வடக்கில் மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்புக்காகத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2019

காணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை நிரப்புதல் என்றே கூறப்படுகின்றது. சதுப்பு நிலங்கள் மனித வாழ்க்கைக்கு மிகவும் அத்தியவசியமானவை என்பதற்கிணங்கவே பாழாகிப் போகின்ற அல்லது அழிக்கப்படுகின்ற சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கின்ற வகையில் ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் 1971ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி சர்வதேச மகா நாடு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த மகா நாட்டின் இறுதியில், உலகம் முழுவதிலும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் பரப்புவது என்ற முடிவு எடுக்கப்பட்டு, இதற்கென உள்ளூர் மாநில, தேசிய, சர்வதேசிய அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதை வலியுறுத்துகின்ற ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது.

ராம்சார் பிரகடனம் என்கின்ற இந்த உடனபடிக்கையை இலங்கை உட்பட சுமார் 168 நாடுகள் ஏற்றுக் கொண்டன.

அத்தகைய சதுப்பு நிலங்களை நிரப்புகின்றமையானது சில நேரங்களில் தவிர்க்க முடியாது என்ற போதிலும் அதுவே பாரியதொரு இழப்பாகவும் அமைந்து விடுகின்றது.

பராமரிப்பின்றி மாசடைதல், குப்பைகளைக் கொட்டுதல், ஒழுங்கான திட்டமிடல்கள் இன்மை காரணமாக கழிவு நீர் கலத்தல், கடல் நீர் உட்புகுதல், அதிகரிக்கின்ற குடியிருப்புகள் காரணமாக சதுப்பு நிலங்கள் மாசடைகின்ற அதேவேளை இது மனித சமூகத்திற்கு மிகவும் அச்சுறுத்தலாகவும் அமைந்து விடுகின்றது.

இத்தகைய சதுப்பு நில மாசடைவுகள் திட்டமிடப்படாமலும், வெகுவாகத் திட்டமிட்டும் நிகழ்த்தப்படுவதையும் நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. அதாவது, இந்த காணி மீட்டல் என்பதை தனக்கான காணி மீட்டலாகக் கருதிக் கொள்கின்ற சில அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் திட்டமிட்டே அதனை மாசடைச் செய்து, அதன் மூலமாகவே அதனை நிரப்பி, பின்னர் படிப்படியாகக் கையகப்படுத்துகின்ற சம்பவங்கையும் நாம் கண்டு வருகின்றோம். உதாரணத்திற்கு கொழும்பை அண்டிய முத்துராஜவெல சதுப்பு நிலப் பகுதியைக் கூறலாம்.

கொழும்பு நகரைப் பொறுத்தவரையில், தற்போது சுமார் 19 கிலோ மீற்றர் சதுப்பு நிலங்கள் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. 1980களில் காணப்பட்ட சதுப்பு நிலங்களில் இன்று வரையில் சுமார் 60 வீதமான சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவே தெரிய வருகின்றது.

இந்த சதுப்பு நிலங்களின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், அதிக மழை வீழ்ச்சியின்போது பெறப்படுகின்ற நீரை உள்வாங்கி வெள்ளம் வராமல் தடுக்கி;றது. அவ்வாறு உள்வாங்குகின்ற நீரை நன்னீராகவே பயன்பாட்டுக்கு நிலக் கீழாகத் தருகின்றது. உள்ளக காற்றின் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்துகின்றது. உலக வெப்ப நிலை சீர்பாட்டுக்கான காபனை சேமிக்கின்றது. இப்படி இன்னும் பல நன்மைகள் கிட்டுகின்றன.

மேற்படி சதுப்பு நில அழிப்புக் காரணமாக கொழும்பு நகரில் கடும் மழைப் பொழிவுகளின்போது, நகரமே மூழ்கிப் போகின்ற நிலைமையை இன்றும்கூட கண்டு வருகின்றோம். 

இன்றும்கூட எஞ்சி இருக்கின்ற சதுப்பு நிலங்கள் தரம் குன்றி வருவதால், அவற்றினால்கூட நாளடைவில் நாம் எவ்வித நன்மையையும் எதிர்பார்க்க முடியாது என்றே கருத வேண்டி இருக்கின்றது.

இயற்கையை எதிர்த்து வாழ்வதற்கான வசதிகளை செயற்கையாகவே ஏற்படுத்திக் கொள்கின்ற கொழும்பு நகரையும், இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ நினைக்கின்ற வடக்கின் நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்ப்பது கடினமாகும்

வடக்கிலே காணி மீட்டல் என்கின்றபோது, முதலில் எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை மீட்பது என்ற பொருள் படுகின்றது.

வலிகாமம் வடக்கு, கேப்பாப்புலவு, நாச்சிக்குடா என எமது மக்கள் தங்களது சொந்த காணி, நில மீட்புக்காகப் போராடி வருகின்றனர்.

இதனிடையே வடமராட்சி கிழக்கில் 700 ஏக்கர், மண்டைதீவில் 600 ஏக்கர், என யாழ் மாவட்டத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலே உத்தரவேங்கை ஆலயக் காணி என காணிகள் சுவீகரிக்கப்பட்டும், முல்லைத்தீவில் கேப்பாப்புலவில் 526 ஏக்கர் என காணிகள் சுவீகரிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டும் வருவதாகத் தெரிய வருகின்றது.

யாழ்ப்பாணத்திலே சாந்தபுரம் தொடக்கம் தெல்லிப்பளை வரையில், ‘எமது நிலம் எமக்கே வேண்டும்’ என எமது மக்கள் போராட்டத்தில் இறங்கி வருகின்றனர்.

வலிகாமம் வடக்கு – தெல்லிப்பளை – வலிகாமம் கிழக்கு – கோப்பாய் ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகளைச் சார்ந்து சுமார் 6381 ஏக்கர், 38.91 பேர்ச் தனியார் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது. கிளிநொச்சி, பூநகரி பகுதியைச் சேர்ந்த பள்ளிக்குடா, பல்லவராயன்கட்டு, மட்கும்பான், பொன்னாவெளி, அரசபுரம், முழங்காவில் உள்ளிட்ட சுமார் 800 ஏக்கர் காணி எமது மக்கள் பயன்பாட்டிற்கு விடுபடாத நிலை தொடர்கின்றது.

மாதகல்லில் இருந்து காங்கேசன்துறை வரையிலான கடற்கரையை அண்டிய பகுதிகள் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்னுற்பத்திச் செயற்பாடுகளுக்காக சீனாவுடன் தொடர்பினைக் கொண்டிருக்கின்ற மலேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், மாதகல் பகுதியிலிருந்து சுமார் 25 வருடங்களாக வெளியேறியிருக்கின்ற சுமார் 279 குடும்பங்களின் நிலை கண்டு கொள்ளப்படவில்லை.

இவை எல்லாம் சதுப்பு நிலங்கள் அல்ல. எமது மக்கள் வாழ்ந்திருந்த வரலாற்று காணி, நிலங்கள்.

போகிற போக்கைப் பார்த்தால், மீளக் குடியேற வேண்டிய எமது மக்களை ஒரு புறமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, சீன, மலேசிய நாட்டுப் பிரஜைகள் நாளடைவில் வந்து குடிகொண்டு விடுகின்ற நிலை ஏற்படுமோ என எமது மக்கள் அஞ்சுகின்றனர்

அம்பாந்தோட்டையை விற்று, கொழும்பை விற்று, காலியை விற்று, தெற்கையே விற்று, இப்போது வடக்கையும் வெளிநாடுகளுக்கு விற்கப் போகின்ற நிலைமை வரை உருவாகிவிட்டது

எமது மக்கள் முகங் கொடுத்து வருகின்ற மிகப் பாரதூரமான விடயங்களை தடுத்து நிறுத்த வேண்டிய – இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததாகக் கூறிக் கொள்கின்ற  தமிழ்த் தரப்பினர் இதை பற்றி எல்லாம் வாயே திறப்பதில்லை.

அவர்களது தேவை மக்கள் மாண்டாலும், மக்களது வாக்குகள் மட்டும் தேர்தல்களின்போது தமக்குக் கிடைகக் வேண்டும் என்பதே.

இன்று வடக்கிலே இருக்கின்ற எமது மக்கள் அப்பகுதியிலிருந்து ஓரங் கட்டப்பட்டு, நாளை சீன மக்களோ மலேசிய மக்களோ குடியேறி விடுகின்ற நிலை ஏற்பட்டால்கூட அந்தத் தமிழ்த் தரப்பினருக்கு அது பிரச்சினை இல்லை.

உடனேயே தங்களது கட்சியின் பெயரை சீன தேசியம் என்றோ, மலேசிய தேசியம் என்றோ மாற்றிக் கொண்டு, வாக்கு கேட்கப் புறப்பட்டு விடுவார்கள். அதுதான் அவர்களது நிலைப்பாடாக இருக்கின்றது.

தெற்கிலே காணிகள் சுவீகரிக்கின்றபோது, வெளிநாடுகளுக்;கு விற்கப்படுகின்றபோது, தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எத்தனையோ போராட்டங்களை நடத்துகின்றன. வெகு சனப் போராட்டங்களை ஏற்பாடு செய்கின்றன. மக்களை விழிப்பூட்டுகின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. அவற்றினால் வெற்றியும் பெறுகின்றன. ஆனால், வடக்கிலே? நிலைமை தலை கீழாகவே இருக்கின்றது.

எமது மக்கள் தனியாகப் போராடுகின்றார்கள். அதை வைத்து இந்த அரசியல் தரப்பினர் அரசாங்கத்துடன் பேசி எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்க்காமல் இருப்பதற்காகவே சலுகைகளைப் பெறுவதால் எமது மக்களது போராட்டங்கள் இன்னமும் வெற்றி பெறாமலேயே தொடர்கின்றன.

அடிக்கடி எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குள் தள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்கள் அடிக்கல் நடுவதிலேயே காட்சி கொடுக்கிறார்கள். எமது மக்கள் பல்வேறு சவால்களை வெற்றி கொள்ள வேண்டியிருக்கின்ற நிலையில், அவர்கள் சவல்களை ஏந்திக் கொண்டிருக்கின்றார்கள். இவை எல்லாமே தேர்தல் அண்மித்து வருகின்ற காலகட்ட நாடகங்கள் அன்றி, வேறேதும் இல்லை.

இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்தவர்கள் தாமே என்கின்றவர்கள், இந்த அரசுக்கு முட்டுக் கொடுத்து, அதனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கையொப்பமிட்டுக் கொடுத்தவர்கள். இவர்களது ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த அரசாங்கமே கவிழ்ந்துவிடுகின்ற நிலையில் இருக்கின்றபோது, ‘எமது மக்களின் பிரச்சினைகளைத் தீருங்கள். இல்லாவிட்டால் அரசாங்கத்திற்கு கொடுக்கும் ஆதரவை நாங்கள் நீக்கிக் கொள்வோம்’ என ஏன் இவர்களால் எமது மக்களுக்காகப் பேரம் பேச முடியாதுள்ளது? எனக் கேட்க விரும்புகின்றேன்.

இத்தகையதொரு நிலையில் நாங்கள் இருக்கவில்லை. நாங்கள் இணக்க அரசியலை மேற்கொண்டிருந்தாலும், தென்னிலங்கை அரசுகளில் மேலதிகமாகவே இருந்திருந்தோம். அவ்வாறு, மேலதிகமாக இருந்துகொண்டே, பேரம் பேசுவதற்குக் கூட இயலாத நிலையில் நாங்கள் இருந்தாலும், எமது மக்களுக்கும், எமது பகுதிகளுக்கும் அரசாங்கங்களுடனான புரிந்துணர்வு அடிப்படையில் நிறையவே பணிகளை மேற்கொண்டிருக்கின்றோம் என்பதை வரலாறு சான்று பகரும்.

மறுபக்கத்தில், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, இனங்களுக்கிடையே பாலம் அமைப்போம் எனச் சொல்லிக் கொள்கின்ற இந்த அரசு, தன் சுய சிந்தனையில் ஒரு முடிவை எடுத்து, எமது மக்களின் இத்தகைய காணிப் பிரச்சினை உள்ளடங்களாக அத்தனைப் பிரச்சினையையும் போதியளவில் தீர்க்கும் எனப் பார்த்தால், அதுவும் நடக்கின்ற பாடில்லை.

ஒரு காலத்தில் செழிப்பான ஈரவலைய நிலமாக இருந்துள்ள, அக்கால மன்னருக்கு முத்து போன்ற சம்பா நெல்லை வழங்கியதாக வரலாற்று ரீதியில் கூறப்பட்டு வருகின்ற கொழும்பை அண்டிய முத்துராஜவெல பகுதியையே காப்பாற்ற முடியாத இவர்களால், எமது மக்களின் காணி, நிலங்கள் காப்பாற்றிக் கொடுக்கப்படும் என எப்படி நம்ப முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.     

Related posts:


யுத்த வடுக்களற்ற புதிய தேசத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்...
வரலாற்று பாடநூல்களில் தமிழர்களது உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளது! அந்நியர்களுக்கெதிராகத் தமிழர்...
வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...