எதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Thursday, November 24th, 2016

 

நமது நாட்டைப் பொறுத்தவரையில் இலவசக் கல்வியானது எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது இந்த இலவசக் கல்வியானது வியாபார மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 20 ஆம் திகதி நுவரெலியா, ஹற்றன், நானுஓயா ஆகிய பகுதிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபட்டனர். அடுத்த ஆண்டுக்கான கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடானது கடந்த ஆண்டைவிட குறைக்கப்பட்டுள்ள நிலையிலும், தனியார்துறைக் கல்விக்கு இந்த வரவு செலவுத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப்  பார்க்கின்றபோது நம் நாட்டில் இலவசக் கல்வியானது இல்லாமலாக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகம் எமது மக்களிடையே ஏற்பட்டுள்ளதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில்  தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில்  –

 வடக்கு கிழக்கில் கல்வி நிலை வீழ்ச்சியடைந்துள்ளது.

அடுத்ததாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலையை எடுத்துக்கொண்டால், தற்போதைய நிலையில் அது மிகவும் வீழ்ச்சியடைந்த போக்கினையே காட்டுவதாக  பெறுபேற்றுப் பகுப்பாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, 2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்ற மாணவர்களின் நிலையை  வைத்துப் பார்க்கும்பொழுது  இந்த நிலைமை தெளிவாக புலனாகின்றது. இந்த வகையில் பார்க்கும்பொழுது 2013 ஆம் வருடம் 8 ஆவது இடத்திலிருந்த யாழ் மாவட்டமானது 2014 இல் 20 ஆவது இடத்துக்கும், 2015 இல் 21 ஆவது இடத்துக்கும் பின்தள்ளப்பட்டிருக்கின்றது. அதேநேரம் 2014 இல் 2 ஆவது இடத்திலிருந்த மன்னார் மாவட்டம் 2015 ஆம் ஆண்டில்  10 ஆவது இடத்துக்கும், 2014 இல் 7 ஆவது இடத்திலிருந்த வவுனியா மாவட்டம் 2015 ஆம் ஆண்டில் 16 ஆவது இடத்துக்கும், 2014 ஆம் ஆண்டில் 12 ஆவது இடத்திலிருந்த மட்டக்களப்பு மாவட்டம் 2015 ஆம் ஆண்டில் 17 ஆவது இடத்துக்கும், 2014 ஆம் ஆண்டில் 21 ஆவது  இடத்திலிருந்த திருகோணமலை மாவட்டம் 2015 ஆம் ஆண்டில் 23 ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டது. ஏனைய மாவட்டங்களான அம்பாறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் 2015 ஆம் ஆண்டில் முறையே 16 ஆவது இடத்துக்கும், 24 ஆவது இடத்துக்கும், 25 ஆவது இடத்துக்கும் தேசிய ரீதியில் தள்ளப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

வட மாகாண பாடசாலைகளுக்கு விஷேட நிதி ஒதுக்கீடுகள் வேண்டும்.

அத்துடன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்தும் பல வருடங்களாக கல்வி நிலையில் தேசிய ரீதியில் பார்க்கும்பொழுது, இறுதி இடங்களையே வகித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களின் கீழ் 27,970 மாணவர்கள் 126 பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றபோதிலும், இந்த 126 பாடசாலைகளிலும் வளப் பற்றாக்குறைகள் காணப்படுவதாகத் தெரியவருகின்றன. அந்த வகையில் பார்க்கின்றபொழுது, கல்வி நிலையில் பாரிய பின்னடைவை கண்டுவருகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை தொடர்பில் மாகாண சபைகள் மிகுந்த பொறுப்புடன் செயற்படவேண்டும் என நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். மேலும், கடந்த யுத்த காலப் பகுதியில் மிகுந்த சிரமங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் போதியளவு இல்லாத நிலையிலும் கடமை நிறைவேற்று அதிபர்களாகவும் கடமை நிறைவேற்று உதவிக் கல்விப் பணிப்பாளர்களாகவும் கடமையாற்றி, இன்னும் தங்களது பணிகளை நீடித்துக்கொண்டு இருப்பவர்கள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தப்படவேண்டும் என்றும், வடக்கு கிழக்கு மற்றும் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு உகந்த நடவடிக்கை தேவை என்றும், தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வருவோருக்கு அவர்களது தகைமைகளுக்கு ஏற்ற நிரந்தர நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்னும் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி முன்னெடுக்கப்படவேண்டும்.

 கல்விச் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் கூடாது!

 வடக்கு மாகாணத்தில் செயல்படுகின்ற 12 வலய கல்விப் பணிமனைகளில் காணப்படுகின்ற ஆளணி வெற்றிடங்களை நிரப்புதவற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் ஆகக் குறைந்தது நவீன விஞ்ஞானகூடம் ஒன்றினையேனும் வழங்கவும், உயர் தரத்தில் தொழில்நுட்பப் பாடங்கள் போதிக்கப்படுகின்ற அனைத்துப் பாடசாலைகளுக்கும் தொழில்நுட்பபீட கட்டடத் தொகுதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன். அதேநேரம், மலையகம் மற்றும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல கல்வித்துறையில் பாரிய வீழ்ச்சி நிலையே ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. மலையகத்தைப் பொறுத்தவரையில், 5 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லக்கூடிய வாய்ப்பு இருந்தும், ஆசிரியர்கள் உட்பட உரிய வளப் பற்றாக்குறை காரணமாக தற்போது 0.2 வீதமானவர்களே பல்கலைக்கழகம் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அறியமுடிகின்றது. இவற்றுக்கு அடிப்படைக் காரணங்களாக பல இருப்பினும், குறிப்பாக முறையற்ற ஆசிரியர் நியமனங்கள், முறையற்ற வகையிலான அதிகாரிகளின் இடமாற்றங்கள், கல்வித்துறையில் அநாவசிய அரசியல் தலையீகள், வெளியாரின் தலையீடுகள், கல்வி அதிகாரிகளின், பாடசாலை அதிபர்களின், ஆசிரியர்களின் சுயமான சிந்தனைக்கு ஏற்படுத்தப்படுகின்ற முட்டுக்கட்டைகள் என்பனவும் பிரதான காரணங்களாக அமைவதாகக் கூறப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் கௌரவ கல்வி அமைச்சர்

அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்துவார் என நம்புகின்றேன். கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், தமிழ் பாடசாலைகளுக்கு உரிய வளங்கள் பறிக்கப்படுகின்ற ஒரு நிலைமையே காணப்படுவதாக அறியமுடிகின்றது. குறிப்பாக, தெமட்டகொடை விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்துக்குரிய 320 பேர்ச்சஸ் காணியில் சுமார் 200 பேர்ச்சஸ் காணி வெளியாரால் பறிக்கப்பட்டுள்ளதாகவும், தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயத்துக்குரிய 60 பேர்ச்சஸ் காணியில் 20 பேர்ச்சஸ் காணி வெளியாரால் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தலை நகரில் தமிழ் பாடசாலை போதாது!

அதேநேரம், நாரஹேன்பிட்டியில் சுமார் 80 வருடங்களாக இயங்கிவந்த மாவத்த அரசினர் தமிழ் பாடசாலை மூடப்பட்டதன் காரணமாக நாரஹேன்பிட்டி, நாவல, கிருல, டொரிங்டன் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழிமூலக் கல்வியை மேற்கொள்ள இயலாதநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அதைவிட, பாமன்கடை இராமகிருஷ்ணன் மகா வித்தியாலயக் காணி, இரத்மலானை இந்துக் கல்லூரி காணி சம்பந்தமாகவும் பல பிரச்சினைகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

கிருலப்பனையில் தமிழ்ப் பாடசாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டதன்  விளைவாக நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்துக்கும் பாமன்கடை இராமகிரு~;ணமி~ன் மகா வித்தியாலயத்துக்கும் வருகைதரும் மாணவர்களில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத் தமிழ்ப் பாடசாலைகளினதும் கல்வித் தரமும் பாரிய வீழ்ச்சி நிலையிலே காணப்படுகின்றது. அதேபோன்று தென் மற்றும் வட மேல் மாகாணங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளின் நிலையும் இதே நிலையில்தான் இருக்கின்றது. எனவே இவ்விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் அவர்கள் தனது உடனடி அவதானத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு தவிர்ந்த தமிழ் மக்கள் பரவலாக வாழ்ந்து வரும் ஏனைய மாவட்டங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தமக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற இயலாது என எண்ணும் நிலையில், ஏனைய விடயங்களைப் போன்றே கல்வியிலும் இப்பகுதிகள் தமிழ் அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகப் பொதுவான ஒர் அபிப்பிராயம் இம்மாவட்டங்களிலுள்ள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. இது நியாயமானதாகும். எனவே, இந்த நிலைப்பாட்டினைப் போக்கக்கூடிய ஏற்பாடுகளைக் கல்வி அமைச்சு முன்னெடுக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றேன். இது தொடர்பில் நான் ஏற்கனவே இந்தச் சபையில் கேள்வி எழுப்பியிருந்தேன். அப்போது “இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்” எனக் கூறப்பட்டபொழுதிலும் இன்னும் அவதானம் செலுத்தப்படாத நிலையே காணப்படுகின்றது.

முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் ஓய்வூதியம் வேண்டும்!

நாடளாவிய ரீதியில் முன்பள்ளி ஆசிரியர்களது பணியில் ஈடுபடுபவர்களது வாழ்க்கை நிலைமைகளை அவதானத்தில் கொண்டும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஒரு திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. சிறார்களைக் கல்வியின்பால் ஈர்க்கின்ற அதிமுக்கியத்துவம்வாய்ந்த பணியில் ஈடுபட்டுள்ள இந்த முன்பள்ளி ஆசிரியைகள் பலர்

பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். எனவே, இவர்களுக்கெனப் போதுமானவளவு ஓர் ஊதியத் தொகை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுவது அவசியமாகும். அதேநேரம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் மாகாண சபையின் நிர்வாகமற்ற சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக முப்பதாயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வரலாற்றுபாடங்களில் தமிழர் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது!

அடுத்து, தமிழ்மொழிமூலம் வரலாற்றுப் பாடங்களில் இலங்கைத் தமிழ் மக்களதும் தமிழ் மன்னர்களதும் வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மறைக்கப்பட்டுள்ளதாகவும் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதற்குக் கல்வி அமைச்சர் சார்பில் பதிலளித்திருந்த கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்கள், அப்படி இல்லை எனவும் தமிழர்களது வரலாறுகள் பாடநூல்களில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் உண்மை அதுவல்ல என்ற விடயத்தை இங்கு நான் மீண்டும் முன்வைக்க விரும்புகின்றேன். அந்த வகையில் 6 ஆம் தரம் முதற் கொண்டு 11 ஆம் தரம் வரையிலான தமிழ்மொழிமூலமான வரலாற்றுப் பாடநூல்களைப் பார்க்கின்றபொழுது இந்த உண்மையைக் கண்டுகொள்ள முடியும். கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ இராதாகிரு~;ணன் அவர்கள் இதனை உணர்ந்து கொள்வார் என நான் நம்புகின்றேன். அதை நிரூபிக்கின்ற வகையில் அந்த வரலாற்றுப் பாடப் புத்தகங்களையும் இங்கு நான் கொண்டு வந்திருக்கின்றேன். கௌரவ இராஜாங்க அமைச்சர் இது குறித்து ஓர் உயர் கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்தித் தருவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அந்த வகையில் இந்த வரவு செலவுத்திட்ட விவாதங்கள் முடிவடைவதற்குள் அற்கான நேரத்தை அவர் ஒதுக்கித் தருவாராக இருந்தால் அது எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நான் கூறிக் கொள்கின்றேன்.

குறிப்பாக இந்த வரலாற்றுப் பாட நூல்களில் இலங்கை மன்னர்கள் எனப் பலரைப் பற்றிக் கூறப்படுகின்றபோதிலும் அவற்றில் ஒரு தமிழ் மன்னரைப் பற்றிக்கூட தனியான விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை. யாழ்ப்பாண இராஜ்ஜியம் பற்றிய ஒரு சிறு குறிப்பு வேண்டாவெறுப்புடன் பிரசுரிக்கப்பட்டிருப்பதையே 7 ஆம் தரப் பாடநூலில் காணக்கூடியமாதிரி இருக்கின்றது.

வரலாற்றை மறைத்தால் தேசிய நல்லிணக்கம் பகற் கணவாகிவிடும்!

இந்த நூல்களில் துட்டகைமுனு மன்னர் பற்றிப் பலமுறை குறிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில், எல்லாளன் மன்னர் தொடர்பில் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறுகள் குறிப்பிடப்படவில்லை என்பதை நான் இங்கு கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 10 ஆம் தரத் தமிழ்மொழிமூல வரலாற்றுப் பாடநூலில் துட்ட கைமுனு பற்றிய பகுதியில் எல்லாளன் மன்னனைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒரு மிகச் சிறிய குறிப்பில் “துட்டகைமுனு மன்னன் தோல்வியுற்ற தனது எதிராளியின் கல்லறைக்கு உரிய முறையில் மரியாதை செலுத்தும்படி ஆணையிட்டான். இதன்மூலம் தனது இராஜதந்திரச் செயற்பாட்டை வெளிப்படுத்தினான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த வரலாற்று நூல்களைக் கற்கின்ற எமது மாணவர்கள் மத்தியில் தங்களுக்கான வரலாறுகள் எதுவும்  இங்கு காணப்படாத நிலையில் இந்த நாடு

தொடர்பில் ஒருவித அந்நிய மனப்பான்மையே ஏற்படுகின்றது.  பாடசாலை மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடங்கள் புகட்டப்படுவதாயின் இலங்கையின் உண்மையான வரலாற்றை உள்ளபடி புகட்டவேண்டும்.  இவ்வாறு ஒரு சாராரின் வரலாற்றை மறைத்து அல்லது திரிபுபடுத்தி இன்னொரு சாராரின் வரலாற்றை மாத்திரம் புகட்டுவதனால் இந்த நாட்டின் அடித்தளத்திலிருந்து தமிழ் பேசும் மக்களிடையே தேசிய நல்லிணக்கம் ஏற்படுமென்பது பகற்கனவாகவே அமையும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.  எனவே, தமிழ் மொழி மூலமான வரலாற்றுப் பாடத்திட்டங்களை வகுப்பதற்குத் தமிழ் மொழி மூலமான வரலாற்றுப் பேராசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்துங்கள்.  அந்தக் குழுவிற்குப் பூரண சுதந்திரத்தை வழங்குங்கள்.  வெறும் எழுத்துப் பிழைகளை மாத்திரம் திருத்துகின்றவர்களாகவும் மொழி பெயர்ப்பாளர்களாகவும் தமிழ் வரலாற்றுப் பேராசிரியர்களை இந்தப் பாடநூல் தயாரிப்பு விடயத்தில் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என்றும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மாணவர்களிடம் நிதி வசூலிப்பதை நிறுத்துங்கள்

அதேநேரம், பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து நிதி வசூலிக்கின்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கல்வியமைச்சர் அண்மையில்  தெரிவித்திருந்தார்.  இது நல்லதொரு விடயம்.  இன்றுகூட நாட்டில் பல பகுதிகளில் செயற்பட்டு வருகின்ற பாடசாலைகளில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு நிதி வசூலிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  எனவே, இந்தச் செயற்பாடுகளை நிறுத்துவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

அதேநேரம், நாட்டில் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மாணவர்கள் பலர் குடும்பப் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாகப் பாதணிகள் கூட இன்றிய நிலையிலேயே பாடசாலை செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.  இதனால் தனிப்பட்ட சில முகநூல்கள் வழியாக மாணவர்களுக்கான பாதணிகளைச் சேகரித்து வழங்கும் நிலையும் உருவாகியுள்ளது என்ற விடயத்தையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தொடர்பாகவும் நான் எனது கருத்துக்களைப் பதிய விரும்புகின்றேன்.  தமிழ் மொழி மூலமான கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல்வேறு நிகழ்வுகளைக் கௌரவ உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அவர்கள் நடத்திவருவதையிட்டு அவருக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 வடக்கு, கிழக்கு கலைஞர்களையும் கௌரவிக்க வேண்டும்விஷேட ஏற்பாட்டில் அவர்களுக்கு ஓய்வூதியம் வேண்டும்.

அதேநேரம், யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டிலே அகதி முகாம்களில் அகதிகளா இருந்துவரும் இலங்கைத் தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பியழைக்கும் வகையில் உள்ளக அலுவல்கள் அமைச்சு பல

ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமெனை நான் ஏற்கனவே கோரியிருந்த நிலையில் அதற்கமைவாகச் சில ஏற்பாடுகள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.  எனினும், தற்போது நாடு திரும்புகின்ற அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் முதல் ஏற்கனவே வாக்களித்திருந்த எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாதிருப்பதனை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுகூர விரும்புகின்றேன்.  அதேநேரம், கடந்த கால யுத்த அனர்த்தங்கள் காரணமாக நலிவடைந்துள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் கௌரவிக்கும் ஒரு விN~ட ஏற்பாடாக அவர்களுக்கான ஓர் ஓய்வூதியத் திட்டத்தைச் செயற்படுத்தவும் ஏற்கனவே சில இடங்களில் அமைக்கப்பட்டது போல் அனைத்துப் பிரதேச செயலகங்கள் தோறும் கலாசார நிலையங்கள் அமைத்து அதற்குரிய ஆளணி வசதிகளை ஏற்படுத்தவும் பாரம்பரிய கலைகளை மேம்படுத்தவும் பாரம்பரிய கலைஞர்களைக் கௌரவித்து ஊக்குவிக்கவும் கௌரவ அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

எல்லாளனும், துட்டகைமுனுவும் இன ரீதியாக போரிடவில்லை.

அடுத்ததாக இந்த நாட்டில் அநுராதபுர இராஜதானியை சுமார் 44 ஆண்டுகளாக ஒழுக்க விழுமியங்களோடு ஆட்சி புரிந்த எல்லாளன் மன்னனுக்கு உரிய மரியாதை செலுத்துமுகமாகத் துட்டகைமுனு மன்னனால் கட்டப்பட்ட சமாதியை இனங்கண்டு மீளப் புனரமைத்து அதனை மரியாதைக்குரிய இடமாகப் பிரகடனப்படுத்தும்படி நான் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தேன்.  ஆனால், அதற்குரிய செயற்பாடுகள் எதுவும் இன்னும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் இங்கே கவலையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.  ஏனெனில், எல்லாளன் – துட்டகைமுனு யுத்தம் என்பது ஓர் இராஜதானிக்காக இரு மன்னர்களுக்கிடையில் ஏற்பட்ட யுத்தமல்ல என்றும் இது தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் என்றும் இனவாதப் போக்காளர்கள் சிலரால் சுட்டிக்காட்டப்படுகின்றது.  எனவே, இந்த நிலைமையை மாற்றி அந்தச் சமாதிக்குத் துட்டகைமுனு மன்னன் எதிர்பார்த்த மரியாதையைச் செலுத்துமுகமாக நான் மேற்கூறிய ஏற்பாட்டினைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.  இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாக எல்லாத் தரப்பினர் மத்தியிலும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இவ்வாறான ஏற்பாடுகளைச் செய்தாகவேண்டிய கடமைப்பாடு இருக்கின்றதென்பதையும் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை விரும்புகின்ற அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் எதிர்பார்த்து எனது உரையை முடித்துக்கொள்கின்றேன்.

நன்றி.

10.-1-300x229

Related posts:

வரலாற்று பாடநூல்களில் தமிழர்களது உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளது! அந்நியர்களுக்கெதிராகத் தமிழர்...
காணாமல் ஆக்கப்பட்டதன் வலிகளை அவர்களின் உறவுகளே அறிவர் -  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...
மகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...