போராட்டத்தின் பங்காளிகளே மாகாணசபையை நிர்வகிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, July 6th, 2018

எமது மக்களது துரதிர்ஸ்டம் காரணமாக வடக்கு மாகாண சபையானது மக்களுக்கு எவ்விதமான பலனையும் பெற்றுக் கொடுக்காமல் வெறும் பதவிகளுக்கான சபையாக மாறிவிட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் மற்றும் தேர்தல் முறைகள் பற்றிய சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –
எமது நீண்ட கால அர்ப்பணிப்புடன் கூடிய போராட்டத்தின் பயனாக எமக்குக் கிடைத்துள்ள மாகாண சபை முறைமையினை நாம் ஒரு பொன்னான வாய்;ப்பாகவே கருதி வருகின்றோம்.
இந்த அரசு ஆட்சிப்பீடமேறிய காலந்தொட்டு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் கூறப்பட்டு வந்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது எந்தளவிற்குச் சாத்தியமானது என்பது தொடர்பில் சந்தேகங்களே நிலவுகின்ற நிலையில், எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வாக அதாவது, 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப் படுத்துவதில் இருந்து ஆரம்பித்து, படிப்படியாக முன்னேற்றம் காண வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். தொடர்ந்தும் மேலும் பெறவேண்டிய அதிகாரங்களை அதாவது இரண்டாவது சபைஇ மேலதிக விஷேட அதிகாரங்கள் போன்றவற்றையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இருப்பினும், இன்று வடக்கு மாகாண சபையை எடுத்துக் கொண்டால் செயற்திறன் இன்மையினால், அதன் மூலமான பலன்கள் எமது மக்களுக்குக் கிட்டாமல் உள்ளது. தற்போது வடக்கு மாகாண சபையின் ஆட்சி நிர்வாகத்தினை மேற்கொண்டு வருகின்ற பிரதான கட்சியினரே “வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் தெரிவானது தவறானது” எனக் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
நாம் வடக்கு மாகாண சபையின் ஆட்சியினைக் கைப்பற்றியிருந்தால், வடக்கு மாகாணத்தில் தேனும், பாலும் ஓட வைத்திருப்போம். எனினும், எமது மக்களது துரதிஸ்டம் காரணமாக வடக்கு மாகாண சபையானது எமது மக்களுக்கு எவ்விதமான பலனையும் பெற்றுக் கொடுக்காமல், வெறும் பதவிகளுக்கான சபையாகவே மாறிவிட்டுள்ளது.
இன்று வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் வன்முறைச் செயற்பாடுகள் அதிகரித்தே வருகின்றன. அண்மையில் சுழிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் கொல்லப்பட்ட சம்பவம் பாரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
நேற்றைக்கு முன் தினம் அராலி பகுதியில் வயோதிபப் பெண்னொருவர் கடுமையான பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு, கொள்ளைச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று நேற்றைக்கு முன்தினம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் வாள் வெட்டுக் கும்பல்களின் அட்டகாசங்கள் என வடக்கு மாகாணம் – குறிப்பாக யாழ்ப்பாணம் தொடர்ந்தும் பதற்ற நிலையிலேயே இருந்து வருகின்றது.
எனவே, வடக்கில் அண்மைக் காலமாக ஏற்பட்டு வருகின்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சமூகச் சீர்கேடுகளை உடனடியாக நிறுத்தி, இயல்பு நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும். இத்தகைய செயற்பாடுகளின்போது, சட்டம், ஒழுங்கினைப் பேணுகின்றபோது மிகுந்த அவதானத்துடனான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கினைப் பேணுவதற்காக எனக் கூறப்பட்டு, மேற்படி செயற்பாடுகளில் இறங்கியவர்களால் அதற்கு மாற்றமான விளைவுகளே அங்கு தோற்றுவிக்கப்பட்டு, நீண்ட கால மோதல் நிலைமை ஏற்பட்டிருந்தமையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எமது பகுதியில் தினந்தோறும் நடந்தேறி வருகின்ற சமூகச் சீர்Nடுகளுக்கு நிலையற்ற – கொள்கையற்ற தலைமைத்துவமே காரணமாக இருக்கின்றது. எமது மக்களுக்கான தலைமைத்துவம் என்பது எமது மக்களை நேர்வழிப்படுத்தி, முன்னேற்றப் பாதையில் எமது மக்களை அழைத்துச் செல்வதாக இருத்தல் வேண்டும். எமது மக்களுக்கான நேரிய வழியிiனைக் வகுத்துக் கொடுப்பதற்காகவே நாம் அரசியல் பிவேசம் செய்துள்ளோம். எனினும், போதிய அளவு அரசியல் பலம் இல்லாத காரணத்திகால் எம்மால் முழுiமாயக செயற்பட இயலாதுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
இருப்பினும், எங்களுக்கு கிடைத்துள்ள அரசியல் அதிகாரங்களை நாங்கள் எமது மக்களுக்காகவே பயனுள்ள வகையில் பயன்படுத்தி வருகின்றோம். இதனை எமது மக்கள் உணர்ந்து வருவதாலேயே எமக்கான அரசியல் பலம் என்பது அதிகரித்து வர ஆரம்பித்துள்ளது.
எனவேதான், வடக்கு மாகாண சபையின் தற்போதைய ஆட்சிக் காலம் நிறைவுற்றதன் பின்னர் உடனடியாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை துரிதமாக நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் முன்வைத்து வருகின்றோம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மாகாண சபையின் தேர்தல்களை புதிய முறைமையின் கீழ் நடாத்த வேண்டுமானால், அது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது. எனவே, இத்தகைய காரணம் காட்டி பிற்போடாமல், புதிய தேர்தல் முறைமையில் உடனடி திருத்தங்களை மேற்கொண்டோ, அல்லது பழைய முறையில் திருத்தங்களை மேற்கொண்டோ உடனடியாக மாகாண சபை தேர்தல்களை நடத்தி முடிப்பது சிறந்த வழியாகும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்திலே வலியுறுத்த விரும்புகின்றேன்.
அந்த வகையில், குறிப்பாக, கிழக்கு மகாண சபையின் ஆட்சி அதிகாரம் இன்னும் ஆளுநர் அவர்களின் கைகளிலேயே தொடர்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போது ஆளுநர்களது கைகளில் ஆட்சியதிகாரங்கள் உள்ள ஏனைய அனைத்து மாகாண சபைகள் உள்ளிட்ட, இந்த வருடத்திற்குள் உத்தியோகப்பூர்வ ஆட்சி நிர்வாக காலம் முடிவடைகின்ற ஏனைய மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை விரைந்து நடாத்தி அவற்றின் நிர்வாகங்களை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வடக்கு மாகாண சபையானது எமது மக்களின் நன்மை கருதியாக மாற்றிமைக்கப்பட்டால், அதன் மூலமாக எமது மக்களின் தேவைகள் பலவற்றினைத் தீர்க்க முடியும். என்றாலும், வடக்கு மாகாண சபையின் ஆட்சியதிகாரத்தை எமது மக்களிடமிருந்து அபகரித்துக் கொண்டவர்களால் அதனை திறம்பட இயங்க வைக்க இயலாத காரணத்தினால், மாகாண சபை முறைமையை நிராகரித்துவிட முடியாது.
மாகாண சபை முறைமை தோற்றுவிக்கப்பட்ட காலத்திலேயே அதனை ஏற்று, திறம்பட நிர்வகிக்கப்பட்டிருந்தால், இன்றைய நிலையில் எமது மக்களின் பிரச்சினைகள் பல தீர்ந்திருக்கும் என்பதை நான் தொடர்ந்தும் கூறி வருகின்றேன்.
அன்று இந்த மாகாண சபை முறைமையினை எதிர்த்தவர்கள், தும்புத் தடியால்கூட தொட்டுப் பார்க்க மாட்டோம் என்றவர்கள் தமது அரசியல் சுயலாப பதவிகளுக்காக மட்டுமே ஆட்சியதிகாரத்தில் இருந்து கொண்டு, மாகாண சபை முறைமையினையே பழுதாக்கிவிட்டுள்ள நிலையே தொடர்கின்றது.
இன்றைய நிலையில், போதைப் பொருட்களின் கூடாரமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் காணப்படுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே அதிகளவு போதைப் பொருட்கள் விற்பனையில் இருப்பதாகவே நாளாந்த ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.
இந்தப் போதைப் பொருட்கள் ஏற்படுத்துகின்ற சமூகச் சீர்கேடுகள் கொஞ்சநஞ்சமல்ல. பாலியல் வன்புணர்களுக்கும் இந்தப் போதைப் பொருட்களே பெருமளவில் காரணமாக இருக்கின்றன. அதாவது, இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற அமைதியின்மை என்பது பாரியதொரு கேள்விக்குறியாகவே வளர்ந்து வருவதை வடக்கிலே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இத்தகைய அமைதியின்மையின் எதிரொலியாகவே பல்வேறு வன்முறை சார்ந்த சம்பவங்கள் யாழ் குடாநாட்டிலே இடம்பெற்று வருகின்றன. வேலைவாய்புகளற்ற பிரச்சினை ஒரு புறத்தில் தலைதூக்கி வருவதும், விவசாயம் உள்ளிட்ட செய்கைகள் தொடர்பில் காலநிலையின் பாதிப்புகளும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுமென வடக்கின் அனைத்து மாவட்டங்களும் பாரிய வறுமை நிலைக்கே தள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் எமது மக்களைத் தலைநிமிர்ந்து வாழச் செய்வதற்காகவே நாம் உழைத்து வருகிறோம். எனினும், போதிய அரசியல் பலத்துடன் எம்மால் செயற்பட முடியுமானால், இன்னும் பல்வேறு விடயங்களை எமது மக்களது நலன்கருதி எம்மால் சாதிக்க முடியும் என்பதையே நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.
அந்த வகையில் மாகாண சபை என்பது எமது மக்களுக்கு முக்கியமானதொரு ஏற்பாடாகும். இதனைத் திறம்பட இயங்கச் செய்வதிலேயே அதனது வெற்றியானது தங்கியுள்ளது.
இன்றைய நிலையில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இல்லை என்போர். அந்த அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்து வருகின்றனர். சரியான முறையில் மாகாண சபை முறைமையினை இயங்கச் செய்திருந்தால், எமது பகுதிகள் இன்று வறுமை நிலைக்கு உட்பட்டிருக்காது.
எனவே, எமது மக்களின் நலன்களிலிருந்து சிந்தித்து, செயற்படத் தக்கவர்களாகிய எமது கைகளில் வடக்கு மாகாண சபை தரப்படுமானால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் எமது பகுதிகளை நாமே அபிவிருத்தி செய்து கொள்ள முடியம் என்பதை மிகவும் வலியுறுத்திக் கூறிவைக்க விரும்புகின்றேன்.
மாகாணசபைகள் குறித்து இந்தச் சபையில் மூவின மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுகூடி இன்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்!
இதை நான் அகமகிழ்ந்து வரவேற்கின்றேன். ஏனெனில்,.. 13வது திருத்தச்சட்டம் குறித்தோ,. அன்றி அதன் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் குறித்தோ தமிழர் தரப்பில் இருந்து பலரும் பேச மறுத்து வந்திருக்கிறார்கள்.
மாகாண சபைத் தீர்வானது உழுத்துப்போன தீர்வென்றும்,.. ஒன்றுக்கும் உதவாத தீர்வென்றும், அதை “துப்புத்தடியால் கூட தொட்டும் பார்க்க மாட்டோம்” என்றும் தமிழர் தரப்பில் இருந்து சிலர் கூறி வந்திருக்கிறார்கள்.
தீண்டப்படாத தீர்வாக நினைத்த மாகாண சபை குறித்து காலம் கடந்தாவது சிலர் பேச வந்திருப்பது “சுடலை ஞானம்” என்றே சொல்லத் தோன்றுகிறது.
இன்று பிறந்திருக்கும் சுடலைஞானம் அன்றே பிறந்திருந்தால் எமது மண்ணில் பேரழிவுகள் நடந்திருக்காது! பெருந்துயரம் நிகழ்ந்திருக்காது!
எமது மக்கள் கொத்துக்கொத்தாக செத்தொழிந்து போன அவலம் இங்கு நடந்திருக்காது!…
“இரு தேசம் ஒரு நாடு” என்று கூறி கற்பனைத் தேரேறி வருவோரும் இது எமக்குத் தீர்வல்ல என்று மாகாண சபை முறைமையை மறுத்தவர்களும்,.. அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்கே தம்மை தயார் படுத்தி வருகின்றார்கள். அதேவேளை தமது பதவி சுகத்திற்காக தங்களது பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்தும் வருகின்றார்கள்.
இது எமது கட்சியின் அரசியல் தீர்க்கதரிசனத்திற்கு வரலாறு வழங்கியிருக்கும் பெரு வெற்றி என்றே கூற வேண்டும். 13வது திருத்தச்சட்டமோ அதன் பிரகாரம் உருவான மாகாண சபைகளோ தமிழ் தேசிய இனத்தின் முழுமையான தீர்வாகாது.
ஆனாலும், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்களைப் பெற்று, அதாவது இரண்டாவது சபையையும் விசெட அதிகாரங்களையும் பெற்று மேலும் அதைப் பலப்படுத்தி எமது இறுதி இலக்கு நோக்கிச் செல்வதே எமது விருப்பமாகும்.
ஆனாலும்,.. மக்களை உசுப்பேற்றி,.. போலி வாக்குறுதிகளை வழங்கி மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் தாம் பெற்ற அரசியல் அதிகாரத்தை வைத்து முன்நோக்கி நகர்த்தியிருக்கவில்லை.
ஆடம்பர வாகனங்களுக்காகவும். சொகுசு மாளிகைகளுக்காகவும், தமது சுகபோகங்களுக்காகவும், ஒன்றுக்கும் உதவாத நிறைவேறாத பிரேரனைகளுக்காகவுமே கைதடி மாகாண சபையை வெறும் கூச்சலிடும் கூடாரமாகவே இன்று வரை அவர்கள் பயன் படுத்தி வருகின்றார்கள்.
13வது திருத்தச்சட்டம் என்பதோ அன்றி மாகாண சபைகள் என்பதோ நாங்கள் யாரிடமும் இரந்து கேட்டு பெற்ற பிச்சையல்ல,.
மயிலே மயிலே இறகு போடு என்று நாங்கள் யாரிடமும் இதை கேட்டுப் பெற்றதில்லை. எமது ஆரம்பகால உரிமைப் போராட்டத்தில் பங்கு பற்றிய அனைத்து விடுதலை இயக்கங்களும் போராடிப் பெற்ற உரிமை இது.
ஆனாலும், தமிழ் மக்களின் இரத்தமும் தசையுமாகச் சேர்ந்து பெற்ற இந்த மாகாண சபையின் நாற்காலியில் உட்கார்ந்து இருப்பவர்கள் யார் என்பதையே நான் இன்று கேள்வியாகக் கேட்கின்றேன்.
அரசியல் தீர்வுமின்றி,.. போதிய அபிவிருத்தியுமின்றி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழ் பேசும் மக்களுக்கு கரையேறி வரும் ஒரு கப்பலாகவே இந்த மாகாண சபை இருந்திருக்க வேண்டும்.
ஆனாலும்,.. அந்தக் கப்பலின் மாலுமியாக இருப்பவர் தமிழ் மக்கள் கரையேற வேண்டிய கலங்கரை விளக்கை நோக்கி அந்தக் கப்பலைக் கொண்டு செல்லாமல் இருப்பது யார் குற்றம்?..
இதுதான் தான் இன்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்திருக்கிறது. வலிகளையும்,.. வதைகளையும் சுமந்த எமது மக்களின் வரலாற்றுடன் பின்னிப் பினைந்தவர்களே எமது மக்களை ஆளும் தகுதி படைத்தவர்கள்.
வலிகள் சுமந்தோரே எம் மக்களுக்கு வழி காட்ட உருத்துடையோர்!…

Related posts:


வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
களுத்துறை கன்னங்கர பாடசாலை தமிழ்ப் பிரிவின் இன்றைய நிலை கவலைக்கிடமானது - டக்ளஸ் தேவானந்தா சபையில் தெ...
நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!