போதைப் பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ள குடாநாட்டில் இலக்குவைக்கப்படுகின்ற இளைஞர்கள் நிலை மோசமானது! –  டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, August 24th, 2016

இலங்கைக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வருகின்ற முக்கிய தளமாக வடக்கு மாகாணம் மாறியுள்ள நிலையில், அதனால் எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேளிவிக்குறியாக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ் புத்திஜீவிகள் குழுவினர் நேற்றைய தினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், போதைப் பொருட்கள் பெருமளவில் கடத்தப்படும் ஒரு தளமாக வடக்கு மாகாணம் தற்போது மாறியுள்ளது. குறிப்பாக, கேரள கஞ்சா யாழ் குடாநாட்டின் ஊடாக அதிகளவில் கடத்தப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காவல்த்துறையினர் தொடர்ந்தும் இவற்றைக் கைப்பற்றி வருவதாகவும், சந்தேக நபர்களை கைது செய்து வருவதாகவும் கூறுகின்ற நிலையிலும் மேற்படி கடத்தல்கள் குறைந்தபாடில்லை. எமது மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக நீதித்துறை சார்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாக ஊடக செய்திகளின் மூலம் தெரியவருகிறது.  எமது மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறோம் எனக் கூறிக்கொண்டு இவர்கள் எமது மக்களை சீரழிக்கும் இவ்வாறான விடயங்களில் ஈடுபட்டும், ஈடுபடும் பிற நபர்களை விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

காவல்த்துறையினரால் போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுகின்ற பகுதிகளைப் பார்க்கின்றபோது, அப்பகுதிகளிலேயே அண்மைக் காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளதுடன், குறிப்பாக கல்வி நிறுவனங்களை அண்மித்த பகுதிகளாக இவை அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக, இவ்வாறான போதைப் பொருள் விற்பனைகள் எமது இளம் சந்ததியினரை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது. எனவே, இதனைத் தடுக்கும் முயற்சியில் காவல்த்துறை மட்டுமே ஈடுபடும் என இருந்துவிடாது, எமது சமூக நலன்சார் அமைப்புகள், புத்திஜீவிகள், சமய மற்றும் சமூகப் பெரியார்கள் அனைவரும் ஈடுபட வேண்டுமென்றும், பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.

அதே நேரம், போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற செயற்பாடுகளை முறியடித்து வருகின்ற தமிழ் பொலிஸார் மீது சில தென்பகுதி பொலிஸார் புலி முத்திரை குத்தி வருவதாகவும், இவை தொடர்பில் ரகசிய தகவல்களை வழங்குவோர் பொலிஸாரால் பகிரங்கமாகக் காட்டிக் கொடுக்கப்படுவதாகவும் புத்திஜீவிகளால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், இது தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சரின் அவதானத்துக்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts:

மாகாண மட்டத்தில் விளையாட்டுக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா
வீதியில் போராடும் மக்களுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலிய...
அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

 இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கள் மாகாண மட்டத்திலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா
புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் குணாம்சங்களையே கொண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்...
ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறைக...