சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு!  

Tuesday, August 5th, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதி ஒருவர், அண்மைக் காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முச்சக்கர வண்டிகளை செலுத்துவதால் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

“பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முச்சக்கர வண்டிகளை பயன்படுத்துகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பியர்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை” என அவர் தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்குவதால் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

“இந்த திட்டம், சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள பலரின் வேலைவாய்ப்பை இழக்கச் செய்துள்ளது. இதுதான் அரசாங்கம் எதிர்பார்த்ததா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த திட்டம் முச்சக்கர வண்டி சாரதிகளை மட்டுமல்ல, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள ஏனைய வாகன சாரதிகளையும் எதிர்மறையாக பாதித்துள்ளதாகவும், பலரும் தமது வருமானத்தை இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

000

Related posts:

யாழ். குடாநாட்டில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேத விபரங்கள் திரட்டப்படுகின்றது 
எரிபொருள் நெருக்கடி குறித்து பிரதமர் தலைமையில் விசேட ஆராய்வு - ஜூலை நடுப்பகுதிக்குள் 38,000 மெட்ரிக்...
அமெரிக்காவின் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - பால் ...