அதிகாரபூர்வ அரசாக பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் ஒரு பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
இதனால் அவ்வாறு செய்யும் முதல் G7 நாடாக பிரான்ஸ் மாறும்.
இது தொடர்பான எக்ஸ் பதிவொன்றில் பிரான்ஸ் ஜனாதிபதி, நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன் அங்கீகாரம் குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
மேலும், காசாவில் போர் முடிவுக்கு வருவதும், பொதுமக்கள் மீட்கப்படுவதும் அவசரத் தேவை.
உடனடி போர் நிறுத்தம், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல் மற்றும் காசா மக்களுக்கு பாரிய மனிதாபிமான உதவிகள் தேவை என்றும் அவர் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டினார்.
அதேநேரத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை “பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கிறது” என்று கூறினார்.
அதேபோன்று, மக்ரோனின் அறிவிப்பை அமெரிக்கா “வலுவாக நிராகரிக்கிறது” என்று வொஷிங்டனின் வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார்.
G7 என்பது முக்கிய தொழில்மயமான நாடுகளின் குழுவாகும், இதில் பிரான்சுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும்.
தற்போது, பாலஸ்தீன அரசு ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 140 க்கும் மேற்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவற்றில் அடங்கும்.
ஆனால், இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவும், இங்கிலாந்து உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவில்லை.
000
Related posts:
|
|