வடக்கில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, December 5th, 2016

வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்படி அமைச்சு கிளிநொச்சி மாவட்டத்தில் விளையாட்டுத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனது தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிய எதிர்பார்க்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கயிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்

கடந்த கால யுத்தத்தின் இறுதிக்காலம் வரையிலான நேரடிப் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையையும், அதற்கான உட்கட்டுமானங்களையும் மீளக் கட்டி எழுப்பப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களது அவதானத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்.

அந்த வகையில், வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்படி அமைச்சு கிளிநொச்சி மாவட்டத்தில் விiயாட்டுத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனது தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் தனது உரையின்போது அறியத் தருவார் என எதிர்பார்க்கின்றேன்.

மேலும், வடக்கில் சகல வசதிகளையும் கொண்ட சர்வதேச தரமுடைய விளையாட்டரங்கு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற எமது நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, 2011ம் வருடம் ஜூலை மாதம் 20ம் கிளிநொச்சி மாவட்டத்தில் இதற்கென சுமார் 325 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு, விளையாட்டரங்கு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 2013ம் வருடத்தில் இது பூர்த்தி செய்யப்பட்டு, தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை.

அதன் பின்னர், இந்த விளையாட்டரங்கின் பணிகள் தொடர்பாக நான் கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி இந்தச் சபையில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த மைதான நிர்மாணப் பணிகள் முடிக்கப்பட்டு, இங்குதான் 2016ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நடத்தப்படுமென விளையாட்டுத்துறை அமைச்சர் அன்று கூறியிருந்தும், தேசிய விளையாட்டு விழா துரையப்பா மைதானத்திலேயே நடத்தப்பட்டது.

எனவே, இதன் பணிகள் எந்தளவில் இருக்கின்றன என்பதையும், இந்த விளையாட்டு மைதானத் திட்டமும், கிளிநொச்சி மாவட்டத்தில் 250 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படுவதாக அமைச்சர் அவர்கள் கூறகின்ற விளையாட்டுத் தொகுதியும் ஒன்றா என்பது குறித்தும்,அதே நேரம், யாழ்ப்பாணத்தில் சகல வசதிகளையும் கொண்ட உள்ளக விளையாட்டுத் தொகுதி ஒன்று அமைக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மைதானமொன்று அமைக்கப்பட வேண்டும்  என்ற எனது கோரிக்கைகளுக்கு அமைவாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கௌரவ அமைச்சர் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும், மேலும், வடக்கு மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை நாடளாவிய ரீதியில் ஏனைய சங்கங்களுடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் கௌரவ அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத் துறைக்குத் தனது அளப்பரிய பங்களிப்பினை வழங்கியுள்ள திருவாளர் சதாசிவம் அவர்களது பெயரை மேற்படி வடக்கில் அமைக்கப்படுகின்ற சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்குச் சூட்டுமாறும், இந்த ஏற்பாடுகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது உரையில் அறியத் தருவார் என எதிர்பார்க்கின்றேன்.

பிராந்திய விளையாட்டுக் கழகங்களை  வலுமை மிக்கதாகக் கட்டியெழுப்ப வேண்டும்.

இந்த ஆண்டு தேசிய ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் கிழக்கு மாகாணம் 8 வது இடத்தையும், வடக்கு மாகாணம் 9வது இடத்தையுமே பெற்றிருக்கின்ற நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத் துறையை கட்டியெழுப்பும் நோக்கில் பாடசாலை மட்டங்களிலிருந்தே அதனை ஊக்குவிப்பதற்கும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், மற்றும், கபடி உட்பட ஏனைய தேசிய ரீதியிலான விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், கடற்கரை விளையாட்டுக்களை மேலும் வளர்த்தெடுக்கக் கூடிய செயற்திட்டங்களை அப் பகுதிகளில் முன்னெடுக்குமாறும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பிராந்திய விளையாட்டுக் கழகங்களை வலுமிக்கதாக மேம்படுத்தி, அவற்றை ஏனைய மாவட்டங்களுடன் தொடர்புபடுத்தும் நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறும், குறிப்பாக முன்னாள் யுத்த வலயங்களான வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள இளைஞர், யுவதிகளை அதிக பட்சம் விளையாட்டுத் துறையுடன் இணைத்து, அவர்களை N;;மம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து உதவுமாறு கௌரவ அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களிடம் கேட்டுக் கொள்வதுடன், கடந்த பெப்ரவரி மாதம் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்வானந்த சொனோவால் அவர்களுடன் கௌரவ அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்கள் கலந்துரையாடியதாக அறிகின்றேன். அந்த வகையில், இந்திய அரசின் உதவிகளைப் பெற்றும் மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதுடன், யாழ் துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்புப் பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் பணிகள் ஒழுங்குற மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

10.-1-300x229

Related posts:


மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
டொரிங்டன் தோட்ட, கல்மதுரை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலி...
 பதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...