செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 5 மார்ச் 2003 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Wednesday, March 5th, 2003

கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே!

1987ம் ஆண்டுக்கு முன்னர் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து செயற்பட்ட ஈ.பி.டி.பி. யினராகிய நாம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதங்களை ஒப்படைத்து தமிழர்களின் பிரச் சினைகளுக்கு ஜனநாயக வழியில் நிரந்தரமான அரசியல் தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றோம். ஈழமக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம் என்றும் பேச்சுவார்த்தைகளை அரசியல் தீர்வு முயற்சிகளை ஊக்குவித்தவர்களே தவிர அதற்குத் தடையாக இருந்தவர்களல்ல இன்று புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியல் தீர்வில் நம்பிக்கை வைத்து யுத்த நிறத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதை நாம் முழுமனதோடு வரவேற்கின்றோம். தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகளும் வெற்றி யடைய வேண்டுமென நாம் மனதார விரும்புகின்றோம்.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தின் அனர்த்தங்களால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வரும் மக்களுக்கு இச்சாமாதானப் பேச்சுவார்த்தை மூலம் ஒரு விடிவு ஏற்படுமென்றால் மகிழ்ச்சியடைபவர்களில் நாம் முதலாவது இடத்தில் இருப்போம். ஆனால் கடந்த காலங்களில் நம்பிக்கையில்லாமல் பேச்சுவார்த்தைகளை யார் குழப்பினார்கள் என்பதை இந்த நாட்டு மக்களும் இராஜதந்திரிகயும் சர்வதேச உலகத்தவர்களும் நன்கு அறிவார்கள். கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை யுத்த நிறுத்தம் போன்றவை மேற்கொள்ளப்பட்ட காலகட்டங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய புலிகள் தம்மை இராணுவ ரீதியாகப் பலப்படுத்த முயற்சித்தார்களே அன்றி நிரந்தரமான அரசியல் தீர்வை எட்டும் வகையில் நேர்மையாகச் செயல்படவில்லை.சமாதானத் தீர்வில் மக்கள் காட்டிய ஆதரவைக் கூட அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பது தான் கடந்தகால வரலாறு கடந்த கால அனுபவங்களில் இருந்து இன்று கூட புலிகள் பேச்சுவார்த்தைகளிலோ அரசியல் தீர்வுகளிலோ பூரண நம்பிக்கை வைத்துச் சமாதான முயற்சிகளுக்கு முன்வரவில்லை. 2001 செப்ரெம்பர் 11ந் திகதியன்று அமெரிக்க நகரங்கள் மீது பின்லேடன் குழுவினர் தாக்குதல்களை நடத்தியதற்குப் பின்னர் ஏற்பட்ட சர்வதேச நிலைமைகளால் பலவீனப்பட்டுள்ள புலிகள் காலங்கடத்தும் தந்திரோபாயமாகத்தான் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சிகளை மேற்கொள்கிறார்களா என நாம் சந்தேகக் கண்களோடு பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.

இதை முடித்துக் கொண்டு உங்களிடம் வருகிறேன். கடந்தகால வரலாறு தருகின்ற படிப்பினை அது “ஈழத் தேசிய விடுதலை முன்னணி” ENDLF – என்ற பெயரில் போராளி அமைப்புக்கள் கூட்டுச் சொந்தபோது ஸ்ரீ சபாரத்தினம் பத்மநாபா பாலகுமார் ஆகியோருடன் பிரபாகரனும் கலந்து கொண்டு கையொப்பம் இட்டார். அதன் பிறக என்ன நடந்ததென்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நன்கு அறிவர். இந்த அமைப்பின் போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் அவர்களின் உடல்கள் வீதிகளில் போட்டு எரிக்கப்பட்டதும் கையொப் பமிட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதும் வரலாறாகிவிட்ட விடயம்.அதேபோல புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களான ராஜீவ் காந்தி முதல் பிரேமதாச வரையான பல்வேறு தலைவர்களுக்கும் என்ன பரிசு கிடைத்தது என்பதையும் எல்லோரும் நன்கு அறிவர். இதற்கு ஜனாதிபதி சந்திரிக்காவும் தலைவர் திரு.சிவசிதம்பரம் அவர்களும் கூட வாழும் சாட்சிகள் என்பதை எவரும் மறந்துவிட முடியாது. எனவே அத்தகைய ஒரு நீண்ட பட்டியலில் இன்றைய பிரதமரும் இடம்பெற்றுவிடக் கூடாதென்பதே எமது உளமார்ந்த அக்கறையாகும்.

புலிகள் கடந்த காலங்களைப் போல் அல்லாமல் இன்று கனிந்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கு வழிவகுக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் சமாதனத் தீர்வை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மக்களின் கோபாசத்திற்கு உள்ளாவாகள். ஈ.பி.டி.பி. யினராகிய நாம் எந்தக் கட்டத்திலும் சமாதான முயற்சிகளுக்கு தடையாக இருக்க மாட்டோம். என்பதை மீண்டும் வலியுறுத்தி வருகின்றோம். ஆனாலும் எம்மை அரசியல் ரீதியில் செயலிழக்க வைக்கும் நோக்குடன் புலிகளும் அவர்களின் தயவில் அரசியல் நடத்துபவர்களும் செயற்பட்டு வருகின்றனர்.உண்மையிலே அவர்களுக்கு சமதானத் தீர்வில் உறுதியான நம்பிக்கை இருக்குமென்றால் இது போன்ற ஜனநாயமற்ற நடவடிக்கைகளில் ஈடபட மாட்டார்கள்.

தென்னாபிரிக்க நாட்டில் கறுப்பின மக்களால் நிற வெறிக்க எதிராக நடத்தப்பட்ட போராட்டம் முடிவுக்குகொண்டு வரப்பட்டு பேச்சு வார்த்தை மூலம் நிரந்தர அரசியல் தீர்வை நிலைநாட்டுவதற்கு அவர்கள் முயற்சித்தபோது சகல கட்சிகளையும் அங்கீகரித்த சகல இனக் குழுக்களையும் அங்கீகரித்த அவர்கள் எல்லோரும் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சந்தாப்பம் கொடுத்தோடல்லாமல் முதன்முதலாக அமையப்போகின்ற அரசாங்கத்தில் சகலருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் முடிவு செய்தார்கள். எதிரும் புதிருமாக இருந்த நெல்சன் மண்டேலாவும் ஹிங்காதா சுதந்திரக் கட்சித் தலைவரான புத்திரகேசி போன்ற அனைவரும் அரசாங்கத்தில் பங்கெடுக்க வழிசமைத்து அங்கு சமாதானம் நிலைநாட்டப்பட்டது.ஆனால் இங்கே பாதுகாப்பிற்காக நாம் வைத்திருக்கும் ஆயுதங்களைப் பிடுங்க வேண்டும் என்கிறார்கள்.

அரசியலில் எம்மைச் செயழிக்கச் செய்யும் நடவடிக்கைகளைச் செயற்படுத்துகிறார்கள். எமக்குத் தரப்பட்ட ஆயுதங்கள் ஒருபோதும் தமிழ்த் தலைவர்களைக் கொன்று குவிக்கவில்லை. அவை ஒருபோதும் கல்விமான்களை கொன்று குவிக்கவில்லை. அவை ஒருபோதும் அரசாங்க அதிகாரிக்கைளக் கொன்று குவிக்கவில்லை. சகோதரப் படுகொலைகளைச் செய்ய பயன்படுத்தப்படவில்லை. (இடையீடு) அப்போ நீங்கள் தானே தூண்டிவிட்டு எல்லோரையும் கொலை செய்வித்தீர்கள்? உங்களுடைய தலைவர்களே கொல்லப்பட்டிருக்கிறார்கள். அமிர்தலிங்கம் கொல்லப் பட்டிருக்கிறார். (இடையீடு) யோகேஸ்வரன் கொல்லப்பட்டிருக்கிறார்.  உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டிருக்கிறார். நீங்கள் முதுகெலும்பற்ற போலி அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஒரே ஊழல் நடவடிக்கைத்தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். (இடையீடுகள்) இங்கே குண்டுகள் வெடித்தால்தான் உங்களுக்கு வியாபாரம் நடக்கும். அதைத்தான் நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள். அப்படியான அரசியல் வேண்டாம். முதுகெலும்பற்ற ஒரு போலியான அரசியல் வேண்டாம். (இடையீடுகள்)

ஏமாற்று அரசியலைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள்.(இடையீடுகள்)

உங்களுடைய வரலாறுகள் எங்களுக்குத் தெரியும்.

உங்களுடைய வரலாறும் உலகம் முழுவதற்கும் தெரியும். உங்களுடைய மண்டைக்குத் தெரிஞ்சது மாதிரித்தான் உலகத்துக்கும் தெரியும் என்றில்லை. (இடையீடுகள்) உங்களுடைய தலைவர் சிவசிதம்பரத்தை சுட்டது யார்? அவர் எவ்வாறு பிழைத்தார்? உங்களுடைய தேசியத் தலைவர் அமிர்தலிங்கமும் இங்கே கொல்லப்பட்டார். அவர் எப்படிக் கொல்லப்படார்? குழம்பின குட்டையில் மீன் பிடிப்பதுதான் உங்களுடைய வேலையே தவிர வேறொன்றுமல்ல. (இடையீடு) நாங்கள் மக்களைத்தான் கவனிக்கிறோம். (இடையீடுகள்)

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்து ஆயுதங்களைக் கையளித்த நாம் மீண்டும் ஆயுதங்களை தற்காப்புக்காகத் தூக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியவர் யார் என்பதைப் பார்க்க வேண்டும்.ஆரம்பத்தில் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு அல்பிரட் துரையப்பாவில் ஆரம்பிக்கப்பட்ட கொலை அதே குற்றச்சாட்டைச் சுமத்தி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தையும் கூட கொலை செய்யும் நிலைக்கு இட்டுச் சென்றது. அத்துடன் பொலிசார் இராணுவம் எனத் தொடர்ந்து பின்னர் தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் சகல விடுதலை இயக்கத் தலைவர்கள் உறுப்பினர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் கல்விமான்கள் பத்திரிகையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேயர்கள் அண்டை நாட்டுப் பிரதமர் அரசாங்க ஊழியர்கள் பிரதேச சபைத் தலைவர்கள் என்று தொடர்ந்த புலிகளின் கலாச்சாரத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்று நான் எண்ணுகிறேன்.

1990ம் ஆண்டுப் பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்னர் ஏற்பட்ட யுத்த நிறுத்த சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு இந்த அவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தலைவராக இருந்த தமிழர் தேசியத் தலைவரான அமிர்தலிங்கத்தையும் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனையும் சுட்டுக் கொன்றார்கள். பேச்சுவார்த்தைக்குச் சென்ற பேச்சுவார்த்தை மேசையிலே நிராயுதபாணிகளான தலைவர்களைக் கொன்ற செயல் கோழைத்தனமானது. அநாகரிகமானது.

உலக வரலாற்றிலே எங்குமே நடைபெறாத ஒரு செயல். இது போன்ற கடந்தகால சம்பவங்களையும் அனுபவங்களையும் கொண்டுள்ள நாம், இன்று ஈ.பி.டி.பி.யிடமிருந்து ஆயுதங்களைப் பிடுங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுவதைப் பார்க்கின்ற பொழுது, எம்மை அரசியல் ரீதியில் செயலிழக்கச் செய்ய புலிகள் முயற்சிக்கின்றார்கள் என்று சந்தேகப்படுவதில் என்ன தவறு இருக்க முடியம். ஈ.பி.டி.பி. யினராகிய நாம் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வுக்காக என்றுமே பிரிக்கப்பட முடியாத வடக்கு – கிழக்குப் பிராந்தியத்தை ஓர் அலகாகக் கொண்டு அதற்கு விஷேட அதிகாரங்களுடன் மத்தியில் கூட்டாச்சியையும் மாநிலத்தில் சுயாட்சியையும் நிலைநாட்டுவதே தமிழ் பேசும் மக்களுக்கான கௌரவமான அரசியல் ரீதியான தீர்வாகும் என்று கருதுகின்றோம். இதனை எட்டுவதற்கு ஜனநாயக விதிமுறைகளிலே நம்பிக்கை வைத்துச் செயற்படும் ஓர் அரசியல் கட்சியாகும். எமது தற்பாதுகாப்புக்காகவே ஆயுதங்களை நாம் வைத்திருக்கின்றோம். நாங்கள் படையினருடன் இணைந்து புலிவேட்டைக்குச் செல்லவுமில்லை. மக்களிடம் கப்பம் வரி வாங்கவுமில்லை மக்களை வதைக்கவோ துன்புறுத்தவோ இல்லை. எனவே. எம்மை இராணுவத்தில் இணைத்து எமது சொந்தப் பிரதேசங்களுக்கு அப்பாலுள்ள பிரதேசங்களுக்குச் செல்ல நிர்பந்திக்க வேண்டும் என்று சொல்வது ஒரு ஜனநாயக விரோதப் போக்காகும்.

நாமும் எமது சகாக்களும் எனது தோழர்களும் அரசியல் பொது வாழ்விலே ஈடபட முன்வந்தது பொழுதுபோக்கிற்காகவோ புகழுக்காகவோ பணம் சம்பாதிக்கவோ அல்லது இலங்கை ஆயுதப் படையினருடன் இணைந்து கொள்ளும் வாய்ப்பைக் கோரியோ அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். எமக்கென்று தெளிவான அரசியல் நோக்கொன்றுள்ளது. அது மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அந்த அடிப்படையிலே உறுதியான அரசியல் வேலைகள் மூலம் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ள எமது உறுப்பினர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள ஏன் புலிகள் தயங்குகிறார்கள் சகல நெருக்கடிகளை நாம் சமாளித்து எந்த இலட்சித்துக்காக நாம் மக்களுக்கு சேவை செய்;ய முன்வந்தோமோ அந்த வேலைகளைத் தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம். “இப்படிச் செய்யுங்கள் அப்படிச் செய்யுங்கள்” என்று மற்றவர்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை.

இந்த நேரத்திலே வேலுப்பிள்ளை பிரபாகரன் 1984ம் அண்டு இந்திய வார சஞ்சிகையொன்றின் நிருபர் அனிதா பிரதாப்புக்க கொடுத்த செவ்வியை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். If J.R.Jayawardane is a true budhist I will not be carrying arms. இந்தக் கருத்தையே நான் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.. If Prabhakaran is a true democrat then I will not have to carry arms. புலிகள் எண்டைக்குச் சகோதரப் படுகொலைகள் அரசியலிலே ஒரங் கட்டுதல் மற்றும் மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் என்பவற்றை நிறுத்தி விட்டோம்.

இனிமேல் தொடரமாட்டோம் வடக்கு – கிழக்கில் மாற்று அரசியல் கருத்துக் கொண்டோரும் சுதந்திரமாகச் செயற்படும் ஜனநாயக உரிமைகளை மதிக்கின்றோம் என்று பகிரங்கமாக அறிவித்து, பின்பற்றகிறார்களோ அந்தக் கணத்திலேயே தற்காப்புக்காக வைத்திருக்கும் எமது ஆயுதங்கள் தூக்கியெறியப்பட்டு கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் ஆரோக்கியமான அரசியல் சூழல் மலர்ந்து விட்டது என்ற வெற்றிக் களிப்பில் எமது ஜனநாயக அரசியல் வேலைகளை நாம் மக்கள் மத்தியிலே தொடர்வோம். இதனை இங்கே அழுத்தந்திருத்தமாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது அடிப்படை உரிமைகளைப் பெறுவது போராடுவது ஆகியன சமாதானத்தில் நடைபெற வேண்டுமென நடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஈ.பி.டி.பி. யினராகிய நாம் வலியுறுத்தியும் செயற்பட்டும் வந்தாம். அப்போதெல்லாம் எம்மை எள்ளி நகையாடிவர்கள் இன்று எமது பாதையிலே செயற்படுவதைக் காணும்போது மிகவம் மகிழ்ச்சியாகவுள்ளது.

1990ம் ஆண்டு 1994ம் ஆண்டுகளில் தமிழ்ப் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறும் சூழல் இல்லையென்று கூறி தமிழ்ப் பிரதேசங்களுக்கு வர பல அரசியல்வாதிகள் பின்நின்றார்கள். நாம் அந்தக் கடின சூழ்நிலையிலும் மக்களோடு மக்களாகச் செயற்பட்ட தமிழ்ப் பிரதேசங் களில் தேர்தலை நடத்துவதற்கான ஒரு ஜனநாயக சூழ்நிலையை ஏற்படுத்தினோம். எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பிரதேச சபைத் தேர்தல்களிலே போட்டியிட்டோம். அந்தச் சபையினூடாக மக்களுக்குச் சேவையாற்றினோம். யுத்தத்தை தொடர வேண்டும் என்ற காரணத்தால் மூடப்பட்டிருந்த யாழ்பாணத் தரைவழிப் பாதையைத திறக்க வேண்டுமென்று ஓர் இலட்சம் கையெழுத்துக்களை யாழ்குடா நாட்டிலே சேகரித்து சம்பந்தப்பட்டவர்களிடம் வலியுறுத்தினோம். சமாதானத்தை வலியுறுத்தி மாபெரும் மனித சங்கிலியாக யாழ்;பபாண மக்களை வீதியில் கரம் கோர்க்க வைத்தோம். ஆனால் அன்று மக்களின் இயல்பு வாழ்க்கையை உதாசீனம் செய்தவகள் தங்கள் தவறை உணர்ந்து எமது பாதைக்கு வந்ததையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடையிறோம்.நாம் குற்றியல்ல யார் குற்றினாலும் அரிசியானால் தான் சரி என்பது தான் ஈ.பி.டி.பி. யின் நிலைப்பாடு.

இந்த நேரத்தில் இன்று எடுத்திருக்கின்ற முடிவை புலிகளின் தலைவர் பிரபாகரன் 15வருடங்களுக்கு முன்னால் எடுத்திருந்தால் எத்தனையோ ஆயிரம் மக்களின் உயிரிழப்பை எத்தனையோ ஆயிரம் போராளிகளினதும் படையினரதும் உயிரிழப்பை எத்தனையோ ஆயிரம் மக்கள் எமது பிரதேசத்தை விட்டுப் புலம் பெயர்ந்ததை எததனையோ கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களின் அழிவைத் தடுத்திருக்க முடியும். அப்பொழுது கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தையும் பொன்னான சந்தர்ப்பத்தையும் சரிவரப் பயன்படுத்தாமல் விடுவார் களேயானால் மக்களில்லாத ஒரு சூனியப் பிரதேசம் தான் மிஞ்சம் என்பதையும் புலிகள் விளங்கிக் கொள்ள வெண்டும்.

கடைசியாக புலிகள் இந்தச் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துவதற்குத் தவறுவார்களேயானால் அதற்காகத் தமிழ் மக்கள் தண்டனைக் குள்ளாகும் நிலை எதிர்காலத்திலும் ஏற்படக்கூடாது என்பதே எமது அக்கறையும் வேண்டுகோளுமாகும். மக்கள் மத்தியிலே மறைந்திருந்து அசம்பாவிதங்களை மேற்கொள்ளும் புலிகள் வெற்றிக்கு உரிமை பாராட்டுவதும் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள் பற்றிக் கண்டுகொள்ளாமல் விடுவதும் தெரிந்ததே. அதனால் புலிகள் இந்தத் தடவை ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறிக் கொண்டு பொதுமக்களைத் தண்டிக்க கூடாது என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.(இடையீடு) கௌரவ சிவாஜிலிங்கம் அவர்களின் கேள்விக்கு நான் கூறுவது திருமதி தங்கத்துரை அவர்களைக் கேட்டால் உங்களுடைய கேள்விக்குப் பதில் கிடைக்கும் என்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

5 மார்ச் 2003

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
இறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பதன் மூலமாக எமது உற்பத்திகளுக்கான உள்ளூர் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கலா...
தேசிய அரசு மீது கொண்டிருக்கும் அக்கறை தேசிய பிரச்சினை மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
நாட்டு நலன்களுக்கு இழப்புகள் ஏற்படாத வகையில் தேசிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவது அவசியமாகும் - கோப...