வடக்கிலுள்ள தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களில் உழைப்பு சுரண்டல் நடைபெறுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி சுட்டிகாட்டு!
Thursday, February 7th, 2019தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் வெற்றிடங்களுக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்படுவதுபோல் 8 மணி நேர பணி என்பது பல இடங்களில் அவ்வாறு இருப்பதில்லை. அது 12 மணி நேரமாகவும், 16 மணி நேரமாகவும் இருக்கின்றது.
நாளொன்றுக்கு 1000 ரூபா ஊதியம் என விளம்பரத்தில் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், நாளொன்றுக்கு எத்தனை மணி நேர பணி? என்பது அநேகமாகக் குறிப்பிடப்படுவதில்லை. இத்தகைய நிலையில் தனியார் பாதுகாப்புத் துறையின் தொழில் தரம் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்ற நிலைகள் தோன்ற வாய்ப்புள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் பங்கெடுத்தபின் தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களை ஒழுங்குபடுத்துகின்ற கட்டளைச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்கள் பணியார்களுக்கான ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் என்பவற்றுக்காக பணியாளர்களது ஊதியத்திலிருந்து அறவிட்டுக் கொள்கின்ற நிதியையும், மேற்படி நிலையங்களின் அதற்குரிய தொகையினையும் முறையாக செலுத்தி, பணியாளர்களுக்கு அதன் பயனை ஈட்டிக் கொடுக்கின்றவா? என்பது குறித்தும் தொடர் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
குறிப்பாக, வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் உள்ளூர் தனியார் பாதூகப்பு முகவர் நிலையங்கள் சிலவும் செயற்பட்டு வருகின்றன. ஏற்கனவே சப்றா நிதி நிறுவனம் என்ற பெயரில் எமது மக்களிடம் இருந்து பாரியளவில் பணத்தைக் கொள்ளையடித்த நிறுவனமும், எமது மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு ஊடக நிறுவனமொன்றையும், தனியார் பாதுகாப்பு முகவர் நிலையம் ஒன்றையும் செயற்படுத்தி வருகின்றது.
இந்த ஊடக நிறுவனத்தில் பணியாற்றுகின்ற பணியாளர்களின் ஊதியங்களிலிருந்து மிக நீண்ட காலமாக அறவிடப்பட்டு வந்துள்ள ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை இந்த நிறுவனம் வைப்புச் செய்யவில்லை என அண்மையில் சோதனை நடத்தப்பட்டபோதே தெரிய வந்திருந்தது. அதேபோல், இந்த நிறுவனம் தனியார் பாதுகாப்பு பணியாளர்களுக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கலாம். எனவே இது தொடர்பிலும் தொடர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
அந்த வகையில், மேற்படி தனியார் பாதுகாப்புத் துறையில் காணப்படுகின்ற ஒழுங்கீனங்களை அகற்றி, அதனை, அதில் பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு போதிய ஊதியங்களும், சலுகைகளும், அத் தொழில் மீது நம்பிக்கையையும் ஏற்படுகின்ற வகையில் அதனைக் கட்டியெழுப்புவதற்கான ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதுடன்,
மேற்படி தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களின் பணியாளர்களுக்கான ஊதியங்கள், சலுகைகள், ஏனைய வசதிகள் என்பன மாகாணத்திற்கு மாகாணம் வேறுபடாத வகையில், நாடளாவிய ரீதியில் ஒரே கொள்கையுடன் செயற்படுத்தப்படுவதற்கும் இதன் மூலமாக வழிவகுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றேன்.
Related posts:
|
|