மக்களுக்கு வெறும் உணர்ச்சிகளை திணிப்பவர்கள் ஒரு வேளை உணவளிப்பதற்கான வழியைக் காட்டுதாக இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, May 22nd, 2018

வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், முப்பதாண்டு கால யுத்தப் பாதிப்புகள் இன்னும் தங்களைவிட்டு முழுமையாக அகலாத நிலையில், அன்றாட வாழ்வாதாரத்திற்கே அல்லல் படுகின்ற எமது மக்களுக்கு வெறும் உணர்வுகளை திணித்து திசை திருப்புவதற்கு முயற்சிப்போர், ஒரு வேளை உணவளிப்பதற்கான வழியைக் காட்டுதாக இல்லை என்ற வேதனையே தொடர்கின்றது  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத் திட்டத்தின் கீழான இரு கட்டளைகள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இன்றைய தினம் செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத் திட்டத்தின் கீழான இரு கட்டளைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற நிலையில், எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கியமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரினால் இந்த கட்டளைகள் இந்தச் சபையிலே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த நாட்டில் மிக அண்மைக்காலமாக பெரும் குழப்ப நிலையினைத் தோற்றுவித்துள்ள ‘சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம்’ தொடர்பிலும் எனது கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ள சந்தேகங்கள் இந்த நாட்டிலே மருத்துவ அதிகாரிகள் மத்தியிலும் ஏற்பட்டதனால், கடந்த 17ஆம் திகதி மருத்துவர்கள் மேற்கொண்டிருந்த ஒரு நாள் பணிப் பகிஸ்கரிப்பு காரணமாக இந்த நாட்டிலே வடக்கு, கிழக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலுமுள்ள நோயாளர்கள் பெரும் சிரமங்களை அனுபவித்ததை, பாதிக்கப்பட்டதை எவராலும் மறந்துவிட இயலாது.

நோயாளிகளின் தரப்பிலிருந்து சிந்திக்கின்ற எவருக்கும், இந்த பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டிருந்த மருத்துவர்கள்மீது கோபம் வரலாம். என்றாலும், எந்த ஒரு விடயம் தொடர்பிலும், உரிய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடாமல், இத்தகைய சந்தேகங்களை ஏற்படுத்திவிட்டு, அந்த சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தரப்பினர் – அதுவும் மக்களது அன்றாட, அடிப்படை – அதாவது மக்களது உயிருடன் சம்பந்தப்பட்ட தொழிற்துறை சார்ந்த தரப்பினர் பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டால்தான், குறித்த தரப்புகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்கின்ற நிலையை நீங்கள் உருவாக்கி, அதனை ஒரு வழமையாகவே முன்னெடுத்து வருகின்ற நிலையில், இத்தகைய பணிப் பகிஸ்கரிப்புகள் இந்த நாட்டில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகியுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஏற்கனவே ‘எட்கா’ ஒப்பந்தம் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையினையும், அதன் காரணமாக எமது மக்கள் சந்தித்திருந்த பல்வேறு பாதிப்புகள் குறித்தும் நாம் மறக்கவில்லை. அந்த நிலையிலிருந்து மீண்டு வரும் நிலையில், இப்போது இன்னொரு குழப்பத்தினையே இந்த சிங்கப்பூர் ஒப்பந்தம் இந்த நாட்டில் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக மருத்துவர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதன் பின்னர்தான், அது குறித்த தெளிவுபடுத்தல்களை நீங்கள் மேற்கொள்கின்றீர்கள். இந்த நிலையில், ஏன் இதனை முன்கூட்டியே செய்திருக்கக் கூடாது? என்ற கேள்வி எழுகின்றது.

இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கென விN~ட வரி விதிப்புகள் மேற்கொள்ளப்படாதிருக்கும் நிலையில், அந்த நாட்டுடன் விN~ட வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்ல வேண்டிய பாரிய அழுத்தங்கள் என்ன? என்ற கேள்வியே இன்று பலராலும் முன்வைக்கப்படுகின்றது.

அதேநேரம், மேற்படி ஒப்பந்தத்திற்கு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்ற அமைச்சரவை அனுமதி தொடர்பிலும் சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன. மேற்படி ஒப்பந்தம் காரணமாகப் பாதிக்கப்படக்கூடியவர்களாகக் கூறப்படுகின்ற தொழிற்துறைகள் சார்ந்த தொழிற் சங்கத்தினருக்கோ, கைத் தொழிலாளர்களுக்கோ ஒப்பந்தம் தொடர்பில் அறிவுறுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இத்தகைய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றபோது, உரிய தரப்பினர் அனைவரும் அறிவுறுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை நான் மீண்டும் இந்த சபையிலே வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்த நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு நீங்கள் முயல்வதாகக் கூறுகிறீர்கள். அதற்காக அவசரப்பட்டு, மேலும், மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இன்று இந்த நாட்டில் அபிவிருத்தி என்ற பெயரில் பல அமைச்சுக்கள் இருக்கின்றன. இவற்றில் எத்தனை அமைச்சுக்கள் செயற்பாட்டில் இருக்கின்றன என்ற கேள்வி எமது மக்களிடையே இல்லாமல் இல்லை. வடக்கின் அபிவிருத்திக்கு என்றும் ஓர் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கிற்கு தேவையில்லை என நினைத்துவிட்டீர்கள்.

மேல் மாகாணத்திற்கும், தென் மாகாணத்திற்கும், வடமேல் மாகாணத்திற்கும் அபிவிருத்தி அமைச்சுக்களை ஏற்படுத்திய நீங்கள், ஏனைய மாகாணங்களில் அபிவிருத்தி தேவையில்லை என்று நினைத்தோ, அல்லது ஏனைய மாகாணங்கள் அனைத்தும் முழுமையான அபிவிருத்திகளை கண்டு விட்டன என நினைத்தோ அவற்றுக்கென அபிவிருத்தி அமைச்சுக்கள் உருவாக்காமல் இருந்துவிட்டு, இப்போது வடக்கு மகாணத்திற்கும், கண்டி மாவட்டத்திற்கும் உருவாக்கியுள்ளீர்கள். இதனாலாவது ஏதேனும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா? என்ற கேள்வியும் எமது மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.

மத்திய அரசில் ஸ்திரத் தன்மை இன்னமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. எமது மாகாணங்களைப் பொறுத்தவரையில், கிழக்கு மாகாணம் தேர்தலுக்காக தவம் கிடக்கின்றது. வடக்கு மாகாணம், எமது மக்களுக்கு பயனாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்ற சாதனையை நிலைநாட்டி, உயிரிழந்த எமது மக்களை வைத்து, உயிருடன் உள்ள எமது மக்கள் மத்தியில் சுயலாப அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

உயிரிழந்த உறவுகளை அவரகள்தம் உறவுகள் நினைவு கூறுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஆனால், அதை சுயலாப அரசியலாக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

எமது மக்களை முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டு சென்றவர்கள், கொண்டு செல்ல துணை போனவர்கள், கொல்லக் கொடுத்தவர்கள் இன்று அங்கு சென்று அரசியல் கண்ணீர் வடிப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

தங்களது உயிரிழந்த உறவுகளை சுதந்திரமாக நினைவு கூறுவதற்கு ஒரு கால கட்டத்தில் தென்பகுதியால் விடுக்கப்பட்டிருந்த தடைகள், இடையூறுகள் தளர்ந்து, இன்று வடபகுதி சுயலாப அரசியல்வாதிகளால் அந்தத் தடைகள், இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்ற நிலையே உருவாகியுள்ளது.

வடக்கின் அரசியல்வாதிகள் நினைவு கூறுவதற்கு அழைத்தால் அவர்களது சகாக்கள் நான்கைந்து பேரே போவார்களே அன்றி, எமது மக்கள் போக மாட்டார்கள். எனவேதான், எமது மக்கள் போகின்ற இடங்களைப் பார்த்து வடக்கு அரசியல்வாதிகள் வலுக்கட்டாயமாக நுழைந்து, யதார்த்தப்பூர்மற்ற வகையில், செயற்ககத்தனமாக, எமது மக்களின் உணர்வுகளைத் தூண்ட முயற்சித்துக் கொண்டு, தங்களது சுயலாப அரசியலை முன்னெடுக்கப் பார்க்கிறார்கள். இதனை தென்பகுதி சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில், தங்களது சுயலாப அரசியலுக்காக சாத்தியமற்ற விடயங்களை முன்வைத்து, அது குறித்து கதைத்து, கதைத்தே இந்த நாட்டின் அனைத்து மக்களையும் திசை திருப்பி, தங்களது இலக்குகளை எட்டிவிட முனைகின்ற அனைத்துத் தரப்பு இனவாத அரசியல்வாதிகளினதும் குறுகிய  நோக்கங்களை எமது மக்கள் அனைவரும் நன்குணர்ந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இன்று, அதிகளவிலான வரிகள் விதிப்பு, கடன்கள், கண்டபடி தண்டங்கள் விதிப்பு போன்றவற்றினாலேயே இந்த நாட்டின் பொருளாதாரம் ஓடிக் கொண்டிருப்பதாக பொது மக்கள் நம்புகின்ற நிலையில், அதிகளவிலான விலையேற்றங்கள் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலே இன்னும் தீர்க்கப்படாத எமது மக்களது உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் பலவும் இருக்கின்றபோது, அரசியல் தீர்வு தொடர்பில் கூடிக் கூடிக் கதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், தென்பகுதியிலே கால நிலை சீர்கேடு காரணமாக சுமார் 23 ஆயிரம் பேர்வரையில் பாதிக்கப்பட்டு, 8 பேர் அளவில் உயிரிழந்துள்ள நிலையில், தென்பகுதியிலே வைரஸ் காய்ச்சல் காரணமாக சுமார் 13 பேர் வரையில் இதுவரையில் உயிரிழந்துள்ள நிலையில், பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு எமது நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், முப்பதாண்டு கால யுத்தப் பாதிப்புகள் இன்னும் தங்களைவிட்டு முழுமையாக அகலாத நிலையில், அன்றாட வாழ்வாதாரத்திற்கே அல்லல் படுகின்ற எமது மக்களுக்கு வெறும் உணர்வுகளை திணித்து திசை திருப்புவதற்கு முயற்சிப்போர், ஒரு வேளை உணவளிப்பதற்கான வழியைக் காட்டுதாக இல்லை என்ற வேதனையே தொடர்கின்றது.

இன்று எமது சாதாரண மக்களின் பிரதான எரிபொருளான மண்ணெண்ணெய்க்கும் விலையை அதிகளவில் உயர்த்தி, உயர்த்திய விலையைவிட மேலும் அதிகரித்த விலையில் எமது பகுதியிலே – குறிப்பாக தீவகப் பகுதிகளிலே விற்பனை செய்யப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியத் தேவையை இங்கு உணர்த்துவதுடன், கடற்றொழிலாளர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதுபோல், நீரிறைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தி விவசாயத் துறையிலே ஈடுபடுகின்ற மக்களுக்கும் அதே மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

எமது பகுதிகளின் அபிவிருத்திகள் பற்றி பேசப்படுகின்றன. எழுத்திலே காட்டப்படுகின்றன. ஆனால், நடைமுறை செயற்பாடு எனப் பார்த்தால் எல்லாமே பூச்சியமாகவே இருக்கின்றன.

எமது பகுதிகளுக்கென குறிப்பிடப்படுகின்ற அபிவிருத்திகள் பல்வேறு காரணங்களைக் காட்டி, அங்கிருந்து திருப்பப்படுகின்ற காரியங்களும் நிறையவே நடந்து கொண்டிருக்கின்றன.

உங்களுக்கு எதுவெல்லாம் சாதகமோ அதை எல்லாம் அங்கு செய்ய முனைகின்றீர்கள். எமது மக்களுக்கு எதுவெல்லாம் சாதகமோ, அவை தொடர்பில் இழுத்தடித்து வருகிறீர்கள். அங்கே மாகாண சபையைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்போர், எமது மக்களுக்கு சாதகமானவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, வெறும் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே தீர்மானமாக இருக்கிறார்கள்.

அன்றாடத் தேவைகள், அபிவிருத்தி, அரசியல் தீர்வு என்ற அடிப்படை நோக்கில் எமது மக்களது தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றிக் கொடுத்தவர்கள் நாங்கள். இப்போதைய நிலையில் இந்த எதுவுமே அற்ற நிலையில் எமது மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியில், சமூக ரீதியில், அரசியல் அதிகார ரீதியில், ஏன், மனிதாபிமான ரீதியில்கூட கைவிடப்பட்டவர்களாகவே எமது மக்கள் இன்று ஆளாக்கப்பட்டுள்ளனர்.

எனவே, எமது மக்களை எந்த ரீதியில் நீங்கள் அபிவிருத்தி செய்யப் போகிறீர்கள்? என்ற கேள்வியை முன்வைத்து விடைபெறுகின்றேன்.

Related posts: