காசாவில் விவகாரம் – டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை மீளப் பெறும் வகையில்  வெள்ளை மாளிகை அறிவிப்பு! 

Thursday, February 6th, 2025

காசாவில் அழிக்கப்பட்ட பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை மீளப் பெறும் வகையிலான அறிவிப்பை வெள்ளை மாளிகை விடுத்துள்ளது.

பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து ‘தற்காலிகமாக இடம்பெயர்த்த’ மட்டுமே டொனால்ட் ட்ரம்ப் விரும்பினார் என வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த பகுதியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா பணம் செலுத்தாது எனவும், அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புவதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அறிவிப்பை ‘சட்டவிரோதமானதும், ஒழுக்கமற்றதும், பொறுப்பற்றதுமான’ செயல் எனப் பாலஸ்தீனத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் (Francesca Albanese) விமர்சித்துள்ளார்.

அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், குறித்த திட்டம் பிராந்தியத்தில் குழப்பத்தையும் பதற்றத்தையும் உருவாக்குவதற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காசாவில் உள்ள தங்களது மக்கள் அதனை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Related posts: