதாடுங்கள் என்றும், சிறியோர்களே விளையாடுங்கள் என்றும் கூற ஆரம்பித்து விட்டார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்’து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த சுயலாப பேர்வழிகளும் சேர்ந்து கொண்டுவந்த 19 வது திருத்தச் சட்டம் ஏற்படுத்திய ஆட்சியில் என்னென்ன நடந்தன என்பது பற்றி, இப்போது பல்வேறு விடயங்கள் விலாவாரியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின்போது வெட்டவெளிச்சமாகி வருகின்றன.

19வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான நல்லாட்சி எனக் கூறப்பட்ட அந்த ஆட்சிக் காலத்தின்போது, அந்த ஆட்சியை தாங்கி நின்று, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரால்கூட, எமது சமூகத்துக்கு எதையுமே  செய்ய முடியாதிருந்தது. சகோதர முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களின்போது, பலம் பொருந்தியவர்களாக இருந்த சகோதர முஸ்லிம் அமைச்சர்களாலும் எதையுமே செய்ய முடியாதிருந்தது.

யுத்தம் முடிவடைந்த காலத்தில் விரைந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ச அவர்களால் முடியுமாக இருந்தது. ஆனால், சிறுபான்மை மக்களது பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கடந்த கால ‘லிச்சவி’ ஆட்சியினருக்கும், அந்த ஆட்சிக்கு முண்டுக் கொடுத்துக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எல்லாவற்றையும் பெற்றுத் தருவோம் எனக் கூறி, எமது மக்களது வாக்குகளைக்  அபகரித்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியத் தரப்பிற்கும் அந்த மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குக் கூட திராணியற்றுப் போனதால், இன்றும்கூட நீண்டகாலமாக ஆளுநர் ஆட்சி சார்ந்தே மாகாண சபைகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று இந்தியாவுடன் பேசப் போவதாகக் கூறுகிறார்கள். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றி கதைக்கப் போவதாகக் கூறுகிறார்கள்.

இவர்களது போலி வர்க்குறுதிகiளை நம்பி, இவர்களுக்கு வாக்களித்துவிட்டு, இன்றும்கூட கடலை நம்பி, கரையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரங்களை மட்டுமின்றி, எமது கடற்றொழிலாளர்களுக்கான கடல் வளத்தையே சுரண்டிக் கொண்டிருக்கின்ற இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் இந்தியாவிடம் மூச்சு விடாத இவர்கள், எமது நாட்டு அரசாங்கத்துடன் பேசித் தீர்க்க வேண்டியதை இந்திய அரசுடனும், இந்திய அரசுடன் பேசித் தீர்க்க வேண்டியதை இலங்கை அரசுடனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி எங்கேயோ அலைகின்ற ஞான சூனியங்கள்’ என்பது இவர்களைத் தான் குறிக்கும் என நம்ப முடிகின்றது.

இன்னொருவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுகின்றது. நரேந்திர மோடி அவர்கள் இந்த நாட்டுக்கு வருகை தந்து, யாழ்ப்பாண மண்ணுக்கும் வந்திருந்தபோது,  தமிழ்நாட்டிலே சிறுவர் துஷ்பிரயோகம், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, நிதி மோசடி போன்ற வழக்குகளில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றிருந்த பிரேமானந்தாவின் உதவியார்களான தனது சகாக்களை சிறையில் இருந்து விடுவிக்கும்படி நரேந்திர மோடி அவர்களிடம் கடிதம் எழுதிக் கொடுத்திருந்திருந்தார் இந்த நீதியானவர். அந்தக் கடிதத்தை கசக்கிப் போட்டுவிட்ட நரேந்திர மோடி அவர்கள், இப்போது இவர் இப்போது எழுதியுள்ள கடிதத்தை வேத வாக்காகக் கொள்ளப் போவதில்லை. அதுவும் முன்னர் எழுதியதைப் போல் வேலைக்கு உதவாததாக இருக்கும் என்றே எமது மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

எனவே, இத்தகைய பித்தலாட்டங்களிலிருந்து விடுபட்டு, எமது மக்களுக்கு மேலும் சிறந்த பயனைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், 20வது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்தி பயன்படுத்திக் கொள்வதற்கு, அதற்கான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியாது? நாடாளுமன்றில் டக்ளஸ...
அரச தொழில் வாய்ப்புக்களின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் வேண்டும் - அர...
பொதுஜனப் பெருமுன தமிழ் முஸ்லீம் கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அடையாளமாக இருப்பவர் அமைச்சர் டகளஸ் தேவ...