குப்பைகள் தொடர்பில்கூட கொள்கைத் திட்டம்இல்லாதமையே அனர்த்தத்திற்கு காரணம் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, April 17th, 2017
எமது நாட்டில் குப்பைகளை அகற்றுவது தொடர்பில்கூட ஒரு கொள்கைத் திட்டம் இல்லாமையே மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தத்திற்குக் காரணமாகும். இவ்வாறான செயற்கைத் தனமாக மக்கள்மீது புகுத்தப்படுகின்ற அனர்த்தங்களை முன்கூட்டியே தவிர்த்துக் கொள்வதன் ஊடாக பல உயிர்களை காப்பாற்றக்கூடிய வாய்ப்புகளிலிருந்தும், இத்தகையதொரு அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் ஆளுக்காள் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டு பொறுப்புகளிலிருந்து நழுவிவிடுவது முறையல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களது குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ள அவர், பாதிக்கப்பட்ட அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்ப அனைத்து உதவிகளும் உடனடியாக அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வனர்த்தம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அகற்ற வேண்டுமெனக் கோரி ஏற்கனவே மக்கள் போராட்டங்கள் பல வெகு எழுச்சியாகவே நடாத்தப்பட்டன. எனினும், இதனைக் கண்டு கொள்ளாத உரிய தரப்பினர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே இன்று இந்த பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இது, தெரிந்தே ஏற்படுத்தப்பட்ட செயற்கையான அனர்த்தமாகும். ஒரு பகுதியின் குடியிருப்புகள், மண்ணின் தன்மை, சூழல், நிலத்தடி நீர் வளத் தன்மைகள் போன்றவை கருத்தில் கொள்ளப்படாமல், தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய நடவடிக்கைகளே மக்களுக்கும், சூழலுக்கும் பாதிப்புகளை கொண்டு தரக்கூடியன என்பதை உரிய தரப்பினர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இதனையே இந்த அனர்த்தம் இன்று உணர்த்துகின்றது.
ஏற்படுகின்ற அனர்த்தங்கள், அழிவுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாமல் மீண்டும், மீண்டும் அதே தவறுகளை இழைத்து வருதல் காரணமாகவே நாம் தொடர்ந்தும் பல அழிவுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இது பொதுவாகவே, அனைத்துத் துறைகள் சார்ந்தும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில், மேற்படி குப்பை மேட்டை அகற்றுவதற்கும், அதனை வேறொரு மக்கள் குடியிருப்பு சார்ந்த பகுதியில் மீண்டும் கொண்டு கொட்டாமல், மீள்சுழற்சி முறைமைகளுக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று, இன்று மலையகப் பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் குப்பை தொடர்பிலான பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். அவற்றுக்கும் உடனடித் தீர்வுகள் காணப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தாமதமின்றிய நிவாரணங்கள் வழங்கப்படவும், பரிகாரங்கள் காணப்படவும் வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பழிவாங்கும் மனோநிலையில் இருந்து வெளியே வாருங்கள்: காங்கேசன்துறை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்ற இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றிற்கான நியமனம் வழங்கும் நி...
வட மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட தரமற்ற சீனி - அமைச்சர் டக்ளஸ் உடனடிநடவடிக்கை - கூட்டுறவு சங்கத்தினருக...