ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறைகூவல் !

Friday, May 20th, 2022

மக்களின் நீதியான உரிமைப்போராட்டத்தில்
ஆகுதியான அனைத்து விடுதலை இயக்க போராளிகளுக்கும்
பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் அனைத்து மக்களும் நினைவு கூர்வது பற்றிய தனது எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வகையில் காலிமுகத் திடலில் இடம்பெற்ற நினவைுகூரலை சுட்டிக்காட்டியதுடன், அனைவரும் இணைந்து பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.

நாடாளுமன்றில் இன்று(19.04.2022) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும்,

கெளரவ சபாநாயகர் அவர்களே!….

நெருக்கடி மிகுந்த இன்றைய காலச்சூழலில் இருந்து மீண்டு வரத்துடிக்கும் அனைத்து இலங்கை மக்களின் சார்பாக இந்த உயரிய சபையில் சில விடயங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்,..

நீதிக்காகவும்,. பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும்,

இன மத சமூக பெண்ணிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும்

அன்று நாமும் உரிமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்.

ஆனாலும், வன்முறைகளின் கூடாரங்களாக தமிழரின் வாழ்விடங்கள் 

மாற்றப்பட்டிருந்த நிலையில்,..

நீதியான எமது உரிமைப்போராட்டம் அநீதியை நோக்கிய

அழிவு யுத்தமாக திசை திருப்பப்பட்டிருந்த நிலையில்,..

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற அரியதொரு வாய்ப்பை அடுத்து,

தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு,. தேசிய நல்லிணக்க அரசியல் வழிமுறையில் நாம் பயணிக்க ஆரம்பித்தவர்கள்,..

இலங்கை – இந்திய ஒப்பந்த நடைமுறைகளை சரியான திசைவழி நோக்கி

நகர்த்தி செல்லும் உரிமை எமக்கு அன்று வன்முறை செயற்பாடுகளால் மறுக்கப்பட்டிருந்தாலும் – அந்த ஒப்பந்த நடைமுறைகளில் நாம் பங்கெடுக்காது போயிருந்தாலும்,..

அன்றிலிருந்து வன்முறை வழிமுறையின் ஊடாக

எமது பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது என்பதை

எமது கட்டாய கட்டளைகளாக நாம் ஏற்றுக்கொண்டவர்கள்.

அரசியல் மக்களை பிரிக்கிறது, பொருளாதாரம் மக்களை ஒன்றிணைக்கிறது.

இன்று நாம் எதிர் கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை தீவில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரையும்

ஒரே புள்ளியில் இணைய வைத்திருக்கிறது.

இத்தகைய இடர்காலச் சூழலில் இருந்து அனைத்து இன மத சமூக மக்களும்

மீண்டு வர வேண்டும்.

சாதாரண மக்களின் உணர்வுகளை நான் என்றும் மதிப்பவன்.

அமைதி வழியில் போராடும் சுதந்திரம் எவருக்கும் உண்டு.

ஆனாலும் வன்முறைகள் எந்த வடிவத்தில் யாரால் முன்னெடுக்கப்பட்டாலும்

அவைகள் குறித்து நான் விமர்சனங்கங்களை முன்வைப்பவன்.

இது குறித்து யாருடைய உணர்வுகளையும் நான் கொச்சைப்படுத்துவதாக 

எண்ணிவிட மாட்டீர்கள் என நம்புகிறேன்.

நாம் வகுத்திருக்கும் தேசிய நல்லிணக்க வழிமுறை என்பது

சரணாகதி அரசியல் என்று சிலர் எம்மை கொச்சைப்படுத்தினாலும்

அது குறித்து நான் வருத்தப்படபோவதில்லை.

போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி எம்மை தூற்றுவோர் தூற்றட்டும்

நாம், செல்லும் வழி நடைமுறைச் சாத்தியமானதாக சரியான  வழியாகவே இருக்கும் – இதை வரலாறு இன்று நிரூபித்து வருகின்றது.

ஆளும் கட்சி மட்டுமன்றி,. எதிர்க்கட்சிகள் மற்றும்

முஸ்லிம் சிங்கள மக்களுடனும் எமது தேசிய நல்லிணக்க உறவுக்கான

நேசக்கரங்களை நாம் நீட்டியே வருகின்றோம்.

இத்தகைய தேசிய நல்லிணக்க உறவே தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கான திறவு கோலாகவும் இருக்க முடியும்.

அண்மையில் நடந்த வன்முறைகளின் போது கொல்லப்பட்ட

சிங்கள சகோதர மனித உயிர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

தாக்கப்பட்டு, காயப்பட்டு, உடமைகளை இழந்தும் இருப்போருக்கும் 

ஆறுதல் கூறுகின்றேன்.

இதேவேளை,.. எமது நீதியான உரிமைப்போராட்டத்தில்

ஆகுதியான அனைத்து விடுதலை இயக்க போராளிகளுக்கும்

பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்றேன்.

அழிவுகளும், அவலங்களும் அற்ற, உரிமையுடன் வாழ முடிந்த

சமாதான பூமியே எமது மக்களின் கனவுகள்.

இத்தகைய எமது மக்களின் ஆக்கபூர்வமான விருப்பங்களுக்கு மாறாக

முள்ளிவாய்க்கால் அழிவுகள் வரை எமது மக்களை உரிமைப் போராட்டம் என்ற பெயரில் இழுத்து சென்ற வடுக்கள் நிறைந்த அந்த இருண்ட நாட்களை நான்

நினைத்துப்பார்க்கிறேன்.

அந்த இறுதி அழிவு யுத்தத்தில் பலியாகிப்போன எமது பிஞ்சுக்குழந்தைகள்  இளையோர்கள் முதியோர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் எனது ஆழ்மன அஞ்சலி மரியாதையை செலுத்துகின்றேன்.

யுத்தத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது எமது மக்களின் ஜனநாயக உரிமை. அதை நான் ஒருபோதும் மறுத்ததில்லை.

ஆனாலும் இறந்த மனித உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்று கூறிக்கொண்டு, எமது மக்களின் அழிவுகளை வைத்து அதில் அரசியல் பிழைப்பு

நடத்துவதை நான் ஒரு போதும் ஏற்கப்போவதில்லை.

நான் புலிகளின் தலைமையை எமது மக்களின் நலன் சார்ந்தே

ஒளிவு மறைவின்றி நேரடியாக விமர்சித்து வந்திருக்கிறேன்.

அவர்களின் செயற்பாடுகள் மக்களையும் அழித்து அவர்களையும் அழிக்கப் போகின்றது என்பதை நான் அன்று கூறிவந்திருக்கிறேன். அதனை வரலாறு நிரூபித்திருக்கின்றது.

 அவர்களின் இறப்பை வைத்து நான் ஒருபோதும் அதில்

மகிழ்ச்சி அடைந்தவன் அல்ல,.

ஆனாலும்,. அண்ணை எப்ப சாவான், திண்ணை எப்ப காலி

என காத்திருந்தவர்கள்…

முள்ளி வாய்க்கால் முடிவுகளின் போது ஆனந்த கூத்தாடி  உள்ளூர மகிழ்ந்தவர்களுமே

இன்று முள்ளி வாய்க்கால் முற்றம் என்று கூறி அங்கு நின்று

நினைவேந்தல் செய்கிறார்கள்.

தமது உறவுகளை இழந்து தவிக்கும் சாதாரண பொது மக்களின்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மட்டுமே நான் மதிக்கின்றேன்.

யுத்தத்தில் இறந்த சகல மக்களையும் நினைவு கூருவதற்கும் அவர்களின் மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை 2016 ஆம் ஆண்டு இந்த உயரிய சபையில் தனிநபர் பிரேரணையாக நான் கொண்டு வந்திருந்தேன்.

துரதிஸ்டவசமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது ஓடி ஔித்துவிட்டார்கள்.

ஆனால் அதிஸ்டவசமாக தென்னிஙலங்கை நாடளுமன்ற உறுப்பினர் குறித்த தனிநபர் பிரேரணையை நிறைவேற்றித் தந்திருந்தார்கள்.

அவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், என்னுடைய அந்த விருப்பத்தினை பிரதிபலிக்கும் வகையில், சகல மக்களையும் சகல மக்களும் நினைவுகூரும் வகையில் காலிமுகத் திடலில் நேற்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கும் என்னுடைய மரியாதையைப் பதிவு செய்கின்றேன்

அத்தோடு,. மாறி மாறி நடந்து முடிந்த இனக்கலவரங்களினாலும்,

தமிழ் மக்களின் உரிமைப்போரின் பெயரால் நடத்தப்பட்ட

சகோதர இயக்க படுகொலைகளாலும்,.உள்ளியக்க படுகொலைகளாலும்,

இஸ்லாமிய சகோதர மக்கள் மீதான படுகொலைகளாலும்,

அப்பாவி சிங்கள சகோதர மக்கள் மீதான படுகொலைகளாலும்

மரணித்து போன அனைத்து மனித உயிர்களையும் நினைவு கூர்கின்றேன்.

அழிவு யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

உறவுகளின் கண்ணீருக்கு பரிகாரம் தேடுவோம்.

ஆகுதியான அனைத்து மக்களையும் நெஞ்சில் நினைவேந்தி

அழகார்ந்த சமத்துவ தேசத்தை உருவாக்குவோம்!

Related posts:


எமது முயற்சியால் கொண்டுவரப்பட்ட கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் பணிகள் பூர்த்தி செய்யப்படாதிரு...
மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
வடக்கு மாகாண சபை ஊழல் தொடர்பில் மத்திய அரசின் நடவடிக்கை வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக...