இனவாதிகளே வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, December 8th, 2017

இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்ற உண்மையான – பரிசுத்தமான எண்ணங்கள் இருக்கின்ற பௌத்த தேரர்கள், பௌத்த மக்கள் இந்த நாட்டில் நிறையவே இருக்கின்றனர். இத்தகைய நிலையில்தான், சில தீய இனவாத சக்திகளால் – குறுகிய சுயலாப நோக்குடைய அரசியல்வாதிகளால் தூண்டப்படுகின்ற சில கைக்கூலிகள் பௌத்த மக்கள் இல்லாத வடக்கு – கிழக்கு உட்பட்ட பகுதிகளில் இரவோடிரவாக புத்த பெருமானின் சிலைகளைக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்று விடுகின்றன. இது புத்த பெருமானையும், பௌத்த மதத்தையும் அவமதிக்கும் செயலாகவே நான் காணுகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைதினம் நடைபெற்ற வரவு செலவு திட்ட குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

குறித்த செயல்கள் தொடர்பில் விமர்சனங்கள் எழுகின்றபோது, ‘இந்த பௌத்த நாட்டில் வடக்கு – கிழக்கில் பௌத்த விஹாரைகள் அமைப்பதற்கு தமிழர்கள் – முஸ்லிம்கள் தடை’ என அதே இனவாத சக்திகள் பிரச்சாரம் மேற்கொள்கின்றன. இது தவறான விடயம். இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவே இந்த தீய சக்திகள் புத்த பெருமானின் சிலைகளைக் கொண்டு வந்து வைத்து விடுகின்றன என்பதுதான் உண்மையான விடயம். இவ்வாறு ஒரு மதத்தை மலினமாக்கக் கூடாது. ஒரு மதத்தின்மீது ஏனைய மதத்தினருக்கும் மதிப்பு ஏற்படுகின்ற வகையிலான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட வேண்டும் – என்றார்.
ஜூலை கலவரம் சிங்கள பௌத்த மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட இனக் கலவரம் எனக் கொள்ள முடியாது –

1983ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜூலை கலவரத்தை, இந்த நாட்டில் உள்ள சிங்கள பௌத்த மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் எனக் கொள்ள முடியாது. குறுகிய அரசியல் நோக்கங்கள் காரணமாக ஒரு சில அரசியல்வாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதியாகவே அது கருதப்பட வேண்டும். இத்தகைய அடிப்படையிலும் எமது நாட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு, பின்னர் அவை இனவாத, மதவாத மோதல்களாக உருவாக்கப்படுகின்றன.

இந்த ஜூலை கலவரத்தில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி, அவர்களைக் கொலை செய்து, அவர்களது சொத்துக்களை அழித்தவர்களை அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாகக் காணும் நான், அப்பாவித் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, காப்பாற்றிய சிங்கள மக்களை சிங்கள பௌத்த மக்களாகக் காணுகின்றேன்.

இதே மாதத்தில்தான் வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள் இடம்பெற்றிருந்தன. மொத்தமாக 72 தமிழ் அரசியல் கைதிகள் இருந்த நிலையில், அதில் 35 பேர் ஜூலை 25ஆம் திகதியும், 18 பேர் ஜூலை 27ஆம் திகதியும் கொல்லப்பட்டனர். இதில் உயிர் பிழைத்த 19 பேரில் நானும் ஒருவன். இந்த படுகொலையும் அக்கால அரசியல் நிகழ்ச்சி நிரலின் திட்டமிட்ட ஒரு சதியாகவே இருந்தது.

வருடா வருடம் சிங்களத் – தமிழ் புத்தாண்டு காலகட்டத்தில் தென் பகுதியில் ஒரு துண்டுப் பிரசுரம் சகோதர சிங்கள மக்களிடையே விநியோகிக்கப்பட்டு வருவது ஒரு வழக்கமாகிவிட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அதாவது, ‘முஸ்லிம்களது கடைகளில் பொருட்களை வாங்குவதை புறக்கணிப்போம்’ என்ற அடிப்படையில் அந்தத் துண்டுப் பிரசுரம் அமைந்திருக்கும். அந்தத் துண்டுப் பிரசுரத்தைப் பார்க்கின்றபோது, அதன் பின்னணியில் வர்த்தகர்கள் சிலர் இருப்பதையே அறிந்து கொள்ள முடியும். வர்த்தகர்களின் குறுகிய வியாபார நோக்கம் கருதி இந்தத் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டாலும், அதன் மூலமான கருத்துகள் சகோதர சிங்கள மக்கள் மத்தியில் இனவாத நஞ்சை விதைப்பதாகவே இருக்கின்றது.

குறுகிய சுயலாப அரசியலை தூக்கி எறிந்தால் நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்படாது –

குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களைத் தூக்கி எறிந்துவிட்டால், எமது நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்காது என்றே நான் கருதுகின்றேன். வடக்கையும், கிழக்கையும், தெற்கையும் சேர்த்தே கூறுகின்றேன். பொதுவாக எமது மக்களிடையே இனவாதம் என்பது கிடையாது. அது இந்த சுயலாப குறுகிய நோக்கங்கொண்ட அரசியல்வாதிகளால், சுழற்சி முறையில் எமது மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டு வருகின்றது.

எமது நாட்டில் அண்மையில் ஒரு பாராட்டத்தக்க நிகழ்வினைக் காணக்கூடியதாக இருந்தது. அத்தனகல்ல ரஜ மகா விகாரையின் பிரதம விகாராதிபதியான சங்கைக்குரிய பன்னில ஆனந்த தேரர் அவர்கள் தனது சொந்த முயற்சியினால் கம்பகா, திகாரிய அல் அஸ்கர் மகா வித்தியாலயத்தின் முஸ்லிம் மாணவர்களது நலன் கருதி ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்திருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்;கள் அதை திறந்து வைத்திருந்தார். அந்தக் கட்டிடத்திற்கு மேற்படி பாடசாலை நிர்வாகம் இந்த தேரரின் பெயரையே சூட்டியிருக்கின்றது. தேசிய நல்லிணக்கம் கருதி யாழ்பாணத்தில் இந்து மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கப் போவதாக இந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுதான் உண்மையான தேசிய நல்லிணக்கம். மேற்படிக் கட்டிடத்தை அரசாங்கம் கட்டிக் கொடுத்திருந்தால், அது தேசிய நல்லிணக்கமல்ல. அது அபிவிருத்தி.
யுத்தம் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில் யாழ்ப்பாணம் நாக விஹாரையை நாங்கள் காப்பாற்றியிருந்தோம் –

யுத்தம் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில் யாழ்ப்பாணம் நாக விஹாரையை நாங்கள் காப்பாற்றியிருந்தோம். ஒரு சிலர், இனவாத ரீதியாக அன்றி, வேறொரு தேவைக்காக அதனை சேதப்படுத்தியிருந்த நிலையில் அந்த விஹாரையை மீளப் புனரமைப்பதற்கு நான் வடக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராக இருந்தபோது நிதி உதவிகளை மேற்கொண்டிருந்தேன். கிளிநொச்சி விஹாரையும் காப்பாற்றப்பட்டிருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு, நான் அறிந்த வகையில், இலங்கையில் சுமார் 400 பௌத்த விஹாரைகள், பௌத்த தேரர்கள் இன்மை காரணமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரியவந்திருந்தது. இவ்வாறு மூடப்பட்டுள்ள விஹாரைகளின் தற்போதைய எண்ணிக்கை தெளிவாக இல்லை. இத்தகைய விஹாரைகளை மீள இயங்கவைப்பதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு, அந்தந்த பகுதிகளிலுள்ள பௌத்த மக்களுக்கு தங்களது வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வசதிகளை மேற்கொள்ள வேண்டியத் தேவைகள் இருக்கின்ற நிலையில், இது குறித்து அவதானம் செலுத்துவதற்கு இதுவரையில் எவரும் முன்வந்திராத நிலையே காணப்படுகின்றது.

மேலும் பின்தங்கிய பகுதிகளிலுள்ள பல பௌத்த விஹாரைகளின் தேரர்கள் மிகவும் கடினமானதொரு நிலையிலேயே வாழ்ந்து வருகின்றமையும் தெரியவருகின்றது. இத்தகைய நிலையினைத் தவிர்க்கும் வகையில் ‘பௌத்த புனரோதய’ – ‘பௌத்த மறுமலர்ச்சி’ நிதியம் அமைக்கப்படப் போவதாகக் கூறப்பட்டது. அந்த நிதியம் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் தனதுரையில் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன், இப்போது பௌத்த சாசனத்திற்கு மிகவும் பொருத்தமான ஓர் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றே கருதுகின்றேன். கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள். ஏனைய மதங்களையும், இனங்களiயும் பெரிதும் மதித்து செயற்படுகின்றவர். அவர் இந்த அமைச்சை மேலும் சிறப்பாகவும், தேசிய நல்லிணக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும் முன்னெடுப்பார் என நம்புகின்றேன்.

வடக்கில் உள்ள அஞ்சலகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் –

வடக்கில் தபால் நிலையங்கள் மற்றும் அவற்றின் பணியாளர்கள் எதிர்நோக்கியிருக்கின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நாம் ஏற்கனவே முன்வைத்திருந்த கோரிக்கைள் குறித்து அவதானங்களைச் செலுத்தி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் சிலவற்றை எடுத்திருப்பது குறித்து அமைச்சர் ஹலீம் அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மேலும் தீர்க்கப்படாதிருக்கும் சில தேவைகள் தொடர்பிலான கோரிக்கைகளை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

அந்த வகையில், யாழ் மாவட்டத்தில் சுன்னாகம், வட்டுக்கோட்டை, சங்கானை, கைதடி, அச்சுவேலி, காங்கேசன்துறை, பண்டதரிப்பு – மன்னார் மாவட்டத்திலே, முருங்கன், சிலாவத்துறை, வங்காலை, பேசாலை, – முல்லைத்தீவு மாவட்டத்திலே முல்லைத்தீவு, முள்ளியவலை – வவுனியா மாவட்டத்திலே, நேரியகுளம் போன்ற பகுதிகளில் செயற்பட்டு வருகின்ற தபாலகங்களுக்கும், இயக்கச்சி உப தபாலகத்திற்கும் புதிய கட்டிடங்களின் தேவை இருக்கின்றது. அத்துடன், மைலிட்டி, தையிட்டி, முகமாலை உப தபாலகங்களை மீளத் திறக்க வேண்டியத் தேவையும் உள்ளது.

யாழ்பாணம், மன்னார், வவுனியா தபாலகங்களுக்கு 30 கிலோ வோட்ஸ் சக்தி கொண்ட மூன்று மின் பிறப்பாக்கிகள் தேவையாக உள்ளன.

கிளிநொச்சி மாவட்ட தபால் திணைக்களத்திற்கு 50 தந்திக் கதிரைகள், 10 தொடர் இராக்கைகள், 15 மேசைகள், 02 நிழற் பிரதி எடுத்தல் இயந்திரங்கள், கிளிநொச்சி, பரந்தன், பூநகரி, பளை தபாலகங்களுக்கு தொலைநகல் கருவிகள், கிளிநொச்சி தபாலகத்திற்கு குழாய்க் கிணறு போன்ற தேவைகள் இருக்கின்றன.

சிறு பணியாளர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட பதிவாளர்களை – அனுபவ அடிப்படையில் நிரந்தர பணிக்கு உள்வாங்கப்படுபவர்களை நிரந்தர நியமனமாக்கல் தொடர்பில் உள்ள தவறுகளை திருத்த வேண்டியுள்ளது. அதாவது 6ஃ2006 சம்பள திட்ட மட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ள பதிவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இதனால் நீண்டகாலமாக அவர்களை நிரந்தரமாக்குவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் துரித தபால் சேவைக்கு வாகனம் ஒன்று தேவைப்படுகின்றது. தாளையடி உப தபாலகம் தபாலகமாக தரமுயர்த்தப்பட வேண்டியுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தின் கூரை நீண்டகாலமாக அதாவது, 2004 ஆம் ஆண்டிலிருந்து புனரமைக்கப்படாமல் இருப்பதால் மழை காலத்தில் ஒழுகும் நிலையில் உள்ளது. இதனைத் திருத்தியமைக்க வேண்டிய தேவை மிகவும் அவசியமாகும்.

அதே நேரம், உலக தபால் தினம் கொண்டாட ஆரம்பித்து 43வது நினைவு தினத்தை முன்னிட்டு எமது நாட்டிலுள்ள தபாலகங்களைத் தரப்படுத்தல் செய்த போது, அதில் முதலிடத்தை மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் சாவகச்சேரி தபாலகமே பெற்றுக் கொண்டுள்ளது. அந்த வகையில் சாவகச்சேரி தபாலகத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இஸ்லாமிய அறநெறிப் பாடசாலைகளின் செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

முஸ்லிம் பள்ளிவாயில்கள் தோறும் இஸ்லாமிய அறநெறிப் பாடசாலைகளின் செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். இதற்கென கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு மாதாந்த, நியாயமான ஒரு கொடுப்பனவினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

மறைந்த முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் அவர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்தவனாக, அவர் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பல்துறை ஆற்றல்களைக் கொண்டவர்களை இனங்கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பட்டங்களையும், விருதுகளையும் வருடா வருடம் வழங்கி வந்தார். அதுவொரு நல்ல முயற்சியாக இருந்தது. அத்தகைய முயற்சியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் அவர், தேசிய மீலாத் விழாக்களை வருடந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடாத்தி, அதன்போது அந்தந்த மாவட்டத்தின் முஸ்லிம்களது வரலாற்றை ஆராய்ந்து, அதனை நூல் வடிவங்களில் கொண்டு வந்திருந்தார். இந்த முயற்சியானது இந்த நாட்டில் முஸ்லிம் மக்களது வரலாற்றினை எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கின்றது. தற்போதைய எமது பாடசாலை பாடநூல்களில் இந்த நாட்டு தமிழ் – முஸ்லிம் மக்களது வரலாறுகள் மறைக்கப்பட்டும், திரிபுபடுத்தப்பட்டும் வருகின்ற நிலையில், அல்ஹாஜ் அஸ்வர் அவர்கள் மேற்கொண்ட முயற்சியை மேலும் தொடர வேண்டும்.

மேற்படி எனது கோரிக்கைகள் தொடர்பில் கௌரவ அமைச்சர் ஹலீம் அவர்கள் கவனம் செலுத்தி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பார் என நம்புகின்றேன்

சுற்றுலாப் பயணிகளின் நலன்களை முன்னிறுத்தி வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் –

சுற்றுலாத் துறையானது குறிப்பாக, அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளின் வறுமையினை ஒழிப்பதற்கும், சூழலைப் பாதுகாப்பதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கும் ஏதுவாக அமைக்கின்றது. அந்தவகையில், அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடு என்ற வகையில் எமது நாட்டுக்கு சுற்றுலாத்துறையானது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

அந்த வகையில் பார்க்கின்றபோது, இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசிய சுற்றுலாச் சந்தையின் மத்தியிலேயே எமது நாடு இருந்து வருகின்றது.

எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கேற்ற வகையிலான தேவைகளைக் கொண்டதான வசதிகளை நாம் மேம்படுத்த வேண்டியத் தேவையுள்ளது. வருடத்திற்கு 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளையாவது இலக்காகக் கொண்ட திட்டங்கள் தேவை.

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தவேண்டும் –

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் எமது சுற்றுலாத்துறையினை மேலும் மேம்படுத்தக்கூடிய தேவைகள் காணப்படுகின்றன. இயற்கை வளங்கள், தொல்லியல் அம்சங்கள், மரபுரிமை அம்சங்கள் என்ற மூவிதமான விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானமெடுக்க முடியும் என்றே கருதுகின்றேன்.

அந்தவகையில் வடக்கில் பல சுற்றுலாத் தளங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

குறிப்பாக, பூநகரி, மண்டித்தலை, கௌதாரி முனைக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் இடைப்பட்ட ஆழம் குன்றிய பரவைக்கடலை சுற்றுலாத் தளமாக மாற்றி, சுற்றுலாப் பயணிகளைக் கவரத்தக்க வகையிலான படகுச் சேவைகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும். மேலும் இப்பகுதியில் வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்து ஆலயங்களும் காணப்படுகின்றன.

ஆனையிறவுப் பாதை திறப்பதற்கு முன்பதாக தென் பகுதிக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கடல், தரை வழிப் பாதையானது யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையிலிருந்து பூநகரி, மண்டித்தலை ஊடாக மாந்தோட்டம் சென்று, அங்கிருந்து அனுராதபுரம் ஊடாக தென் பகுதி நோக்கியதாக இருந்துள்ளது. இந்த கடற்கரைப் பகுதியானது சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரக்கூடியது. இந்தப் பகுதி குறித்த வர்ணனைகளை ‘கோகுல சந்தேசய’வில் காணலாம்.

புத்தூர் நிலாவறைக் கிணறு, வண்ணார்பண்ணை வில்லூன்றி தீர்த்தக் கேணி என்பனவும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய இடங்களாக மேலும் மேம்பாட்டுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய இடங்களாகும். இராமாயணம் கூறுகின்ற வரலாற்றுடன் தொடர்புடைய இடங்களாக இவை காணப்படுவதாக எமது வரலாற்று பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

நல்லூர் நகுலேஸ்வரம், மாவிட்டபுரம் பறாளை விநாயகர், வல்லிபுரம் வி~;ணு கோவில், சட்டநாதர் கோவில், வீரமாகாளி அம்மன் கோவில் போன்ற வரலாற்று ஆலயங்களையும், கந்தரோடை மற்றும் நெடுந்தீவுப் பகுதிகளில் காணப்படுகின்ற பௌத்த ஸதூபிகளைக் கொண்ட இடங்களையும்,

சாட்டி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் காணப்படும் பழைமைவாய்ந்த மசூதிகளையும், நல்லூர் மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி போன்ற வரலாற்று மையங்களையும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் மேலும் மேம்படுத்த வேண்டும்.

மேற்படி இடங்கள் அபிவிருத்தி செய்யப்படாதுள்ள நிலையிலும், வடக்கு நோக்கி வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களுக்குச் செல்வதை வழமையாகக் காணக்கூடியதாகவே இருக்கின்றது.

எமது மக்;களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதற்காக நாம்; உழைத்து வருகின்றோம்.

வடக்கில் சுற்றுலாத்துறை வளர்ச்சி பற்றி நான் கோரிக்கைகளை விடுக்கும் போதெல்லாம், ‘நாங்கள் அபிவிருத்தி செய்யத் தயார். ஆனால் வடக்கு மாகாண சபையின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை’ என அவர் கூறுவது உண்டு. உண்மைதான், இந்த சபையில் பல அமைச்சர்கள் அந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். இத்தைகயதொரு துரதிர்ஸ்டவசமான நிலை எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எமது பகுதிகள் முன்னேற வேண்டும். எமது மக்களின் வாழ்வாதாரங்கள் உயர வேண்டும். எமது மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிட்ட வேண்டும். எமது மக்கள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடைந்து சொந்தக் கால்களில் எழுந்து நிற்க வேண்டும் என்பதற்காகவே நான் தொடர்ந்தும் இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றேன். அந்தக் கோரிக்கைகள் செயற்பாடுகளைக் காணுகின்றபோது எமது மக்களுக்காக மகிழ்ச்சியடைகின்றேன். இந்த மனோபாவம் ஏனைய தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளிடம் இல்லாத நிலை காரணமாகவே எமது மக்களுக்கு இந்தளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

எமது மக்;களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதற்காக நாங்கள் உழைத்து வருகின்றோம். எமது மக்களின் பிரச்சினைகள் தீரக்கூடாது என்பதற்காகவே அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் உரிமைக்காக உழைத்துக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், உண்மையில், தமிழ் மக்களின் வறுமைக்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலை தொடராது என்றே நான் நினைக்கின்றேன். எமது மக்கள் அதற்கு இனிமேலும் இடங்கொடுக்க மாட்டார்கள் என்றே தற்போதைய நிலவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தயை சுயலாப அரசியல் பிழைப்பாளர்களை ஓரங்கட்டிவிட்டு, எமது மக்களுக்கும், எமது பகுதிகளுக்கும் உழைக்கின்றவர்களை தங்களது பிரதிநிதிகளாக்குவதற்கு எமது மக்கள் தயாராகிவிட்டார்கள் என்றே தெரிய வருகின்றது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டி

விஞ்ஞான தொழில் நுட்பத்துறையை பாடசாலை மட்டங்களிலிருந்து மிகுந்த நுட்பத்துடன் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஞ்ஞான தொழில் நுட்பத்துறை என்பது இன்றைய உலகில் இன்றிமையாத ஒரு விடயமாக மாற்றம் பெற்றுள்ளது. இதனை நாம் பாடசாலை மட்டங்களிலிருந்து, மிகுந்த நுட்பத்துடன் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில், இதற்கான நடவடிக்கைகளை இந்த அமைச்சு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கின்றேன்.
குறிப்பாக, இன்றைய நிலையில் எமது நாட்டில் விஞ்ஞான, தொழில்நுட்பப் பாடங்களை பாடசாலைகளில் கற்பிப்பதற்கான பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பற்றாக் குறை நிலவுவதை நாம் நன்கறிவோம்.
ஆகவே, இந்த நிலையை தொடர்ந்து எமது நாட்டில் நீடிக்க விடாமல், இப்போதிருந்தே அதற்கான அடித்தளமாக பாடசாலை மட்டங்களில் இருந்தே விஞ்ஞான தொழில்நுட்பப் பாடங்களை பயிற்றுவிக்கக் கூடிய திட்டங்களை கல்வி அமைச்சுடன் இணைந்து கௌரவ அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள் இந்த அமைச்சின் ஊடாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என நான் நம்புகின்றேன்.
இதற்கு வசதியாகப் பல பாடசாலைகளில் விஞ்ஞான தொழில்நுட்ப கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த வசதிகளை கொண்டிராத பாடசாலைகளுக்கும் அந்த வசதிகளைக் கல்வி அமைச்சு ஏற்படுத்திக் கொடுக்க முன்வருவது அவசியமாகும்.
அதே நேரம், மாணவர்களை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பாடங்களின்பால் ஈர்ப்பதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும், சிறந்த அறிவும், ஆற்றலும், அக்கறையும் உள்ள அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள் மேற்கொள்வார்கள் என நம்புகின்றேன்.
பல்கலைக்கழக மட்டங்களிலும் இந்த விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளைப் பரவலாக்க முடியுமென நான் நம்புகின்றேன். அதற்கான வளங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கும் பட்சத்தில் பல்கலைக்கழக மட்டங்களில் இந்த முயற்சிகளை முன்னெடுக்க முடியுமென நான் எதிர்பார்க்கின்றேன்.

“விதாதா” என்ற சொற்பதத்தை; தமிழிலும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் –
தற்போது நாட்டில் “விதாதா வள” நிலையங்கள் பரவலாக அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றின் மூலமான பயன்பாடு எமது மக்களுக்கு உரிய வகையிலும், போதுமானதாகவும் கிடைக்கின்றனவா? என்பது தொடர்பில் தொடர் கண்காணிப்புக்களை மேற்கொள்வது அவசியமாகும்.
அத்துடன், “விதாதா வள” நிலையங்களில் பணியாற்றுகின்ற அதிகாரிகளுக்கு மாறி வருகின்ற உலகில், அடிக்கடி மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நவீன தொழில் நுட்பங்களையும் பயிற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்,
அதே நேரம், இங்கு பெற்றுக் கொள்ளக் கூடிய பயன்பாடுகள் தொடர்பில் மக்களுக்குப் போதிய தெளிவை உண்டு பண்ணக்கூடிய வகையில், பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்தச் சந்தர்ப்பத்திலே நான் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

“விதாதா” என்ற சொற்பதத்தை தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மத்தியில் தமிழில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மொழி புரியாத காரணங்களும் எமது மக்கள் மத்தியில் இவ்வாறான பயனுள்ள திட்டங்கள் சென்றடைவதில் தடைகளை ஏற்படுத்துகின்றன. இதனைக் கௌரவ அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.
விவசாயத்துறை நவீனமயப்படுத்தப்பட வேண்டும் –
நாட்டில் விவசாயத்துறை சார்ந்து பல்வேறு நவீன தொழில்நுட்ப அறிவினை வழங்குவதனை இந்த அமைச்சு மேலும் விரிவுபடுத்த வேண்டும். அதனூடாக எமது நாட்டின் விவசாயத்துறை உற்பத்திகளை மேலும் அதிகரிப்பதற்கும், வளப் பயன்பாடுகள் மற்றும் உற்பத்தி செலவினங்களைக் குறைப்பதற்கும் ஏதுவாக அமையும் என நம்புகின்றேன்.
அதே நேரம், புதிய கண்டு பிடிப்புகள் தொடர்பில் எமது மாணவர்களிடையே நல்ல திறமைகள் காணப்படுகின்றன. மாணவர்கள் மட்டத்தில் மட்டுமல்லாது, பல தரப்பினர் மத்தியிலும் இத் திறமைகளை நாம் கண்டு வருகின்றோம். அண்மையில்கூட மரவள்ளி மற்றும் சோளம் போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு சொப்பிங் பேக்குகள் தயாரிக்கின்ற ஒருவரது திறமை பற்றிய தகவல்கள் வெளிவந்திருந்தன. இவ்வாறானவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் வலுவுள்ள திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்த அமைச்சு அதிக அக்கறை கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:


தீர்க்கப்படாமல் இருக்கின்ற எமது மக்களின்  பிரச்சினைகள் யாவும் எதிர்வரும் காலங்களில் விரைந்தும் தீர்க...
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் - டக்ளஸ் எம்.பி. அஞ்ச...
கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!