காணி உரிமை கோரி வருபவர்களுக்கு மாற்று ஏற்பாடு வேண்டும் என்ற எமது கோரிக்கை அரசியலமைப்பு சபையில் ஏற்கப்பட்டிருப்பது மகிழ்வளிக்கின்றது – டக்ளஸ் தேவானந்தா

Friday, April 8th, 2016

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அசையாச் சொத்துக்களின் ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் முன்னுரையில் “இலங்கையில் உளதாயிருந்த ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் செயற்பாடுகள் காரணமாக” என்று சொல்லப்பட்டிருக்கும் சொற்பதத்தை “யுத்த சூழலில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததன் காரணமாக” என்று மாற்றப்படவேண்டும் என்பது எமது கருத்தாக உள்ளது. காரணம் இந்தச் சட்டம் வடக்கு கிழக்கிற்கு மாத்திரமல்லாது நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட இருப்பதனால் இனக்கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களும் இதன்மூலம் பயனடைவார்கள். ஆகையால் இதை ஒரு தரப்புக்குரியதாக மட்டும் பார்க்கக்கூடாது. இந்த யுத்தம் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டதனால் அதற்கு இருதரப்பினரும் தான் பொறுப்பேற்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் காணி உள்ளிட்ட அசையாச் சொத்துக்களை  இழக்க நேர்ந்து அதன் உரிமைகளை மீளப்பெறமுடியாமல் போனோர் அந்த சொத்துக்களின் உரிமங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கு வழக்கொன்றை தொடர்வதற்கான உரிமத்தை வழங்கும் ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் கடந்த புதன்கிழமை  இலங்கை அரசியலமைப்பு சபையில் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசியலமைப்பு சபையில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.

குறித்த சட்டமூலம் தொடர்பாக  அவரது  உரையை எமது EPDP.COM இணையத்தள வாசகர்களுக்காக முழுமையாக பதிவிடுகின்றோம்.

கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே இந்த ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) என்ற சட்டமூலம் எங்களுடைய நாட்டுக்குத் தேவையானதொன்றாகும். அந்த வகையில் நாங்கள் இதை வரவேற்கின்றோம். இந்தச் சட்டமூலம் கடந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டபோது அதில் சில குறைபாடுகள் இருந்தன.

தற்போது அந்தக் குறைபாடுகள் ஓரளவுக்கு நீக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக இதன் சரத்து ஐந்தில் “இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் அரச காணிகளுக்கு எற்புடையதாகாது” என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அரச காணிகளுக்கு இந்தச் சட்டம் ஏற்புடையதாக இருந்திருக்குமாக இருந்தால் வன்னியில் 5000 – 6000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். ஏனென்றால் 1960 – 70ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் பலருக்குக் கொடுக்கப்பட்ட ‘பேர்மிட்’ காணிகள் கைவிடப்பட்ட நிலையில் காணியற்றவர்கள் அந்த நிலத்தில் குடியேறி 25 – 35 வருடங்களாக அந்த நிலத்தை அபிவிருத்தி செய்து வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அமைதியான சூழலில் வெளிநாடுகளில் அல்லது உள்நாட்டில் வேறிடங்களில் இருக்கும் உரிமையாளர்கள் வந்து உரிமை கோருகின்றபோது அவற்றில் குடியிருந்த 5000 – 6000 குடும்பங்கள் பாதிக்கப்படுகின்ற நிலைமை ஏற்படும். ஆனபடியினால் அந்தப் ‘பேர்மிட்’ காணியை உரிமை கோரி வருகின்றவர்களுக்கான ஒரு மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென்று நாங்கள் கேட்டிருந்தோம். அந்த வகையில் அந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே பிரதமர் அவர்களுக்கும் அமைச்சர் அவர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேநேரத்தில் இச்சட்டமூலத்தின் முன்னுரையில் “இலங்கையில் உளதாயிருந்த ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் செயற்பாடுகள் காரணமாக” என்று சொல்லப்பட்டிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் அவ்வாறு கூறப்பட்டிருக்கும் சொற்பதங்கள் “யுத்த சூழலில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததன் காரணமாக” என்று மாற்றப்படவேண்டும் என்ற என்னுடைய கருத்தை முன்வைக்க விரும்புகின்றேன். இந்தச் சட்டம் வடக்கு கிழக்கிற்கு மாத்திரமல்லாது நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட இருப்பதனால் இனக்கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களும் இதன்மூலம் பயனடைவார்கள். ஆனபடியினால் இதை ஒரு தரப்புக்குரியதாக மட்டும் பார்க்கக்கூடாது. “இரு கைகளும் தட்டினால்தான் ஓசை வரும்” என்பதுபோல இந்த யுத்தம் என்பது நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டதனால் அதற்கு இருதரப்பினரும்தான் பொறுப்பேற்கவேண்டும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் இன்று இராணுவம் பொதுமக்களின் பல காணிகளில் குடியிருக்கின்றது. இராணுவம் தேவையில்லையென்று நான் சொல்ல வரவில்லை. இராணுவத்தினுடைய தேவை தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடையதாகக் கருத்திலெடுக்கப்படவேண்டும். ஆனால் அளவுக்கதிகமாகவும் மக்களுடைய குடியிருப்புக்களிலும் இராணுவம் அங்கு நிலைகொண்டு இருக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய கோரிக்கை. அதாவது அந்தந்த மாவட்டங்களினுடைய சனத்தொகைக்கேற்ற வகையிலும் அந்தந்த மாவட்டங்களுடைய இன வீகிதாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையிலுமே அரச படையினரதும் பொலிசாரினதும் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் அடிக்கடி முன்வைத்து வருகின்றேன். அதேவேளை யுத்தம் காரணமாக படைத்தரப்பினர் வசமுள்ள மக்களின் காணிகளையும் நிலங்களையும்கூட இந்தப் புதிய அரசு விரைவாக விடுவித்துக் கொடுக்க வேண்டும். அரச படையினர் இருப்பதற்கு வேறுபல தரிசு நிலங்கள் இருக்கின்றன. ஆனபடியினால் குடியிருப்பு நிலங்கள் அல்லது தோட்ட நிலங்களைக் கைவிட்டு அவர்கள் தரிசு நிலங்களுக்குப் போகலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தொடர்ந்து இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் காணிக் கச்சேரிகள் மூலமான காணிப் பங்கீடுகள்  நீண்டகாலமாக நடைபெறவில்லை. அந்த வகையில் இந்தப் புதிய அரசாங்கம் காணிக் கச்சேரிகளை நடத்தி காணியற்றவர்களுக்குக் காணிகளை வழங்குவதுடன் நீண்டகாலமாக கோவில் காணிகளில் அல்லது பொதுக் காணிகளில் இருப்பவர்களுடைய பிரச்சினைகளையும் ஆராய்ந்து அவர்களுக்கும் காணியுரிமைப் பத்திரங்களை வழங்கவேண்டும். ஏனென்றால் காணி உரிமம் இல்லாத காரணத்தால் அரசு வழங்குகின்ற புதிய வீட்டுத் திட்டத்தை அவர்கள் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும். எனவே விரைவாகக் காணிக் கச்சேரிகளை நடத்தி காணி உரிமப்பத்திரங்களை அவர்களுக்கு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இச்சட்டம் நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட இருக்கின்றபடியால் இதனை  நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இன்னும் பரந்தளவில் ஆராய்ந்து இதிலே திருத்தங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமென்றும் கூறிக்கொண்டு எனக்குச் சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றியைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்

Related posts: