மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் எனக் கூறிக்கொண்டாலும் அவ்வாறான நிலைமை இன்னமும் ஏற்படவில்லை என்றே தெரிகின்றது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 9th, 2019

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தமானது, இந்த நாட்டின் பொருளாதாரத் துறையிலும், மக்களது பொது வாழ்க்கையிலும் பாரிய பாதிப்புகளை உண்டு பண்ணியிருப்பது கண்கூடாகவே தெரிய வருகின்றது.

இன்றும்கூட, நாட்டில் சுமுகமான நிலைமை காணப்படுவதாக இல்லை. கடைகள் திறந்திருந்தும், பல்வேறு நிறுவனங்கள் திறந்திருந்தும், வாகனங்கள் போக்குவரத்துகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தும், வழமைபோல் பெருமளவில் மக்கள் நடமாற்றம் இல்லாத நிலைமையினையே காணக்கூடியதாக இருக்கின்றது.

முழுமையாக இந்த நாடே ஒருவித சூனியத்தன்மையின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள நிலைமையே காணப்படுகின்றது. நாட்டில் சுமுக நிலை தோன்றுவதாகவும், மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் என ஆளுக்காள் கூறிக் கொண்டாலும், பாதையில் இறங்கிப் பார்க்கின்றபோது, அவ்வாறு தெரிவதாக இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விஷேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

‘2019ஆம் ஆண்டில் கட்டாயமாக விஜயம் செய்ய வேண்டிய நாடு இலங்கை’ என சுற்றுலாப் பயணத்துறை சார்ந்த வழிகாட்டியான ‘லோன்லி பிளனெற்’ (டுழநெடல Pடயநெவ) ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் காரணமாக இலங்கை தொடர்பில் வெளிநாட்டவர் மத்தியில் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், தற்போது இலங்கை தொடர்பில் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய நிலைக்கு வெளிநாட்டவர்களை மட்டுமல்லாது, உள்நாட்டவர்களையும் தள்ளிவிட்டுள்ளது.

சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி ஒரு பக்கம் தொடர்கின்ற நிலையில், அதை நம்பியிருக்கின்ற ஏறத்தாள சுமார் 4 இலட்சம் மக்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கென சில சலுகைகளை வழங்குவதாக நீங்கள் அறிவித்தாலும், அதனை நான் வரவேற்பதுடன், அது முற்று முழுதாக சுற்றுலாத்துளையை நம்பி வாழுகின்ற அனைவருக்கும் நிவாரணங்களை வழங்கப் போவதில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாக, சுற்றுலாத்துளையையும்; நம்பிய முச்சக்கர வண்டிக் கைத்தொழிலானது கிட்டத்தட்ட நூற்றுக்கு 80 வீதமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

சுற்றுலாத்துறை வழிகாட்டிகளாக தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொண்டிருந்த பலரது வாழ்க்கை இன்று பாதிக்கப்பட்டுள்ளது.

அன்றாடக் கூலிகளாக வேலை செய்து, தங்களது வாழ்வாதாரங்களை அன்றாடம் ஈட்டிக் கொள்கின்றவர்களுக்கு தற்போது போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ள நிலைமைகள் காணப்படுகின்றன

இந்த நாடு, ஏற்கனவே பொருளாதார நிலைமையில் பாரிய விருத்தியினைக் கண்டிருந்து, தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் திடீரென பொருளாதார ரீதியில் வீழ்ச்சியுற்ற நாடல்ல. ஏற்கனவே நலிந்த பொருளாதார நிலைமையினைக் கொண்டிருந்து, மேற்படித் தாக்குதல் அனர்த்தத்தின் காரணமாக மேலும் வீழ்ச்சியுற்றிருக்கின்ற நாடாகும்

ஒரு குறிப்பிட்ட சிறு தொகையினர் தவிர்ந்து, இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கனவே சுகபோகமான வாழ்க்கை அல்லாவிடினும், மூன்று வேளை சுத்தான உணவுகளை உண்டு, ஏனைய அடிப்படை வசதிகளையும் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்திருந்த நிலையில், மேற்படித் தாக்குதல் அனர்த்தத்தின் பின்னர், திடீரென துன்ப, துயரங்களுக்குள், பொருளாதார பாதிப்புகளுக்குள் விழுந்தவர்களும் அல்லர். இம் மக்கள் தொடர்ந்து பல வருடகாலமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, துன்ப, துயரங்களுக்குள் முடங்கிப் போயிருக்கின்ற நிலையிலேயே தற்போது இந்த பாரிய பாதிப்புகளும் அம்மக்களது தலைகளில் இடிந்து விழுந்திருக்கின்றது.

இந்த நிலையில், மக்களது வாழ்க்கை நிலைமையினைக் கருத்தில் கொண்டதாகவே அத்தியாவசிய மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களின் விலைகள் மாற்றம் பெற வேண்டிய ஒரு நிலை மிகவும் அத்தியாவசியமாகின்றது.

அண்மையில் இந்த நாட்டில் ஏற்படுத்தப்படுத்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்கல் தொடர்பில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படுதலும், இந்த நாட்டில் இனியும் அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறாத வகையில், தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதும் அத்தியாவசியமாகும். எனினும், மேற்படி தாக்குதலை முன்வைத்தே நாட்டின் ஏனைய பிரச்சினைகளை மறைத்து வைக்காத வகையில் இந்த அரசின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இன்றைய காலகட்டமானது, பெரும்பாலான மக்களுக்கு தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்ள இயலாத நிலைமையினை உருவாக்கிவிட்டுள்ளதால், முதலில் அந்த நிலைமையினை மாற்றி, நாட்டில் சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டும். அந்தச் சூழலானது வெறும் வாய் வார்த்தைகளால் – அறிக்கைகளால் அன்றி நடைமுறை ரீதியிலாக மக்கள் முன் பகிரங்கமாக நிலை நிறுத்தப்படல் வேண்டும்.

இந்த நாட்டில் இப்போது அனைத்து மக்களிடையேயும் மறைமுகமானதொரு அச்சம் நிலை கொண்டிருக்கின்றது. எந்த நேரத்தில், என்ன நடக்குமோ? என்ற பீதி மக்கள் மத்தியிலிருந்து முழுமையாக இன்னும் அகன்றுவிடவில்லை.

இந்த நிலையில் குறிப்பிட்ட மக்கள் அரச மற்றும் ஏனைய பணிகளில் ஈடுபடுவதும்கூட ஏதோ ஒருவித இயந்திரத் தன்மையைப் போல்தான் காணப்படுகின்றதே அன்றி மக்கள் விருப்புடன் பணிகளில் ஈடுபட்டு வருவதாக காண முடியவில்லை. அந்த வகையில், அதன் ஊடான உழைப்பு என்பது எந்தளவிற்கு பயனாக அமையும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

எனவே, இது ஏதோ இயல்பு நிலை நாட்டில் நிலவுகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதற்குரிய ஒரு கண்காட்சியைப் போல் தென்படுகின்ற நிலையில், இதனை நம்பி உல்லாசப் பிரயாணிகள் இந்த நாட்டுக்கு வெகு விரைவில் வருவார்களா? என்ற கேள்வி எழுகின்றது

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரங்களுக்கு மேலாகியுள்ள நிலையிலும், இன்னமும் அது தொடர்பில் ஒருங்கிணைந்த பொறுப்புக் கூறலுக்கு உங்களால் வர முடியாதுள்ளது. உயிரிழப்புகள் தொடர்பில் ஒழுங்காக எண்ணிக்கையை அறிந்து சொல்லக் கூடிய நிலையில்கூட இல்லாத உங்களால், அத் தாக்குதல் தொடர்பில் பொறுப்பு கூறுவதென்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்ற கேள்வியே எமது மக்கள் மத்தியில் எழுகின்றது

தற்போதிருக்கின்ற சட்டங்களை வைத்து, மேற்படி பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என ஒரு சிலர் கூறுகின்றபோது, இல்லை இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதாது என இன்னுமொரு தரப்பினர் பகிரங்கமாகக் கூறுகின்றபோது, மேலும் தாக்குதல்கள் விரைவில் நடத்தப்படக்கூடும் என ஆளுந்தரப்பினரே பகிரங்கமாகக் கூறுகின்றபோது,  வெளிநாட்டவர்கள் இந்த நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கோ அல்லது, உல்லாசப் பயணிகளாக வருவதற்கோ விரும்புவார்களா? என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்.

அதேநேரம், மேற்படித் தாக்குதலையடுத்து, வெளிநாட்டுக் கடன்களை மேலும் எதிர்பார்த்தும், கடன்களில் சலுகைகளை எதிர்பார்த்தும் மகிழ்ந்து கொண்டிருக்கின்ற தரப்பினரும் இல்லாமல் இல்லை.

நாடும், நாட்டு மக்களும் எக்கேடு கெட்டுப் போனாலும், மேலும், மேலும் கடன்களை வாங்கி இப்படியே காலத்தை ஓட்டிவிடுவோம் என நீங்கள் நினைக்கிறீர்கள். அது, எதிர்காலத்தில் இந்த நாட்டுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தப் போகின்றது என்பது குறித்து எவருக்கும் கவலையில்லை என்றே தெரிய வருகின்றது.

ஓர் அனர்த்தத்தை வைத்துக் கொண்டு, இன்;னோர் அனர்த்தத்திற்கு வழிவகுப்பதானது, எதிர்காலத்தில் இந்த நாட்டு மக்களுக்கு இன்றே – முன்னேற்பாடகவே செய்து வைக்கின்ற தற்கொலைக்கான வாய்ப்பாகவே அமைந்துவிடும்.

எனவே, முதலில் இந்த நாட்டின் இயல்பு நிலையை ஏற்படுத்தங்கள். வாயால் அல்லாது செய்கையினால் அதனை நிறைவேற்றுங்கள். பொருளாதார நிலைமைகள் தொடர்பில் அர்ப்பணிப்புடன் அவதானங்களை செலுத்துங்கள். இதற்கெல்லாம் முன்னதாக, பிளவுபட்ட அரசாங்க செயற்பாடுகளைக் கொண்டிருக்காமல், ஒன்றிணைந்த அரசாங்கத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு, நாட்டு மக்களின் நலன்கருதியும், தேசிய பாதுகாப்பு கருதியும் உழைக்க முன்வாருங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன். 

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, நாட்டில் முஸ்லிம் மக்களது வர்த்தக நடவடிக்கைகளை முடக்குகின்ற வகையிலான சில கைங்கரியங்கள் சில தீய சக்திகளின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய ஏற்பாடுகளின் பின்னணிகள் கண்டறியப்பட்டு, அவை ஒழிக்கப்பட வேண்டியத் தேவையும் இந்த அரசுக்கு இருக்கின்றது என்பதையும்; இங்கு வலியுறுத்துவதுடன்,

வெளிநாட்டு அகதிகள் சிலரை வவுனியா மாவட்டத்தில் குடியேற்றுவது தொடர்பிலும் தற்போது கதைக்கப்பட்டு வருகின்றது. அதற்கு முன்பதாக வவுனியா மாவட்டத்தில் உள்ள – குறிப்பாக மீள்குடியேறியுள்ள மக்களுக்கான காணிகள் உரிய முறையில் பகிரப்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 5 மார்ச் 2003 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள்  வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது.  நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு  பண வீக்கத்தை எதிர்கொள்ளப் போதாது - நாடாளுமன்றத்தி...