வீதி செப்பனிட்டும் குறியீடுகள் இன்னமும் பொறிக்கப்படவில்லை – நிதி இன்மையே காரணம்என்கிறது வீதி அபிவிருத்தி அதிகார சபை!

Saturday, July 14th, 2018

யாழ்ப்பாணம் கொடிகாமம் சந்தியிலிருந்து கச்சாய் வரையான முதன்மை வீதி செப்பனிட்டுத் திருத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அதற்குரிய குறியீடுகள் இதுவரை பொறிக்கப்படவில்லை.

இந்த வீதியில் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி மற்றும் அதனுடைய ஆரம்பக் கல்விக்கான பாடசாலை இரண்டும் வீதிக்கு இரு மருங்கிலும் எதிரெதிரே காணப்படுகின்றது. பாடசாலைகளில் தரம் 1 முதல் உயர்தரம் வரை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த வீதியில் பாடசாலை நேரங்களில் அதிகரித்த வாகனப் போக்குவரத்து காணப்படுகின்றது.

இரண்டு திசையிலும் வருகின்ற மாணவர்கள் வீதிக்குக் குறுக்காக கடந்து செல்கின்றனர். இது மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும். இந்தப் பகுதியில் பாதசாரிக் கடவை மற்றும் குறியீடுகள் இன்மையால் சாரதிகள் சிலர் வாகனங்களை விரைவாகச் செலுத்துகின்றமையும் காணக்கூடியதாகவுள்ளது.

மாணவர்களதும் பாதசாரிகளதும் நலன் கருதிப் பாடசாலைக்கு அருகில் பாதசாரிக் கடவையை விரைவாக அமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியற் பிரிவு தெரிவித்ததாவது:

இந்த வீதியின் செப்பனிடும் பணி கடந்த இரு மாதத்துக்கு முன்னர் முடிவடைந்துள்ளது. ஒரு வீதியைச் செப்பனிடும்போது அதற்கான நிதியைக் அமைச்சே வழங்கும். நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்று அறிந்த பின்னரே வேலைகளை ஆரம்பிப்போம்.

வேலைகள் நிறைவடையும் தருவாயில் அதற்கான நிதி எமக்கு வந்துசேரும். ஆனால் இந்த வீதிக்குரிய நிதி இதுவரை எமக்குக் கிடைக்கவில்லை. ஆகவே ஒப்பந்தக்காரர்களுக்கு நிதி வழங்க முடியவில்லை. இதனால் வீதி சீரமைப்புடன் கோடுகள் போட முடியவில்லை. கொழும்பு அமைச்சிடம் இருந்து நிதி கிடைத்ததும் வேலைகள் நடைபெறும் என்றனர்.

Related posts: